அத்தியாயம் 55

ராதைக்கு வம்சியின் செயலில் உள்ள அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை பதுங்கி இருந்து பாய்வானோ என்றே நினைத்தாள். 

 

அடுத்த நாள் காலை விடியும் போதே லட்சுமி கிட்சனில் வித விதமாக ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். “அத்தை என்ன ஸ்பெஷல் நிறைய வெரைட்டீஸ் செய்றீங்க?” என்று ஆச்சரியத்தோடு கேட்ட மருமகளிடம், “இன்று வேதந்த்தோட இருபத்தி ஒன்பதாவது பிறந்தநாள் மா” என்றார் புன்னகை முகமாக. 

 

இதற்கு தான் எப்படி விடை அளிக்கவேண்டும் என்று கூட ராதைக்குத் தெரியவில்லை. “சரி அத்தை, நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?” என்று கேட்டாள். 

 

“இன்னிக்கு நைட் வம்சிக்காக ஏதாவது ஸ்பெஷலா குக் பண்ணும்மா, உனக்கு செய்ய தெரியும்னா செய். வம்சி சந்தோஷப்படுவான்” என்று மகிழ்ந்தவரிடம், ‘அவனுக்காக செய்ய பிடிக்கல’ என்று சொல்லத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தியவள், “சரி அத்தை” என்று மட்டும் கூறிவிட்டு தன் அறைக்கு குளிக்கச் சென்று விட்டாள். 

 

குளித்து முடித்து விட்டு கீழே வரும்போது அனைவரும் வம்சிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிக்கொண்டிருந்தனர். அனைவரின் வாழ்த்திற்கும் மெலிதாக புன்னகைத்த வம்சிக்குத் தெரியும், ராதை தனக்கு வாழ்த்துக் கூற விரும்பவில்லை என்று. 

 

அனைவரும் வாழ்த்து கூறிய பின்னர் ஒவ்வொருவரின் முகமும் ராதையை நோக்கித் தான் சென்றது. அதனைக் கண்ட ராதை வேறு வழியின்றி வம்சியின் அருகில் சென்று, “ஹேப்பி பர்த்டேங்க!” என்று அவனின் கண்களைப் பார்த்து முதல் முறை நேராக வாழ்த்தினாள். 

 

கடமைக்கே என்று வாழ்த்தும் ராதையை எளிதாக கண்டுகொண்ட வம்சி, “தாங்க்ஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகினான். 

 

இப்போது ராதையின் முகம் சுருங்கிப் போனது. ‘எனக்கு பிடிக்குதோ இல்லையோ வாழ்த்து சொன்னதுக்கு ஒரு சின்ன சிரிப்பு வந்தா என்னவாம், கண்டுக்காம போறார்’ என்று மனதில் வம்சியை நினைத்து நொந்த ராதை தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள். 

 

“அம்மா நான் ஆபிஸ் கிளம்புறேன்” என்று கூறிய வம்சியிடம், “வேதந்த் இன்னிக்கு ஒரு நாளாவது வீட்டுல இருந்தால் என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டார் அன்னை.

 

“அம்மா, இப்போ நான் சின்ன குழந்தை இல்லை. என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. என்னை நம்பி ஒரு மனை…” என்று இடைவெளி விட்டவன், “என்னை நம்பி நீங்க எல்லாரும் இருக்கீங்க, ஒரு குடும்பத்தோட தலைவனுக்கு பிறந்தநாளை விட கடமை தான்மா முக்கியம்” என்றபடி தன் அன்னையின் தலையில் வருடினான். 

 

“அதில்லை கிருஷ்ணா, இன்னிக்கு ராதையோடு சேர்ந்து உனக்கு முதல் பிறந்தநாள். நீயும் அவளும் எங்காயாவது வெளியே போலாம் இல்லையா?” என்று தன் மகனிடம் ஆசையாய் கூறியவரைப் பாவமாகப் பார்த்த வம்சி, “இல்லம்மா இன்னிக்கு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு” என்று அவன் வேகமாக கூறிய அனைத்தும் ராதையின் காதுகளில் தெளிவாக விழுந்தது. 

 

வம்சி வீட்டில் இல்லாமல் இருக்கக் காரணம், பிறந்தநாள் என்று வரும் போது காதல் கொண்ட கணவனிடம் மனைவியிடத்தில் ஒரு அன்யோன்யம் இருக்கும்.. ஆனால் தன்னை பிடிக்காத மனைவிக்கு எங்கே தான் இங்கே இருந்து அவளை சிரமத்திற்குத் தள்ளப்படுவாளோ? என்றே வம்சி வேகமாக அலுவலகத்திற்குக் கிளம்பினான். 

 

மாலை நான்கு நெருங்கும் பொழுதே ராதை லட்சுமியிடம் சென்று என்னவெல்லாம் சமைக்கலாம் என்று குறிப்பு கேட்டாள். 

 

“வம்சிக்குப் பிடிச்ச சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி அப்புறம் பாசுந்தி இதெல்லாம் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார். 

