அத்தியாயம் 50

“வம்சியை ஏன் இப்படி படுத்துற ராதை, நீ சுயநினைவு இல்லாம இருந்தபோது அவர் எப்படி துடிச்சிட்டாரு தெரியுமா…? அவரை மாதிரி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும் ராதை. நான் அபிஷேக்கோட காதலை உணர்ந்த மாதிரி நீ எப்போ தான் வம்சியோட காதலை உணரப் போற?” என ஆதங்கப்பட்டாள் அனிதா. 

 

“ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, வம்சி யாருக்காகவும் எதுக்கும் அடிப்பணிய மாட்டாரு.. அப்படிப் பட்ட குணத்தைக் கொண்டவரு. அவரே நேத்து நைட் ஒரு நிமிஷம் கூட தூங்காம உனக்காக இருந்தாரு.. அதுலயும் அவர் விட்ட கண்ணீர்… உனக்கெல்லாம் அது புரியாது போடி” என்று வெறுப்பாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 

 

ராதையைப் பார்த்து பாவமாக உணர்ந்த அபிஷேக், “நீ ரெஸ்ட் எடும்மா, இன்னும் கொஞ்சம் நேரத்துல நம்ம கோயம்புத்தூர்க்கு கிளம்பணும்” என்றான். 

 

“அவர் எங்கே அபிஷேக் அண்ணா?” என்று ஏக்கத்துடன் கேட்ட ராதையைப் பார்த்த அபிஷேக், “கண் கெட்ட அப்புறம் சூரிய நமஸ்காரம் பண்றதுல பிரோயஜனம் இல்லம்மா” என்று மட்டும் கூறிவிட்டு வெளியில் சென்றவனை வெறுமையாகப் பார்த்த ராதை, ‘இவர் கூட என்னைப் புரிஞ்சுக்கலயே… என் நிலைமை யாருக்கும் வரக் வராது, வரவும் கூடாது’ என்று நினைத்தவள், காலையில் இவளை பார்க்க வரும் போது அனிதா எடுத்து வந்த தன் மொபைலை எடுத்துப் பார்த்தாள். 

 

அப்போது தான் வீட்டில் இருந்தும், வனிதாவிடம் இருந்தும் மிஸ்ட் கால்ஸ் வந்திருந்ததைக் கண்டு முதலில் தன் பெரியம்மாவிற்கு அழைத்து தான் இன்று வருவதாய் விஷயத்தைக் கூறியவள், வந்த வேலை முடிந்துவிட்டது என்று பொய்யைக் கூறிவிட்டு கால்லை வைத்துவிட்டாள். 

 

கல்யாணம் ஆன பின்னர் வனிதா, ராதைக்குப் பெரிதாக பேசவில்லை. ஒருவேளை பிரகாஷுக்கு இப்போது தன்னை பிடிக்கவில்லை என்பதால் வனிதாவும் தன்னை ஒதுக்கிவிட்டாளோ என்று நினைத்த ராதை, வனிதாவின் இல்வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் என்று மட்டும் மனமார நினைத்தாள். இப்போது ஏன் கால் செய்தாள் என்று யோசித்த ராதை வனிதாவின் நம்பருக்கு அழைத்தாள். 

 

“என்னடி எப்படி இருக்க? கால் பண்ணிருந்தியா?” என்று சோர்வாகக் கேட்ட ராதையிடம், “டி நான் இப்போ பிரெக்னெண்டா இருக்கேன். மூன்று மாசம் ஆகுது” என்று சந்தோஷமாகக் கூறினாள் வனிதா. 

 

“வாவ் செம டி… என்னுடைய வாழ்த்துகள் உங்க ரெண்டு பேருக்கும்” என்று கூறிய ராதையிடம், “அத்தான் கிட்ட உன் வாழ்த்தை நீயே சொல்லிடு டி” என்று வனிதா பிரகாஷை அழைத்தாள். 

 

‘இவ என்ன லூசாயிட்டாளா? அவர்கிட்ட நான் ஏன் பேசணும்…’ என ராதை மனதுக்குள் சங்கடப்படும் போதே, “ஹலோ ராதை, எப்படி இருக்க?” என்ற பிரகாஷின் கம்பீரமான குரல் காதில் ஒலித்ததில் தயங்கியவள், “ஹா… ஹான் நல்லா இருக்கேன் நீங்க… உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று முடித்தாள்.

