அறைக்குள் உடை மாற்ற வந்த வம்சியோ, “வம்சி, எல்லாத்தையும் விட உன்னுடைய கண்ணியம் தான் முக்கியம். இனி உன் பார்வை ராதையோட பக்கம் போகவே கூடாது. உனக்கு செல்ஃப் கண்ட்ரோலிங் கெபாசிடி நிறையவே இருக்கு! சோ அவளோட காதல் உன் மேல இல்லாமல் நீ அவளைப் பார்க்கவே கூடாது” என்று கண்ணாடியில் தனக்கே சொல்லிக்கொண்டவன், பின் தெளிவு வந்தவனாய் ரெஸ்ட்ரூம் சென்று குளித்துவிட்டு உடை அணிந்து கீழே வரும்போதே அனிதாவும் அபிஷேக்கும் அங்கு இருந்தனர்.
அந்நேரம் ராதைக்கு கால் செய்த கோதை, “ராதை இன்று க்ருஷ்க்கு பேர்ட்டே… அவன் தான் என் நம்பரை பிளாக் செஞ்சிட்டானே, நான் அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து மட்டும் சொல்லணும், கொஞ்சம் ஃபோனை அவன்கிட்ட கொடுக்குறியா?” என்று கேட்ட அக்காவை நினைத்து பாவப்பட்ட ராதை, ஹால் நோக்கி செல்ல சரியாக அங்கே வந்துக் கொண்டு இருந்தான் வம்சி. அவனிடம் நெருங்கி நடக்கும் போதே அவனின் கம்பீரத்தைப் பார்த்து பேச்சிழந்தாள்.
அதியசமாக தன் அருகில் கண்களை விரித்துப் பார்த்த மனைவியை என்ன என்பது போல் தலையசைத்து கேட்ட வம்சியிடம், “உங்களுக்கு கோதை அக்கா வாழ்த்து சொல்ல…” என்று தடுமாறிய ராதையை விசித்திரமாகப் பார்த்தான் வம்சி.
“என்ன அத்தான், சிஸ்டர் உங்களை இப்படி சைட் அடிக்குறாங்க, அது கூட புரியாம” என்று பிரணவ் சொல்லும் போது தான் சுயவுணர்வுக்கு வந்த ராதைக்கு தலைகுனிவாய் போனது.
பிரணவ்வை விளையாட்டாக முறைத்த வம்சி, ராதை ஏதோ ஃபோன் பத்தி தான் பேச வருகிறாள் என்று அவள் கையில் இருந்த செல்லை வாங்கியவன் அதில் கோதை பெயரைப் பார்த்ததும் பெருமூச்சுவிட்டு, “சொல்லு கோதை” என்று நிறுத்தினான்.
“க்ருஷ்! ஹேப்பி பர்த்டே டா… எல்லா வருஷமும் என்னோட வாழ்த்து உனக்கு இருக்கும். ஆனா போன வருஷம் பேச முடியல, இந்த வருஷம் நல்லவேளை ராதை இருந்ததால பேசிட்டேன்” என்று தயங்கியவளை மேலும் புண்படுத்தாமல்,
“நீ எம்பிஏ நல்ல படியா படி, வேற எதையும் யோசிக்காத.. இப்போ தான் வாழ்க்கையில சரியான பாதையை நோக்கி போயிட்டு இருக்க! அதுக்கு என்னுடைய பெஸ்ட் விஷ்ஷஸ்” என்று முடித்தவன் ராதையிடம் ஃபோனை கொடுத்தான்.
வம்சியின் குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் சிரித்துப் பேசி அமர்ந்திருந்த வண்ணம், அனிதாவைக் கண்ட ராதை விலகினாள். ‘இவங்க நம்ம மேல ஏற்கனவே கொலை வெறியில இருக்காங்க. வம்சி முன்னாடி ஏதாவது அசிங்கப்படுத்திறப் போறாங்க.’
