“உங்களுக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அபிஷேக். நாங்க சிசிடிவி புட்டேஜ் பார்த்தோம். வண்டி ஓட்டிட்டு போன பொண்ணு தான் தப்பா ஓட்டிருக்கா… பின்னாடி என்ன வண்டி வருதுனு தெரியாம கதை பேசிட்டு ரைட் சைட்ல போனவங்க, ஒரு இன்டிகேட்டர் கூட போடாம திடீர்னு லெஃப்ட் சைட் திரும்பிட்டாங்க, அதுவும் வேகமா வந்ததுனால தான் இவ்வளவு பிரச்சனை. நீங்கள் கிளம்புங்க சார் நான் பார்த்துக்குறேன்னு என்னை அனுப்பி வைச்சாரு.”
“ஆனாலும் என் மறசு ஆறல. நான் அந்தப் பெண்ணை கண்காணிக்க ஆரம்பிச்சேன். அவளோட பேர் அனிதா… அவளோட அம்மா சர்மிளா, விக்ரம் ராவ்வோட முறை இல்லாத பொண்டாட்டினு தெரிஞ்சுக்கிட்டேன். விக்ரம் ராவ் ஒரு வக்கீல். அவருக்கு முறையான மனைவி பாயல் இருக்காங்க.. பிரணவ்னு ஒரு பையன் இருக்கான். அனிதா பிறந்து மூனு மாசம் கழிச்சு தான் பிரணவே பிறந்துருக்கான்” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, ‘பிரணவ்… இந்த பெயர் எங்கேயோ தெரிஞ்ச மாதிரி இருக்கே?’ என்று யோசிக்கத் தொடங்கினாள் ராதை.
“அனிதாவோட அம்மா இறந்த அப்புறம் அவள் குடி, போதை மருந்துக்கு எல்லாம் அடிமை ஆகிட்டா…. அனிதா அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது ராதை, அவளுக்கு விக்ரம் ராவ்வைப் பிடிக்காது. தன்னோட அம்மா இறந்த அப்புறம் தனக்குனு யாரும் இல்லைனு இந்த நிலைமைக்கு ஆகிட்டா.”
“நான் அனிதாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். ஆனா இந்த உலகத்துல அவ அப்பாக்கு அப்புறம் அவ வெறுக்குற ஆம்பளைன்னா அது நான் தான்! அவக்கிட்ட பேச எவ்வளவோ முயற்சி செஞ்சேன். அவ ஆபிஸ்க்கு கூட வந்தேன்.. அன்னிக்கு அவ கேபின்ல நான் பேசிக்கிட்டு இருக்கும் போது தான் இந்த கோவா கான்பரன்ஸ் பத்தி நீ வந்து பேசுன. அதை பிடிச்சிக்குட்டு இந்த கான்பரன்ஸிற்கு அப்ளை பண்ணி நானும் வந்துட்டேன் அனிதாகிட்ட என் காதலை சொல்றதுக்காக…” என்றபடி பெருமூச்சு விட்டான்.
“அப்போ நீங்க இன்னும் உங்களோட காதலை சொல்லலையா?” என்று கதையைக் கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்த ராதையிடம், “ம்ம் அன்னிக்கு நான் அவளை ஆபிஸ்ல பார்க்க வந்த போது தான் அவகிட்ட நடந்த விபத்துக்கு மன்னிப்பு கேட்க வந்தேன். ஒரு வருஷம் மேல ஆகிடுச்சு கொஞ்சமாவது கோபம் குறைஞ்சு இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா அவள் எரிமலை போல கொதிச்சிட்டா!” என்று கையை விரித்தான்.
ராதைக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. அவன் கண்ணில் அனிதாவின் மேல் உண்மையான காதல் தெரிந்தது.
‘ஆனா, இப்போ அனிதாவும் வம்சியும் கல்யாணம் செஞ்சுக்க போறாங்களே… அப்போ என்னைப் போல் இவருக்கும் காதல் தோல்வியா?’ என்று மனதில் தன்னை மீறி நினைக்கும் போதே, ‘ச்ச என்ன இது, என் மனசுல காதல் தோல்வினு லாம் நினைப்பு வருது? வம்சியோட மனசுல தானே நான் இருந்தேன். ஆனால் என்னோட மனசுல யாரும் இல்லையே. அப்போ ஏன் இப்படி எல்லாம் எண்ணம் வருது?’ என்று மனதில் தன்னையே கடிந்து கொண்டாள்.