 

“தாங்க்ஸ் ராதை, அப்புறம் எப்போ உன் புருஷனோடு சேர்ந்து வாழப் போற? இப்படியே தனியா வாழ்ந்துடலாம்னு நினைக்காத. கோதை ஒரு சுயநலவாதி, அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அமையலனு உன்னையும் வாழா வெட்டியா ஆக்கிடுவா” என்று அறிவுறுத்தியவன் மீது கோபம் அடைந்த ராதை அமைதியாய் இருந்தாள்.

 

வனிதாவின் கணவர் என்பதற்காக மட்டுமே அமைதி காத்த ராதையிடம், “அந்த கோதை கிட்ட சொல்லு, அவ என்ன படிச்சு கிழிச்சாலும், அவளை நான் வாழ விட மாட்டேன்னு” என பிரகாஷ் கூறி முடிக்கும் போது காலை கட் செய்தே விட்டாள் ராதை. 

 

‘இவனெல்லாம் என்ன மனுஷனோ ச்ச’ என்று நினைக்கும் போது வனிதா ராதைக்கு மறுபடியும் கால் செய்தாள். ‘ஐய்யோ கடவுளே! இது என்ன வம்பா போச்சு, இவளுக்கு கால் பண்ணாமலே இருந்திருக்கலாம்’ என்று சலிப்போடு எடுத்தவளை, “என்னடி டவர் போய்டுச்சா? பிரகாஷ் அத்தான் கட் ஆயிடுச்சுனு செல்லைக் கொடுத்துட்டாங்க” என்ற வனிதாவிடம், “ஆமாடி” என்று சமாளித்தாள். 

 

“டி அது வந்து நானும் அத்தானும் ஒரு நாள் பெங்களூர்ல ஒரு ஷாப்பிங் மால்ல உன் புருஷனைப் பார்த்தோம். ஆக்சுவலி வம்சி அண்ணா வெரி ஸ்வீட். எனக்கு அவரைப் பிடிக்காது. அவருக்கு பிரகாஷ் அத்தானைப் பிடிக்காது. ஆனாலும் எங்க இரண்டு பேரோட கல்யாண விஷயம் தெரிஞ்சு விஷ் பண்ணுனார். 

 

அப்புறம் பிரகாஷ் அத்தானும் உன் ஹஸ்பண்ட்டும் ஒரு பத்து நிமிஷம் பேசினாங்க டி. ஆக்சுவலா இரண்டு பேரும் பிரச்சனை வந்த மாதிரியே பேசல. நீ உன் வாழ்க்கையைக் கவனி. அந்த கோதை உனக்கு பண்ணது எல்லாத்தையும் மறந்துட்டியா டி, உன்னை காலம் முழுசா அங்கேயே வெச்சி யூஸ் பண்ண நினைக்குறாங்க மொத்த குடும்பமும்…” என்று சொல்லும் போது தான் ராதைக்குப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

 

“வாய மூடு வனிதா… நானும் பொறுமையா இருந்தா என்ன புருஷனும், பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் எங்களைப் பார்த்தா கோமாளி மாதிரி தெரியுதா…? என்னடா சாத்தான் வேதம் பாடுதேனு நினைச்சேன்… சோ நீங்க ரெண்டு பேரும் வம்சி கிட்ட பேசுனதால என்கிட்ட வந்து சேர அட்வைஸ் பண்றீங்க…”

 

“உங்க ரெண்டு பேர் கிட்ட நான் எந்த அட்வைஷும் கேட்க விரும்பல. எல்லாருக்குமே வம்சி என்னை எப்படி கல்யாணம் பண்ணினார்னு மறந்து போச்சா?”

 

“உனக்கு என்னடி நீ ஆசைப்பட்ட பிரகாஷை கல்யாணம் செஞ்சுகிட்ட, அந்த சந்தோஷத்துல பேசுற. கொஞ்சம் மத்தவங்க நிலையையும் யோசிச்சு பேசு. அப்படி பேச முடியலைனா நீ எனக்கு தயவுசெஞ்சு கால் பண்ணாத… கோதை அக்கா பத்தி இனி ஒரு வார்த்தை நீயும் சரி உன் புருஷனும் சரி தப்பா பேசுறதை நான் அனுமதிக்க மாட்டேன்.”

 

“என்னை யாரும் பிடிச்சு வெக்கல, நானே தான் வம்சியோட சேராமல் இருக்கேன். தயவு செஞ்சு எனக்கு இனி கால் பண்ணாத” என்று காலை கட் செய்த ராதை, அங்கு நின்றுக் கொண்டிருந்த அனிதா மற்றும் அபிஷேக்கை பார்த்த அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல், தன் கைகளைக் கட்டி உட்கார்ந்திருந்தாள். 

