அத்தியாயம் 56

ஷிவானி கூறியதற்கு ராதையிடம் எந்த ஒரு உணர்வும் இல்லை என்ற பின், ஷிவானி வம்சியைப் பற்றிய பேச்சை விடுத்தாள். “ராதை இதான் கடை, வாங்க உள்ளே போலாம்” என்று அவளை ஒரு நவநாகரீக கடைக்குள் அழைத்துச் சென்று ராதைக்கு பிங்க் கலரில் ஒரு அழகிய லாங்க் கவுனைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள். ராதைக்கும் அந்த கவுன் பிடித்திருந்ததால் அதையே எடுத்தாள்.

 

“உங்களுடைய செலக்க்ஷன் நல்லா இருக்கு ஷிவானி” என்று மெலிதாக சிரித்த ராதையிடம், “அப்பாடி ஒரு வழியா சிரிச்சிட்டீங்க. எனக்கு இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு… உங்களுடைய பிங்க் கவுனுக்கு இந்த பெரிய பிங்க் ஹியர் ரிங் அழகா இருக்கும்” என்று ஒரு வளையத்தை எடுத்துக்கொடுத்த ஷிவானியை ராதைக்கு உண்மையாகவே ரொம்ப பிடித்தது.

 

“சரி ஷிவானி கிளம்பலாமா? அவங்களுக்கு டின்னர் ரெடி பண்ணணும்” என்று தயங்கியவளிடம், “ஆ முடிஞ்சுது போலாம்” என்று பில்லைக் கட்டிவிட்டு வீட்டிற்கு விரைந்தனர். 

 

ராதை வந்தவுடன் வம்சிக்கு லட்சுமி கூறியபடி, சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா மற்றும் பாசுந்தி செய்துவிட்டு அதை ஃபாயில் பேப்பரிலும் ஃபுரிஞ்சிலும் அழகாக வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். 

 

ராதை குளித்துவிட்டு ஒரு சல்வாரை அணிந்து வெளியே வரும் போதே வீடே கலகலவென கூட்டமாக இருந்தது. வம்சி தன் கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் முடித்தான். அவன் தோழர்கள் வித்யூத், மஹிதா, ராஷ்மி மற்றும் அதிரன் வந்து வீட்டை அலங்காரம் படுத்தி கொண்டிருந்தனர். 

 

“சிஸ்டர் இவங்க தான் வம்சி அத்தானோட காலேஜ் ப்ரண்ட்ஸ்” என்று பிரணவ் அவர்களை ராதைக்கு அறிமுகப்படுத்தினான். அனைவரும் ராதையை வியப்பாகப் பார்த்தனர். பிரதீப்பும் அவர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். 

 

“ஓ நீ தான் வம்சியை தூங்க விடாம அவனோட மனசை கொள்ளை அடிச்சு கவர்ந்தவளா?” என்று கன்னடத்தில் ரஷ்மி கூறியது ராதைக்குப் புரியாமல் விழித்தாள். 

 

“அது வந்து சிஸ்டர்.. வம்சி அத்தானை கவர்ந்தது நீங்கள் தானானு சொல்றாங்க” என்ற பிரணவ் மற்றும் ரஷ்மியிடம் மெலிதாக புன்னகைத்தாள் ராதை. அவளுக்கு வேறு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.. அதனால் ஒரு மெல்லிய புன்னகை கொடுத்தாள்.

 

“உன்னால தான் வம்சி போன வருஷம் பேர்ட்டேவை கூட செலிபரேட் பண்ணல. ச்ச அவனுக்கு காலேஜ்ல எவ்வளவு பொண்ணுங்க பேன்ஸ் தெரியுமா? எங்களை எல்லாம் கண்டுக்க கூட மாட்டான். உன்னைப் பார்த்த அப்புறம் வம்சி ஆளே மாறிட்டான்” என்று மஹிதா துடுக்காக தமிழிலேயே பேசியது அனைவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தது. ராதை அப்படியே சிலையாய் நின்றாள்.

