அத்தியாயம் 51

பெங்களூர் வந்த வம்சி வீட்டிற்கு வந்தபின்னர் அவனை முதலில் கண்டது அவனுடைய தாத்தா, பாட்டி தான்.

 

“வம்சி வீட்டுக்கு வர அஞ்சு நாள் ஆகும்னு சொன்னியேப்பா சீக்கிரம் வந்துட்ட?” என்ற தாத்தாவிடம், “போன வேலை முடிஞ்சுது தாத்தா” என்று மெலிதாக சிரித்தவன், ராதையைப் பற்றி கூறி இவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. “யசோ பேசுனாளா பாட்டி?” என்று பேச்சை மாற்றியவன் குளிக்கச் சென்று விட்டான். 

 

வம்சியின் குரல் கேட்டு ஆவலாக வந்த லட்சுமி தன் மாமனார், மாமனாரிடம், “வேதந்த் வந்துட்டானா அத்தை… அவன் குரல் கேட்டுதே எனக்கு” என்று ஏக்கமாக தன் மகனைத் தேடிய மருமகளைப் பார்க்க பெரியவர்களுக்குமே பாவமாகத் தான் இருந்தது. 

 

ராதை சென்ற பின்னர் லட்சுமியிடம் முகம் கொடுத்து பேசுவதையே நிறுத்திவிட்டான் வம்சி. தனக்குத் திருமணம் ஆன பின்பும் தன் அன்னை ஷிவானியைத் தனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தது வம்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

 

ஆனாலும் தன் தாயிடம் பேசாமல் இருப்பது பெற்றத் தாய்க்கு வருத்தம் அளிக்கும் ஒன்றுதானே. இப்போது லட்சுமியின் நிலை தன் மகனுக்குப் பிடித்த ராதையே அவனோடு சேர வேண்டும் என்று நினைத்தார். தன் மகன் தன்னிடம் பழைய வேதந்த்தாய் இருக்க வேண்டும் அது மட்டுமே அவருக்கு முதன்மையாகப் பட்டது.

 

“அத்தை நான் அடுத்த வாரம் ராதையைப் பார்க்கலாம்னு இருக்கேன். இந்த விஷயம் வேதந்த்துக்கு தெரிய வேண்டாம்” என்று அவர் கூறும் போதே, “உங்களுக்கு இது தேவை இல்லாத வேலை அம்மா, அவகிட்ட பேச என்னால உங்களை அனுமதிக்க முடியாது” என்று தீர்மானமாகக் கூறிய மகனை வெறுமையாகப் பார்த்தார். 

 

“நான் உன்னைப் பெத்த தாய் வேதந்த், உனக்கு நல்லது செய்ய தான் நினைப்பேன். அந்தப் பொண்ணு ராதைகிட்ட நான் நடந்துக்குட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்டு எங்கள் வீட்டு மருமகளா வர அவளுக்கு விருப்பம் இருக்கானு கேட்கப்போறேன்” என்று சொன்ன அன்னையிடம், 

 

“இந்த வீட்டு மருமகளா அவள் வரணும்னு நான் நினைக்கல… அவள் இங்க வந்தா வம்சியோட மனைவியா மட்டும் தான் வரணும்” என்றபடி தன் தாயை அழுத்தமாகப் பார்த்தவன், 

 

“நானும் உங்களோட வரேன். அங்க எனக்கும் ஒரு வேலை இருக்கு. நம்ம அங்க போற விஷயம் நான் சொல்ற வரை அவங்களுக்கு தெரியக்கூடாது அம்மா” என்று சொன்ன மகனை புரியாமல் பார்த்த தாய், அவன் தன்னோடு இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் என்று அமைதியாகச் சென்றுவிட்டார்.

 

ராதையை வீட்டில் விட்ட அனிதா அவளிடம் முகத்தைக் கொடுத்துக் கூட பேசவில்லை. “ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ்ல வந்து ஜாயின் பண்ணு” என்று மட்டும் சொல்லிவிட்டு அபிஷேக்குடன் விடைபெற்றாள். 

 

அபிஷேக் அனிதாவிற்காக பெங்களூரில் இருக்கும் தன் கம்பெனியை விற்று இங்கு கோயம்புத்தூரிலேயே ஒரு கம்பெனி ஆரம்பிக்க முடிவு எடுத்தவன், வீட்டில் தங்களின் திருமணம் பற்றிய தகவலைத் தெரிவித்தான். அபிஷேக் வீட்டில் அனிதாவை மறுக்காமல் அவன் பெற்றோர்கள் சந்தோஷமாக ஏற்றார்கள்.

 

இப்படியே ஒரு வாரம் நகர்ந்தது. அன்று காலை தன் காரை ஸ்டார்ட் செய்த வம்சி, “அப்பா இப்போ மைதிலி அத்தைக்கு கால் பண்ணி பேசுங்க, கோயம்புத்தூர் வரோம்னு, ஆனா நான் வரேன்னு சொல்ல வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொன்ன மகனிடம், “நீ அப்பாவா இல்லை நான் அப்பாவா டா?” என்று வெகுளியாய் கேட்டார் தந்தை. 

 

“அப்பா நீங்க தான் ப்பா. ஆனா இந்த வீட்டோட குடும்பத் தலைவன் நான் தான். அதனால நீங்க எந்த ஸ்ரெஸ்ஸும் எடுத்துக்காம நான் சொல்றதை செய்ங்க” என்று தன் கூலர்ஸை மாட்டிக்கொண்டவனை அப்பாவியாகப் பார்த்தனர் பெற்றோர்கள் இருவரும். 

 

சனிக்கிழமை என்பதால் ராதை கொஞ்சம் தாமதமாகத் தான் எழுந்தாள். அவள் எழும்போதே மைதிலிக்கும் விஜயகுமாரிற்கும் வாக்குவாதம், சண்டை போல் தோன்றியது. 

