கோதைக்கு அன்று நிறைய வேலை இருந்தது. அதுபோக திடீரென்று ஒரு பிரைட் புக்கிங் வேறு வந்தது. ரீதா வேறு ஒரு புக்கிங்கிற்கு சென்றுருந்தாள்.
அதனால் கோதையிடம் வந்த ஹரிஷ், “நாளைக்கு ஒரு பிரைட் புக்கிங் இருக்கு கொடைக்கானல்ல. ரீதாவுக்கு இங்கே புக்கிங் இருக்கு, அதனால நீ தான் கொடைக்கானல் கிளம்பணும்” என்று அதிகாரமாகச் கூறிவிட்டுச் சென்று விட்டான்.
கோதை வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்தில் இன்று தான் ஹரிஷ் அவளிடம் வந்து பேசுகிறான். “சார், கொடைக்கானலா, வேற யாரையாவது போகச் சொல்லுங்க. எனக்கு அவுட்டோர் புக்கிங் வேண்டாம் சார்” என்று பொறுமையாக மறுத்தாள்.
வாழ்க்கை அவளுக்கு கொடுத்த அடி அவளை அத்தனை முதிர்ச்சியாக்கி பொறுப்பானவளாக்கி இருந்தது…
“எனக்கும் உன்னை கூப்பிடணும்னு ஆசை இல்லை. ஆனா நீ மட்டும் தான் இருக்க, அன்ட் மோர் ஓவர் நீ இங்க சம்பளத்துக்கு வேலை பார்க்குற. நான் சொல்றதை நீ கேட்டுத் தான் ஆகணும்” என்று அவளைத் திமிராகப் பார்த்தான் ஷரிஷ்.
“சரி சார், எனக்கு டிரெயின் டிக்கெட் போட்டு குடுத்திருங்க, நான் கிளம்பிடுறேன். அப்புறம் அக்கமோடேஷன் இருக்கும் தானே?” என்று தன் சந்தேகத்தை கேட்டுக் கொண்டாள்.
அதற்கு எதற்குமே பதில் சொல்லாத ஹரிஷ், “ரெண்டு நாளுக்கு உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இங்க ஈவ்னிங் அஞ்சு மணிக்கு இருக்கிற மாதிரி வா, அப்புறம் நான் நீ எப்படி போகணும்னு சொல்றேன்” என்று அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான் ஹரிஷ்.
போகும் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் மாலை மூன்று மணி அளவில் தன் வீட்டிற்குச் சென்றாள்.
“என்ன கோதை சீக்கிரம் வந்துட்ட ஏதாவது பிரச்சனையா?” என்று கவலையாகக் கேட்ட தாயிடம், “அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா… அது வந்து நாளைக்கு ஒரு பிரைட் கல்யாணம் கொடைக்கானல்ல இருக்கு மா. அதுக்கு என்னை போக சொல்லிருக்காங்க. அதனால ரெண்டு நாள் அங்க தங்க வேண்டி வரும் மா” என்று தயங்கியவள்,
“கவலைப்படாதீங்க மா, நான் பத்திரமாகத் தான் இருப்பேன். என்னோட கம்பெனில கொடுக்குற அக்கமோடேஷன் ரொம்ப பாதுகாப்பாகத் தான் இருக்கும். அதுவும் இல்லாம இந்த மாதிரி வெளியூருக்கு போயிட்டு வந்தா அதிகப்படியான அல்லோவன்ஸ் தருவாங்க அம்மா” என்று தன் தாயின் கையைப் பிடித்துத் தைரியம் சொன்னாள்.
“மைதிலி, இவ ஏற்கனவே குடும்பத்தை ரோட்ல நிறுத்திட்டா… இப்போ எவன் கூட ஊர் சுத்த போறாளாம்?” என்று அங்கு அமர்ந்து இருந்த விஜயகுமார் கடுப்புடன் பேசினார். இதைக் கேட்ட கோதை சுக்கு நூறாக உடைந்தாள்.
“ஏங்க உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? முதல்ல அவளை செல்லம் கொடுத்து கெடுத்தீங்க. இப்போ அவளே தப்பை உணர்ந்து வாழும் போது அவ கிட்ட முகம் கொடுத்து பேசுறது தான் இல்லை. ஆனா அவளோட குணத்தை மட்டம் தட்டுறீங்க, நீங்க எல்லாம் ஒரு அப்பாவா?” என்று கத்தினார் மைதிலி.
“அம்மா விடுங்க, எனக்காக நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம். நான் கிளம்பணும் மா” என்று உள்ளேச் சென்று கதவைச் சாத்திக்கொண்ட கோதை தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
***
“வனிதாவை உள்ளே அனுப்புங்க” என்று காலை கட் செய்த வம்சி இறுக்கமாகவே இருந்தான். வேகமாக வம்சி அறைக்குள் நுழைந்த வனிதா, “உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா? ராதையோட பாட்டி இறந்துட்டாங்க, அது ராதைக்குத் தெரியுமா தெரியாதா சொல்லுங்க…?” என்று ஆதங்கமாக கேட்டவளிடம்,
“ஹேவ் சம் வாட்டர்” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்த வனிதா, மூச்சு வாங்கப் பேசியதால் அவள் முன் டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தாள். தண்ணீர் குடிக்கும் போதே அவளின் குமுறலும் அடங்கியது.
“ஏன் சார், எனக்கு தெரிஞ்சு நீங்க ராதைக்கு இன்னும் விஷயத்தைச் சொல்லலைனு தான் நான் நினைக்குறேன்” என கரகரத்த குரலில் சொன்னாள்.