 

அப்போது அங்கே வந்த யசோதா மற்றும் பிரணவ் வம்சிக்காக பரிசுகள் வாங்கிக்கொண்டு வந்திருந்தனர்.

தன் அன்னையிடம் வந்த யசோதா, “அம்மா, ஷிவானி கிளம்பிட்டாளாம் வந்துட்டு இருக்கா” என்று கூறும்போது அதைக் கேட்டு ராதை அப்பட்டமாக அதிர்ச்சி அடைந்தாள். 

 

‘நல்லாதான போயிட்டு இருக்கு, இப்போ ஏன் திடீர்ன்னு இவ வராள்?’ என்று தன்னை மீறி மனதில் நினைத்தவளின் முகத்தின் கவலை லட்சுமிக்கு என்ன உணர்த்தியதோ, 

 

“ராதை, ஷிவானிக்குக் கல்யாணம் ஆயிடுச்சும்மா, அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதே வேதந்த் தான்” என்றார் பெருமூச்சுடன். இதைக் கேட்ட ராதையின் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதி உலாவியது. 

 

“அண்ணி, இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு அண்ணாவோட ஃபிரண்ட்ஸ் வராங்க. வீடே கலகலன்னு இருக்க போகுது. நீங்கள் என்ன டிரெஸ் போடப் போறீங்க?” என்று ஆர்வமாய் கேட்டாள் யசோதா.

 

“யாரெல்லாம் வராங்க யசோதா?” என்று கேட்ட ராதையிடம், 

 

“இதோ பிரணவோட அக்கா அனிதா, அவங்க ஃபியான்சி அபிஷேக், அப்புறம் ஷிவானியோட ஹஸ்பண்ட் வம்சி அண்ணாவோட காலேஜ் பிரண்ட் தான், அப்புறம் அண்ணாவோட காலேஜ்ல படிச்ச கிளோஸ் பிரண்ட்ஸ்… இதெல்லாமே பிளான் பண்ணது ஷிவானியோட ஹஸ்பண்ட் பிரதீப் அண்ணா தான். செம ஜாலியா இருக்க போகுது” என்று ஆர்வமாகக் கூறினாள் யசோதா. 

 

‘அய்யோ கடவுளே! இன்னிக்கு இவ்வளவு பேர் வராங்களா?’ என்று மலைப்பாக உணர்ந்தாள் ராதை. பொதுவாகவே ராதைக்கு ஆட்கள் வாடை பிடிக்காது. ஆனால் வம்சி அவளுக்கு நேர் எதிர் குணம், அவனுக்கு நண்பர்கள் பட்டாளம் ஏராளம்.

 

“அத்தை, நிறைய பேர் வராங்களாம். அப்போ கோதுமை மாவு எவ்வளவு கணக்கு எடுக்கணும்?” என்று கேட்ட மருமகளின் தலையை வருடிய லட்சுமி, “நீ வேதந்த்துக்கு மட்டும் செய் மா. மத்தவங்களுக்கு எல்லாம் ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்தாச்சு. 

 

“சரி இன்னிக்கு ஈவ்னிங் வேதந்த்துக்கே தெரியாம சர்ப்ரைஸ் பார்ட்டி இருக்கு. நீ என்ன டிரெஸ் போடப் போற?” என்று ஆர்வமாக கேட்ட மாமியாரிடம், “சேலை தான் அத்தை” என்று பதில் அளித்தாள் ராதை.

 

“உனக்கு ஃபுல் பிராக்லாம் போட்டா அழகா இருக்குமேம்மா, நீ பேசாம இப்போ நம்ம வீட்டு பக்கத்துல இருக்குற கடையில் டிரஸ் வாங்கிக்கோ” என்று அவர் சொல்லும் போதே அந்த இடத்திற்கு ஷிவானி மற்றும் பிரதீப் வந்து சேர்ந்தார்கள். 

 

அவர்களை வரவேற்ற குடும்பத்தினரைக் கடந்து ராதையைப் பார்த்த ஷிவானி சங்கடத்துடன், “நல்லா இருக்கீங்களா ராதை?” என்று மெலிதாக சிரித்தாள்.

 

“ஹாய் ராதை, ஐ அம் பிரதீப். உங்கள் ஹஸ்பண்ட்டோட ஆருயிர் நண்பன் அப்பறம் ஷிவானியின் ஹஸ்பண்ட்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் பிரதீப். 

 

இருவருடனும் பொதுவாக பேசிய ராதை அடுத்து என்ன செய்வது என்று விழித்துக் கொண்டு இருக்கும் போது, “ஷிவானி, நீ ராதையை கூட்டிக்கிட்டு பக்கத்துல இருக்குற நல்ல கடையில, அவளுக்கு நீ இப்போ போட்டுருக்க போல ஃபுல் கவுன் எடுத்துக்கொடு” என்று ராதையை ஷிவானியோடு அனுப்பி வைத்தார் லட்சுமி.