‘ஏற்கனவே நான் வம்சிக்கு டிசெஸர்விங் இல்லன்னு நினைக்குறாங்க. இன்னிக்கு வேற நிறைய பேர் இருக்காங்க, அவங்க முன்னாடி அவமானம் படக்கூடாது, கடவுளே முருகா!’ என்று மனதில் நினைத்தவள் காந்திமதி பாட்டி பக்கத்தில் போய் அமர்ந்து விட்டாள்.
அங்கு வம்சியின் நண்பர்கள் மைக்கில் ஆட்டம் பாட்டமென கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், “நீ பார்க்க தேவதை மாதிரி இருக்கம்மா” என்ற பாட்டியிடம், “பாட்டி வீடே விழாக்கோலமா இருக்கே, எல்லா வருஷமும் இவங்க பிறந்தநாள் இப்படித்தான் இருக்குமா?” என்று வியப்பாக கேட்டாள்.
“ஹா ஹா இதுக்கு பதிலை நான் எல்லார் முன்னிலையில சொன்னால் தான் சரியா இருக்கும்” என்று வித்யூத்திடம் இருந்த மைக்கை கேட்ட பாட்டியை, ‘ஐய்யய்யோ மைக்குல என்ன சொல்லப் போறாங்களோ? இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லை. ஈஸ்வரா என்னை காப்பாத்துங்க’ என்று மனதில் பயந்தாள்.
“என் பேரன் வம்சி பிறந்து இன்னியோட இருபத்தி ஒன்பது வருஷங்கள் ஆகிடுச்சு…” என்று பாட்டி மைக்கில் சொல்லும் போதே அனைவரின் கவனமும் பாட்டியிடம் சென்றது.
மெலிதாக சிரித்த வம்சி தன் இரு கைகளை மார்புக்கு நடுவில் கட்டிக்கொண்டு தன் புராணத்தை பாட்டி ஆரம்பித்து விட்டார்கள் என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
மேலும் தொடர்ந்த பாட்டி, “என் பொண்ணு மைதிலி இவனுக்கு வம்சி வேதந்த் கிருஷ்ணானு பெயரை சூட்டியது போல, உனக்கும் கோமகள் ராதைனு பெயரை சூட்டி இருக்கா. வம்சிக்கு நீ தான் மனைவி, அதான் அந்த கடவுள் தீர்ப்பு. அதனால தான் உங்க ரெண்டு பேருக்குமே இவ்வளவு அழகா பெயர் பொருத்தம் அமைஞ்சு இருக்கு” என்று அவர் அவள் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பேசும் போது, ராதையின் நெஞ்சமே நின்று விட்டது போல் உணர்ந்தாள்.
‘ஐய்யோ இந்த பாட்டி ஏன் இப்படி தேவையில்லாம மார்க்கெட்டிங் பண்றாங்க? ராதையே இப்போ தான் ஏதோ சகஜமா உட்கார்ந்து இருக்கா. இவங்க அவளை அழ வைச்சிருவாங்க போல’ என்று நினைத்த வம்சியால் அந்த நிமிடம் பாட்டியைத் தடுக்க முடியவில்லை.
நல்லவேளை பாட்டி அப்படியே பேச்சை மாற்றினார். “வம்சி ரொம்ப புத்திசாலி, திறமையானவன், அழகானவன், அறிவானவன், பண்பானவன், பொறுப்பானவன் அதனாலேயே அவனுக்கு நண்பர்கள் பட்டாளமும் அதிகம். ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.”
“அதே போல மிகவும் பாசக்காரன். அதனால தான் போன வருஷமும் இதே மாதிரி அவனுடைய பிறந்தநாளுக்கு அலங்கரிச்ச போது, ராதை இல்லாம பிறந்தநாள் கொண்டாட முடியாதுனு அவனோட பிறந்தநாளையே ஒதுக்கிவிட்டான்” என்று மைக்கில் கூறிய பாட்டியின் கூற்றைக் கேட்ட நண்பர்கள் அனைவரும், “வம்சி… வம்சி…” என்று கூச்சலிட்டனர்.