“ம்ம் ஆமா வனிதா, நான் இன்னும் ராதைக்கு அவளோட பாட்டி இறந்த விஷயத்தை சொல்லல. அவளுக்கு இந்த விஷயம் இப்போதைக்கு தெரிய வேண்டாம். நான் சொல்றது எல்லாமே அவளோட நல்லதுக்காக தான்” என்று அழுத்தமாகக் கூறினான் வம்சி.
“என்ன சார் நீங்க! அவளுக்கு விருப்பம் இல்லாம தாலி கட்டி அவளை இழுத்துட்டு போய்ட்டீங்க. இப்போ அவள் எங்க இருக்குறான்னு கூடத் தெரியல. அவளை என்ன பண்ணீங்க?” என்று ஆவேசப்பட்டாள் வனிதா.
“ஸ்டாப் இட் வனிதா… என்னவோ நான் அவளை விருப்பம் இல்லாம கெடுத்த மாதிரி பேசுற. அவளை தாலி கட்டி அவளை என்னோட வீட்டுல மனைவியா தான் வெச்சிருக்கேன்” என்று சத்தத்தை உயர்த்தினான்.
“என்னமோ நீங்க அவளைக் காதலிச்சு கல்யாணம் செஞ்சது போல பேசுறீங்க? நியாயமா பார்த்தா ராதைக்கு இப்போ பிரகாஷ் அத்தான் தான் தாலி கட்டி இருந்திருக்கணும்… அவர் தான் ராதையை அவ்வளவு உண்மையா காதலிச்சாரு. அவருக்கு மட்டும் ராதை உங்ககிட்ட தான் இருக்கானு தெரிஞ்சா…” என்று அவள் முடிப்பதற்குள்,
“உன் பிரகாஷ் அத்தானால இப்போ ஒன்னும் கிழிக்க முடியாது. நீ அவன்கிட்ட சொல்லு இல்லை அவனை என் வீட்டுக்கு கூட கூட்டிட்டு வா. அவன் என்ன பண்றான்னு நானும் பாத்துடுறேன். இப்போ நீ வெளியே போ” என்று அதட்டினான்.
வனிதாவும் இவனிடம் பேசி இனி பிரோயஜனம் இல்லை என்று கிளம்பினாள்.
அவள் கிளம்பிய பின், ‘பொண்ணா இவ பஜாரி’ என்று வனிதாவைப் பற்றி மனதில் நினைத்தவன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.
கஃபேவில் காஃபி குடித்து விட்டு ராதை எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் போன் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த கஃபே வெண்டர் ராதையிடம், “வம்சி சார் உங்க கிட்ட பேசணுமாம்” என்று தன் ஃபோனை கொடுத்தான்.
அவன், “காலையில நான் காரை நிறுத்தின இடத்துக்கு வா” என்றபடி கால்லை கட் செய்து விட்டான்.
அவன் சொன்னது போல வந்த ராதை காரில் ஏறிக்கொள்ள, அவள் காரில் ஏறியதும் அது வேகமாகச் சென்றது. வம்சியின் புறம் அடிக்கடி திரும்பிய ராதை ஏதோ பேச வாயை எடுத்து பின் அமைதியாகத் திரும்பி விட்டாள்.
“என்ன பேசணும்?” என்று அவளைப் பார்க்காமலே கேட்டவனிடம், “எனக்கு ஒரு செல் ஃபோன் வேணும், நான் பாட்டி கிட்டயாவது ஒரு தடவை பேசணும்… அவங்க என்னை நினைச்சு ரொம்ப கவலையா இருப்பாங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் போது காரை சடன் பிரேக் போட்டான் வம்சி.
கார் ஸ்டீரீங்கில் அழுத்தத்தைக் கொடுத்தவன், “கொஞ்ச நாள் ஆகட்டும்” என்று பொறுமையாக அவளின் முகத்தைப் பார்த்துக் கூறினான்.
“அட்லீஸ்ட் உங்களோட ஃபோன்ல இருந்தாவது ஒரு தடவை பேசிக்கிறேனே” என்று அவள் கெஞ்சி முடிக்கும் பொழுதே, அவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது.
இம்முறை அவள் கண்களில் கண்ணீரைக் கண்டவனின் மனம் உருகியது. அவளின் கன்னங்களைத் தன்னுடைய இரு கைகளிலும் ஏந்தியவன், அவளை காதலோடு பார்த்தான். ராதைக்கு அவனின் பார்வை ஏதோ அபாய ஒலியை உணர்த்தியது.
வம்சியோ மெல்ல அவளை நெருங்கினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்று யூகித்த ராதை சட்டென்று தான் உட்கார்ந்திருந்த பக்க கதவை திறந்து விட்டாள்.
அவளின் இந்தச் செயல் வம்சிக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. அப்படி என்ன இவள் அவள் கணவனிடம் அவளுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறாள் என்று மனதில் காட்டமாக ஓடிக் கொண்டிருந்தது.
கோபத்தின் பிரதிபலிப்பாய் அவள் கோபத்துடன் உதறியவன் அவள் பிடித்திருந்த கதவை பிடித்து இழுத்து வேகமாக சாற்றிவிட்டு, காரை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.
அவனின் இந்த வேகம் ராதைக்கு பயத்தைக் கிளப்பியது. ‘இவன் சும்மாவே கோபப்படுவான் இப்போ சுரண்டி வேற விட்டுட்டோமே’ என்று தவித்தவளின் மனது பந்தயக் குதிரை போல் பயத்துடன் குதித்தது.
***