 

லட்சுமியின் செயலால் சங்கடமாக உணர்ந்த ராதை, வேறு வழியின்றி ஷிவானியோடு சென்றாள். “ராதை கடை பக்கத்துல தான் இருக்கு, அதனால நாம நடந்தே போலாமா?” என்று கேட்ட ஷிவானியிடம் தன் ஒப்புதலை மெலிதான புன்னகையில் கொடுத்தாள் ராதை. 

 

ஷிவானி ராதையின் அமைதியைப் பார்த்து, “ஐ அம் சாரி ராதை, நான் உங்களை நிறைய காயப்படுத்தி இருக்கேன். நீங்களே என் இடத்துல கொஞ்சம் யோசிச்சு பாருங்க, வம்சி அத்தான் மாதிரி ஒரு பேரழகன், புத்திசாலி அண்ட் துருதுருப்பா இருந்தால் யாருக்கு தான் அவரை விடத் தோனும்? அப்படித்தான் நானும் சுத்துனேன்.”

 

“ஆனா வம்சி அத்தான் உங்க மேல வைச்ச காதல் இருக்கே அப்பாப்பா… சான்ஸ் லெஸ். நீங்க இந்த வீட்டை விட்டு போன அப்புறம் நான் தற்கொலை முயற்சி செஞ்சேன். அப்பவாவது அத்தான் என்னை கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நினைச்சு. ஆனா அவர் என்ன சஞ்சார் தெரியுமா? நான் விஷம் குடிச்சுட்டு படுத்த படுக்கையில இருந்த போது எனக்கே தெரியாம அவரோட பிரண்ட் பிரதீப்பை வைச்சு என் கழுத்தில் தாலி கட்ட வைச்சுட்டார்.”

 

“பிரதீப்பை நான் ரெண்டு தடவை பார்த்திருக்கிறேன். அத்தானோடு நான் சுத்திக்கிட்டு இருப்பார். நான் கண் விழிச்ச போது என் கழுத்துல பிரதீப் கட்டிய தாலியோட கனத்தை விட, என் மனசோட கனம்… அதைப் பத்தி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை” என்றாள்.

 

“அப்போது என்கிட்ட வந்த வம்சி அத்தான் ஷிவானி தற்கொலை பண்றது முட்டாள்தனம். நீ ஒரு கம்பெனியுடைய முதலாளி. யூ ஆர் சூப்பர் வுமன், அப்படி இருக்கும் போது ஆஃப்டர் ஆல் உன் கூட நிச்சயம் முடிச்சிட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்ச வம்சிக்காக உன் உயிரை விடத் துணிஞ்சிட்ட, இதுல என்ன நியாயம் இருக்கு? உன் குடும்பத்தை பத்தி யோசிச்சு பார்த்தியா? இங்கப் பாரு உன் அப்பா, அம்மா எப்படி அழுறாங்கனு கோபமா சொன்னார்.”

 

“இப்போ நீ வெறும் ஷிவானி இல்லை, மிஸஸ் ஷிவானி பிரதீப். எஸ் பிரதீப் உன் கழுத்துல தாலி கட்டிட்டான். நான் தான் அவனை தாலி கட்ட சொன்னேன். ஏன்னு தெரியுமா? பிரதீப் உன்னை விரும்புறானாம், இந்த விஷயம் போன வாரம் தான் எனக்குத் தெரிஞ்சுது…” 

 

“உன்னை விரும்புறவங்க கூட வாழ்ந்து பார் ஷிவானி. வாழ்க்கை அவ்வளவு அழகா இருக்கும். பிரதீப் நீ சூசைட் அட்டெம்ட் பண்ணிட்டனு தெரிஞ்சவுடனே துடிச்சிட்டான். நீ எப்போ எனக்காக உன் வாழ்க்கையை மறந்து தற்கொலை செய்ய முடிவு பண்ணிட்டியோ, அப்போவோ உன் வாழ்க்கையை நீ இழக்கக்கூடாது வாழணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். இந்த மஞ்சள் கயிறோட மகிமையில கண்டிப்பா நீ பிரதீப்போடு சந்தோஷமாக வாழ்வன்னு சொன்னவரு”

 

“இந்த வம்சிக்கு எப்போதுமே ராதை மட்டும் தான்னு தெளிவா அழுத்தமா சொல்லிட்டார்” என்று ஷிவானி கூறி முடிக்கும் போது ராதை சிலையாகவே உறைந்து விட்டாள்.

 

“ஏய் ராதை, ஏன் இப்படி அதிர்ச்சியாகி நிக்குறீங்க?” என்று அவளை உலுக்கும் பொது தான் நிகழ் உலகிற்கு வந்த ராதை, “அ… அது ஒன்னும் இல்ல ஷிவானி” என்று மழுப்பினாள். 

 

“ராதை நான் உங்ககிட்ட இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, உங்களோட கண்கள்ல ஏதோ சோகம் இருக்கு. நான் இப்போ பிரதீப்போட சந்தோஷமா நிம்மதியா இருக்கேன். நீங்களும் அத்தானோடு சந்தோஷமாக இருக்கணும்னு  தான் இவ்வளவு சொல்றேன்” என்று முடித்தாள் ஷிவானி.

 

***

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!