 

கோதைக்கு அன்றும் கல்லூரி என்பதால் வீட்டில் இருந்த ராதை பதற்றத்தோடு, “பெரியப்பா… பெரியம்மா… என்ன ஆச்சு, ஏன் ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க?” என்று கேட்டாள். 

 

“ராதை இவ செஞ்ச வேலை என்ன தெரியுமா? இவளோட அண்ணா இப்போ பேசினார், அவரும் அவரோட பொண்டாட்டியும் இங்க வராங்களாம். இவளும் சரினு சொல்லி கால்லை வைச்சுட்டா… இவளுக்கு நான் எவ்வளவு முறை சொன்னேன் அவங்களோடு பேசக் கூடாதுனு.. இவ என்னன்னா வீட்டுக்கே வாங்கனு உபசரிக்குறா” என்று அவர் கத்தும் போதே, 

 

“அவங்க வரேன்னு சொன்ன அப்பறம் நான் என்ன ராதை பண்ண முடியும்?” என்று புலம்பிய மைதிலியிடம் தன்னை மீறி, “எதுக்கு பெரியம்மா அவங்க இப்போ இங்க வராங்க?” என்று வம்சியை மனதில் வைத்து பயத்தில் கேட்டாள்.

 

“எனக்கு எதுவும் தெரியாதும்மா” என்று கையை விரித்த பெரியம்மாவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தன் பெரியப்பா புறம் திரும்பியவள், “சரி பெரியப்பா, அவங்க எப்படி இருந்தாலும் பெரியம்மாவோட அண்ணா, அண்ணி. அதனால் பெரியம்மாவைப் பார்க்க வரதை நீங்க தடுக்காதீங்க பெரியப்பா” என்று கெஞ்சினாள் ராதை. 

 

அவளின் தலையை வருடிய விஜயகுமாரோ, “அவங்களோட மகனால தானே ம்மா உன் வாழ்க்கையே இப்போ கேள்விக்குறியா இருக்கு” என விஜயகுமார் சீறும்போது, 

 

“ஒருவேளை அந்த கேள்விக்குறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அவங்க வராங்களோ என்னவோ?” என்று அழுத்தமாகச் சொன்ன மைதிலியை முறைத்தார் கணவர். 

 

“ஒ ஓ அப்போ நானும் அவங்களோட வாதாட தயார் தான், வரட்டும்” என்று விரைப்பாகக் கூறிச்சென்ற கணவனை வேடிக்கையாகப் பார்த்த மைதிலி ராதையிடம், “ராதை இது உன்னோட வாழ்க்கை. நீ தான் முடிவு பண்ணனும். எனக்கு தெரிஞ்சு அண்ணா, அண்ணி வரது உன்னைப் பார்க்கத் தான் இருக்கும்” என்று சொல்லும்போதே ராதையின் மனது போராட்டத்தை ஆரம்பித்தது.

 

‘அவரோட பேரண்ட்ஸ் கிட்ட தெளிவா வேற ஒரு பொண்ணை அவருக்கு கல்யாணம் செஞ்சு வைச்சிருங்க, நான் டைவர்ஸ் கொடுக்குறேன்னு சொல்லிடணும்’ என்று சொல்ல வேண்டும் என்று மனதில் பதித்தவள், குளித்துவிட்டு சாப்பிட்டு வீட்டை சுத்தம் செய்யும் போது தான் வாசலில் ஒரு விலையுயர்ந்த கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. 

 

தன் அண்ணாவை நீண்ட ஒரு வருடம் கழித்து பார்க்கப் போகிறோம் என்கிற சந்தோஷம் மைதிலியின் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. 

 

‘இவங்க இவ்வளவு சந்தோஷமாக வாசலுக்கு போறாங்களே!’ என்று வெறுமையாகப் பார்த்த ராதை, வாசலைக் கண்டுக் கொள்ளாமல் தான் செய்த வேலையிலேயே கண்ணாய் இருந்தாள். 

 

வீட்டிற்கு வந்தவர்களை வாங்க என்று அழைக்கும் பண்பாடு நம்முடனே பிறந்திருப்பதால் விஜயகுமார், “வாங்க…” என்று அழைத்த பின் ராதையும் அவர்களைப் பார்த்து, “வாங்க…” என்று அழைக்கும் போது தான் அவர்களுக்குப் பின்னால் கம்பீரமாக நடந்து வந்துக் கொண்டிருந்த வம்சியைக் கண்டு ஸ்தம்பித்து விட்டாள். 

 

தன்னுடைய கூலர்ஸைக் கழற்றி விட்டு அவனும் இவளைப் பார்க்கவும், இவளும் அவனைப் பார்க்கவும் அந்த நொடி இருவரின் கண்களிலும் வேறுபட்ட உணர்வுகள் வந்து போயின. வம்சியின் கண்ணில் கோபமும், ராதையின் கண்களில் பயமும் இருந்தது. அவனை அங்கு எதிர்பாராத ராதை அதிர்ச்சியடைய அவளின் இதயம் இப்போது படபடவென துடிக்க ஆரம்பித்தது.

 

அவ்வளவு நேரம் கம்பீரமாக இருந்த விஜயகுமார் வம்சியைக் கண்டவுடன் ஆடிப்போய்விட்டார். ‘ஐய்யோ இவன் எதுக்கு இங்க வந்தான்? இவங்க அப்பா, அம்மாகிட்ட நாலு கேள்வி கேட்கலாம்னு பார்த்தால் இவன் கூட வந்திருக்கானே… இனி எப்படி வாயை திறக்குறது?’ என்று அதிர்ந்தவர், அமைதியாய் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!