இப்போது அபிஷேக்கிடம் திரும்பி, “சார், உங்கள் காதல் எனக்குப் புரியுது. ஆனா அனிதா மேடமுக்கு உங்களைப் பிடிக்கல. அதுவும் இல்லாம அவங்களுக்கு வேற யாருடனாவது கல்யாணம் முடிவாகி இருந்தால்…” என்று இழுத்தாள்.
“அவளுக்கு யார் கூட கல்யாணம் முடிவாகி இருந்தாலும், என் காதல் உண்மை. அது அவளை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடும்!” என்று நம்பிக்கையோடு கூறினான்.
தூரத்தில் இருந்து வந்துக் கொண்டிருந்த அனிதாவோ இவர்களைக் கண்டு, ராதையை முறைத்துக்கொண்டே தான் வந்தாள்.
“உனக்கு மேனர்ஸ் கொஞ்சம் கூட இல்லயா ராதை? நீ ஒரு திறமையான பொண்ணுனு நினைச்சு தான் உன்னை இந்த கான்பரன்ஸுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனா நீ நம்மளோட கம்பெனியை அவமானப் படுத்திட்ட. இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் நீ” என கடுப்பானவளோ அபிஷேக்கை முறைத்தாள்.
“உனக்கு என்ன தான் வேணும்? ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற?” என்று கத்தினாள் அவனிடம்.
“நான் உன்னை காதலிக்குறேன் அனிதா… உன்னை என்னோட மனைவி ஆக்க ஆசைப்படுறேன். உன்னோட அம்மாவோட மரணத்துக்காக மட்டும் நான் உன்னை காதலிக்குறேன்னு நினைக்காதே, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சி இருக்கு” என்று சொன்னவனோ அடுத்த நொடியே வேகமாக ஹோட்டலை நோக்கி நடந்தான்.
அவன் செல்வதைக் கடுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த அனிதா இப்போது ராதையிடம் சீறினாள். “எல்லாம் உன்னால தான். உன்னை நான் இங்க கூட்டிக்கிட்டு வந்தது தான் நான் பண்ண பெரிய தப்பு” என்று கடுகடுத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்றாள்.
தனிமையில் நின்ற ராதைக்கு ஆதரவாய் இருந்தது, அந்த குளிர்ந்த காற்றும் கடலும் மட்டும் தான்.
அப்படியே மணலில் உட்கார்ந்தவளின் மனம் அங்கு இல்லை. தன் மொபைலில் தன்னுடைய பெரியம்மா மைதிலி கால் செய்துக் கொண்டிருந்ததையும் அவள் இருந்த நிலையில் கண்டுகொள்ளவில்லை.
வெறுமையான இந்த வாழ்க்கையில் தாம் இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்…! என்று நினைத்தவளின் பக்கத்தில் ஆள் ஒருவர் உட்கார்ந்து இருப்பது போல் தோன்றவே, திரும்பியவளின் பக்கத்தில் அமர்ந்திருந்தான் அவளுடைய நினைவுகளின் நாயகன் வம்சி.
‘பண்றதை எல்லாம் பண்ணிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி இங்க வந்து உட்கார்ந்திருக்கான்’ என்று மனதில் நினைத்து வெறித்தவளின் கண்களை நேராக நோக்கி, “மணி நைட் ஒன்பது ஆகப் போகுது ராதை, யாரை பழிவாங்க நினைச்சு இப்போ உன்னோட பாதுகாப்பை மறந்து, இரவு ஒன்பது மணி ஆகியும் தனியா உட்கார்ந்திருக்க?” என்று கேள்வி எழுப்பியவனை அதிர்ச்சியாய் கண்டவள், அப்போது தான் தன் கை கடிகாரத்தைப் பார்த்தாள்.
‘மணி ஒன்போது ஆகிடுச்சே, எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கோம்’ என்று தன்னையே மனதில் திட்டியவள், வேகமாக எழ முற்பட அவளின் கையைப் பிடித்தான் வம்சி.
“கையை விடுங்க… என்னை தொடுறதுக்கு இனி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றாள் கோபம் கலந்த கரகரத்த குரலுடன்.
“ஓ முன்னாடி மட்டும் உன்னைத் தொடுறதுக்கு உரிமை கொடுத்த மாதிரி பேசுற, கொஞ்சம் சீன் கிரியேட் பண்ணாம அமைதியாக இரு. அங்க போலீஸ் நிக்குறாங்க. அதனால தான் கையைப் பிடிச்சேன் பேசாமல் வா” என்று அவளின் கையை அழுத்தமாய்ப் பற்றியவன் அவளை தன்னோடு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தான்.
“ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ சார்… இந்த டைம்ல உங்களுக்கு இங்க என்ன வேலை?” என்று ஹிந்தியில் பேசிக்கொண்டு வந்த காவலர்களிடம், தன் பண பலத்தைக் காட்டி அவர்களை பேச விடாமல் செய்வான் என்று நினைத்த ராதைக்கு பேரதிர்ச்சி தருவதாய்,
“நாங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். வெகெஷன்க்கு இங்க வந்தோம்.. இதோ பக்கத்துல இருக்குற ரிசார்ட்ல தான் தங்கி இருக்கோம்” என்று அவர்களிடம் நிமிர்வாக கூறிவிட்டு, ராதை தன்னை அதிர்ச்சியாய் பார்ப்பதையும் கண்டுக் கொள்ளாமல் அவனோடு அழைத்துச் சென்றான் வம்சி.
ரிசார்ட் வாசல் வரும் வரை வம்சி ராதையிடம் எதுவும் பேசவில்லை. வாசல் வரை வந்தவுடன் அவளின் கையை விடுவித்தவன், “யார் என்ன பண்ணாலும் நீ நீயா இரு ராதை. உன்னை நான் முதன் முதல்ல ஊட்டியில பார்த்த போது இருந்த ராதை இப்போ இல்லை. எந்த விஷயம் செஞ்சாலும் அதை பிடிச்சு பண்ணு, பிடிக்காத ஒன்றை உனக்கு திணிக்காத” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளேச் சென்று விட்டவனை குழப்பமாகப் பார்த்தாள் ராதை.
அவள் அறைக்கு வரும் போது அங்கு அனிதா இல்லை. பேசாமல் சாப்பாட்டை வரவழைத்து, உறங்கி விடலாம் என்று நினைத்தவள் முதலில் குளித்துவிட்டு தன் உடையை மாற்றினாள்.
இன்று இரவு ஹோட்டலை இன்ஸ்பெக்ஷன் செய்வதற்காக ஒவ்வொரு தளத்திற்கும் சென்றிருந்தான் வம்சி. அவனைத் தேடி வந்த அனிதாவோ, “வம்சி உன்னை எங்கெல்லாம் தேடுறது? சரி எதுக்கு ராதையை கான்பரன்ஸ்ல அவமானப் படுத்தின?” என்று கேட்டவளை முறைத்த வம்சி, “அவளுக்கு அவள் போட்ட டிரெஸ் பிடிக்கவே இல்லை. பிடிக்காம அதை எதுக்கு போடணும்?”
“நான் அவளோட எம்டி. நான் சொல்றதை அவ கேட்டுத் தான் ஆகணும்” என்றவளை அலட்சியமாகப் பார்த்தவன்,
“ராதை எப்போவுமே தைரியமா இருந்ததில்லை. முன்னாடி பயந்தாவது அவளுக்குப் பிடிக்காததை எதிர்ப்பாள். ஆனா இப்போது அவளுக்குள்ள ஏதோ ஒரு வெறுமை இருக்கு…” என்று குழம்பினான்.
“ம்ம்… அவ அப்போ அபிஷேக் கூட பேசுனது தான் உங்களுக்கு பிரச்சனை?” என்றாள் அனிதா.
“ம்ம் எஸ்… அவளுக்கு என்னை பிடிக்கலைனாலும் அவள் என்னோட பொண்டாட்டி. அவள் இன்னொருத்தன் கிட்ட பேசுறதை என்னால எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்” என்றவன்,
மேலும், “அபிஷேக் உன்னை காதலிக்குறான், உனக்காகத் தான் இங்க வந்திருக்கான். எல்லாமே எனக்குத் தெரியும் அனிதா… நீ அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் சொல்லல. ஆனால் நீ அவனை கல்யாணம் பண்ணினால் உன்னை காதலிப்பான்” என்று கூறிவிட்டு அவன் அறைக்குள் அவன் செல்லும் போதே அங்கு இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் ராதை.
அந்த இரவில் தன் அறையில் ராதை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வம்சி அசையாமல் நின்றான். தன் கண்ணில் வழிந்த கண்ணீரோடு வம்சியைப் பார்த்த ராதை, “நான் உங்க கிட்ட பேசணும்” என்றாள் கெஞ்சுதலாக.
***