 

“மஹிதா உனக்கு அறிவே இல்லையா? நீ இப்படி ராதைக்கிட்ட பேசுனது வம்சிக்கு தெரிஞ்சாலே உன்னை சும்மா விட மாட்டான். அவங்க பிரைவேட் பர்ஸ்னல் எல்லாம் நமக்கு தேவை இல்லாதது. ஆஸ்க் ஹேர் சாரி” என்றான் அதிரன் கோபமாக. 

 

“நோ அதி, வம்சி இவளால தான் ஒரு வருஷமா நம்ம கூட சிரிச்சு கூட பேசல” என்று ராதையைக் கைகாட்டி பேசியபோது இம்முறை கடுப்பான வித்யூத், “ஷட் அப் மஹிதா, திஸ் இஸ் த லிமிட். நம்ம இன்னிக்கு வம்சியோட பேர்ட்டேக்காக வந்துருக்கோம. நீ அவனோட பொண்டாட்டியை இப்படிப் பேசினது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? ஃபர்ஸ்ட் மன்னிப்பு கேளு” என்று அழுத்தமாகக் கூறியவனிடம், “பரவாயில்லை அண்ணா” என்று ராதை முகத்தைச் சோகமாக வைத்தபடி உள்ளே சென்றாள். 

 

பிரணவிற்கும் பிரதீப்பிற்கும் தான் மிகவும் சங்கடம் ஆகிப் போனது. எப்படி இருந்தாலும் அவர்கள் வம்சியின் குடும்பம் அல்லவா.

 

 “மஹிதா, உன் காதலை வம்சி ஏத்துக்கலனு ராதைக்கிட்ட பொறாமையில் இப்படி பண்றீயா?” என்று குத்தலாகக் கேட்ட பிரதீப்பிடம் அனல் பார்வை விடுத்தாள் மஹிதா. 

 

“போன வருஷம் இதே நாள் நம்ம வம்சியோட பேர்ட்டேக்காக செலிபரேட் பண்ண வந்தோம். அப்போ ராதை என் வாழ்க்கையில் இல்லாம பிறந்தநாள் தேவையில்லைன்னு நம்ம கிட்ட முகம் கொடுத்து கூட பேசாத வம்சியை மறந்துட்டீங்களா?” என்று மஹிதா திமிராகக் கேட்டாள். 

 

“அதான் இப்போ சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்களே, அப்போ என்ன ஃபிரியா விடு” என்று கூறிய ரஷ்மியிடம், 

 

“இல்லை ரஷ்மி, வம்சியும் ராதையும் சேர்ந்து வாழல. அப்படி சேர்ந்து வாழ்ந்துருந்தால் வம்சி நம்மளோடு நல்லா பேசி இருப்பானே, அவன் இன்னும் நம்மளை அவாய்டு தான் பண்றான்” என்றாள் அழுத்தமாக. 

 

மஹிதா பேசியது தவறாகவே இருந்தாலும் அவள் கூறியதில் மறைந்திருந்த அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது. பக்கத்து அறையில் சிலையாய் அமர்ந்திருந்த ராதையின் காதுகளில் இந்த உரையாடல் எல்லாம் தெளிவாகவே விழுந்தது.

 

‘இவர் பெரிய மன்மதன் எல்லா பொண்ணுங்களுக்கும் காதல் மன்னன்!’ என்று கடுப்பாக நினைத்த ராதை, ‘ஷிவானியும் வம்சியைப் பத்தி உயர்வா தான் சொன்னாங்க, இந்த மஹிதாவும் வம்சி நான் இல்லைன்னு செலிபிரேட் பண்ணலைன்னு சொல்றாங்க…’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, “அண்ணி, நீங்க இங்கே இருக்கீங்களா?” என்று ராதையின் கையைப் பிடித்து அவளின் பக்கத்தில் அமர்ந்தாள் யசோதா.