 

“ரியலி யூ டோன்ட் டிசர்வ் வம்சி… வம்சி முன்னாடி பயந்தாகோலியா இருக்க, மத்தவங்க கிட்ட பத்திரகாளி ஆட்டம் ஆடுற, நீயெல்லாம்… போடி” என்று கடுப்பில் பேசிய அனிதாவை ஆறுதல் படுத்தி வெளியே இருக்குமாறு கூறிவிட்டு, ராதையின் பக்கத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் அபிஷேக்.

 

“ராதை, நான் உன் பக்கம் வம்சி பக்கம்னு இப்போ பேச வரல. ஆனா உனக்கு ஏன் வம்சி மேல பிடித்தம், காதல் இல்லைனு நான் தெரிஞ்சுக்கலாமா? என்னை உன் அண்ணாவா நினைச்சா சொல்லு” என்று கேட்டான்.

 

“அண்ணா, வம்சி என்னை ஒன்னும் முறைப்படி கல்யாணம் செய்யல. நான் இன்னொருவருக்கு நிச்சயம் ஆக வேண்டிய பொண்ணு, வம்சி என்னைக் கல்யாணம் பண்ணின விளைவு… பிரகாஷ் எங்களோட தொழிலைக் கைப்பற்றிட்டாரு. அந்த அதிர்ச்சியில பாட்டி இறந்தாங்க… எனக்கு அந்த விஷயத்தையும் வம்சி சொல்லல… என் பெரியப்பா குடும்பம் இப்போ ஏழை ஆகிட்டாங்க… இதுக்கு காரணமான வம்சி கூட நான் எப்படி சந்தோஷமா வாழ முடியும்?” என்று முடித்தாள்.

 

“வம்சி, உன்னை கல்யாணம் செஞ்ச முறை தப்பு தான். ஆனா உன் பாட்டியோட மரணம், அது  வீடு போன கவலையில் இறந்தாங்க. அதுக்கும் வம்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எல்லா விஷயமும் தெரியும் அனிதா எல்லாத்தையும் சொல்லிட்டா” என்றான்.

 

“நீங்களும் அவர் பக்கம் தான் இல்லையா? எல்லாரும் வம்சி பணபலம் உள்ளவர்னு அவர் மீது தப்பு இல்லைனு வாதாடுவீங்க, என்னை மாதிரி ஏழைப் பொண்ணு மேல தான் தப்பு சொல்லுவீங்க. எப்படி இருந்தாலும் பணம் பணத்தோடு தானே சேரும்” என்று வெறுமையாய் பேசினாள்.

 

“லூசு மாதிரி பேசாத ராதை, நீ மயங்கி விழுந்த போது வம்சி எப்படி துடிச்சு அழுதாரு தெரியுமா? அவரோட பணத்துக்காக நான் உன்கிட்ட பேசலை, அவர் உன் மேல வைச்சிருக்க காதலோட ஆழம் எங்களுக்குப் புரியுது. ஆனா புரிய வேண்டிய நீ புரிஞ்சும் புரியாம மாதிரி நடிக்கிற, உன்கிட்ட பேசி இனு பிரயோஜனம் இல்லை” என்று இம்முறை அபிஷேக்கே கடுப்பாகி வெளியேச் சென்று விட்டான்.

 

அபிஷேக் வெளியேச் சென்ற பின்னர், ‘ஏன் வம்சி என் வாழ்க்கையில வந்தீங்க? என்னால முடியல… உங்க காதல் தான் என் பலம் பலவீனம் எல்லாமே… எனக்கு உங்களோட காதல் ஆழம் புரியுது. ஆனா என்னால உங்களை முழு மனசா ஏத்துக்கொள்ள எப்படி முடியும்…?’

 

‘என் பாட்டி உங்களால இறக்கலைனாலும், நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கலைனா அவங்க இறக்குற சூழ்நிலையே வந்திருக்காதே… இப்போ என்னை நம்பி இருக்குற குடும்பத்தை எப்படி விட்டுவிட்டு என்னால வர முடியும்?’

 

‘இவங்க எல்லாரும் சொல்ற மாதிரி ஐ டோன்ட் டிசெர்வ் யுவர் லவ்… உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல பொண்ணு வாழ்க்கை துணையாய் வரணும்’ என மனதில் எண்ணி தன் இரு கைகளை முகத்தில் மூடி கதறிக் கதறி அழுதவளின் உணர்வுகள் யாருக்கும் தெரியாது. ஏன் வம்சிக்குக் கூட ராதையின் மனதில் வம்சி இருக்கிறான் என்பதை ராதை அறிய விடவில்லை! 

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!