 

“மஹிதா சொன்னதை எல்லாம் நினைச்சு குழப்பிக்காதீங்க அண்ணி. அவங்க அப்படி தான் அண்ணன் மேல கொஞ்சம் பொசசிவ்” என்று சொல்லும் போதே ராதையின் முகம் சுருங்கியது. 

 

“ஐய்யோ அண்ணி, பொசசிவ்னா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அது வந்து… அவங்களுக்கு அண்ணா மேல ஒன் சைட் லவ் அதனால இப்படி. ஆனா அதுக்காக ஷிவானி மாதிரிலாம் பைத்தியமா சுத்தல” என்று ராதைக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள். 

 

“சரி அண்ணி, உங்களுடைய பிராக் போடுங்க, வம்சி அண்ணா வரதுக்கு டைம் ஆயிடுச்சு சீக்கிரம்” என்று அவளை ஆறுதல்படுத்திவிட்டு நிறைமாத கர்ப்பிணியான யசோதா அழகிய டிசைனர் சாரி ஒன்றை எடுத்து அணிந்தாள். 

 

தன்னுடைய தலையை அழகாக போனி டையில் போட்டுவிட்டு, அழகிய கல் பொட்டை தன் நீண்ட புருவங்களுக்கு இடையே வைத்தவள், அந்த பெரிய பிங்க் காது வளையத்தை அணிந்து வெளியே வரும் போது, அனைவருமே வீட்டை அலங்கரித்து விட்டு வம்சிக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். 

 

வம்சியின் கார் மாலை ஆறரைக்கு தன் வீட்டிற்குள் நுழைந்து நிற்கும்போதே வீட்டின் வெளி தோற்றத்தைக் கண்டு தன் நண்பர்களின் வேலையாகத் தான் இருக்கும் என்று அறிந்தவன் சலிப்பாக உள்ளே வந்தான். 

 

“டேய் மச்சான்… ஹாப்பி பர்த்டே…” என்று நண்பர்கள் அவனை சூழ்ந்து வாழ்த்து மழை பொழிந்தனர். 

 

ரஷ்மி மற்றும் மஹிதா வம்சியைக் கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னதை தூரத்தில் இருந்து தன் கைகளைக் கட்டி கடுப்பில் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதை. வம்சியைக் கூட்டம் சூழ்ந்ததால் அவன் அங்கு தூரத்தில் ராதை நின்றதைப் பார்க்கவில்லை. 

 

“அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்… சீக்கிரம் இந்த பிங்க் சூட்டை போட்டுக்கிட்டு வாங்க” என்று பிங்க கலர் சூட்டை அண்ணாவிடம் பாசமாகக் கொடுத்த தங்கையிடம், “இது என்னடி, பொண்ணுங்க கலர் பிங்க்” என்று கலாய்த்தான். 

 

“உங்க பொண்டாட்டியும் நீங்களும் மேட்சிங்கா இருக்கணும்னு தான்” என்று யசோதா கூறிய போது தான் வம்சியின் கண்கள் தானாக ராதையைத் தேடின. 

 

“ஹலோ பிரதர், உங்களோட பொண்டாட்டி அங்கே” என்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ராதையைப் பார்த்த வம்சியின் கண்கள் அவளை ஆவலுடன் அளந்தது. 

 

‘எவ்வளவு அழகு டி நீ! இந்த அமைதியாலும் அழகாலும் என்னை கட்டிப்போட்டு கொல்லாமல் கொல்றடி’ என்று தன்னை மீறி மனைவியை மனதில் ரசித்துக் கொண்டிருந்தவனின் பார்வை வீச்சை தாங்க முடியாத ராதை வேறு பக்கம் திரும்பினாள். 

 

“டேய் மாப்ள, சிஸ்டரை பார்த்தது போதும் டா, கேக் உருகிட போது சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா” என்று வம்சியின் காதருகில் பிரதீப் கூறிய பின்பு தான், தன் சுய உணர்விற்கு வந்தவன் தன் அறைக்கு உடை மாற்றச் சென்றான்.

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!