ராதைக்குத் தான் முகமே சுருங்கிப் போனது. ‘என்ன இருந்தாலும் இப்போ எல்லா முன்னாடியும் வம்சி பெரிய மனுஷன் ஆயிட்டாரு . எனக்காக அவர் பிறந்தநாள் கொண்டாடலன்னு இப்போ எல்லாருக்கும் நான் தானே தப்பா தெரிவேன்’ என்று மனதில் சோகமான ராதையின் கண்களில் அழுகை எட்டிப் பார்க்கக் காத்திருந்தது.
உண்மையாக காந்திமதி பாட்டி அனைவரின் முன் அப்படி பேசக் காரணம், வம்சியின் காதலை ராதை ஆழமாக உணரவேண்டும் என்பதற்கே.
“பிரதீப், ராதை அப்செட் ஆகுறா, இந்த சிச்சுவேஷனை மாத்து” என்று பிரதீப் காதில் வம்சி மெதுவாக முணுமுணுக்க, “ஓகே கைய்ஸ், கேக் கட் பண்ணலாம்” என்று வம்சியின் முன் அந்த அழகான ஐஸ் கேக்கை கொண்டு வந்த நண்பர்கள், அவனிடம் கத்தியைக் கொடுத்து வெட்டச் சொல்லி சந்தோஷத்துடன் கூச்சலித்தனர்.
ராதையை ஒரு பார்வை பார்த்த வம்சி அவள் அழவில்லை என்று உறுதி செய்து பின்னர் கேக்கை வெட்டினான். அவன் கேக் வெட்டும் பொழுது ராதையின் மனதும் வெட்டியது போல் ஒரு உணர்வு. வம்சி தன்னை கேக் வெட்ட அழைக்கவில்லை, அத்தோடு முதலில் தன் அன்னைக்கே கேக் ஊட்டிய வம்சியை ஒருவித ஏமாற்றத்தோடு பார்த்த ராதைக்குத் தன்னிடமே சில கேள்விகள் கேட்கத் தோன்றியது.
இரவு எட்டு ஆகும் போது அனைவரும் பஃபே முறையில் சாப்பிட ஆரம்பிக்கும்போது ராதை தான் செய்த உணவையே மறந்துவிட்டாள். அவசர அவசரமாக அதை யசோதாவிடம் கொடுத்து வம்சியிடம் தரச் சொன்னாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் நண்பர்களிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்த வம்சியிடம், “அண்ணா இது உனக்கான ஸ்பெஷல், வீட்டுல செஞ்சது” என்ற மட்டும் மொட்டையாக கூறிவிட்டு அசதியாக இருந்ததால் ஓய்வெடுக்க சென்றுவிட்டாள் யசோதா.
ராதை செய்த டின்னரை மிகவும் ரசித்து சாப்பிட்ட வம்சியிடம், “என்னடா யார் செஞ்ச ஸ்பெஷல்?” என்று கேட்ட அதிரனிடம், “வேறு யாருடா அம்மா தான்” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த வம்சியை அடிப்பட்ட பார்வையோடு பார்த்தாள் ராதை.
தூரத்தில் இருந்து ராதை அவனைப் பார்த்த பார்வையை வம்சி கண்டுருக்கவில்லை. ராதைக்கு தெரியும் யசோதா மொட்டையாக சொல்லிவிட்டுப் போனாள் என்று. ஆனாலும் வம்சிக்கு தன் அம்மா தான் தோன்றுகிறார், தான் தோன்றவில்லை என்று மனதில் அழுதவளை அவளின் மனசாட்சியே கேள்வி கேட்டது.
‘வேண்டா வெறுப்பாக கடமையேனு அவன் கூட இருக்குற உன்னை அவன் ஏன் கண்டுக்கொள்ளணும்’ என்று. இந்தக் கேள்வி ராதையின் மனதைக் குத்தியது.
பார்ட்டி முடிந்து அனைவரும் சென்ற பின்னர் மஹிதா விடைபெறும் போது வம்சியிடம் வந்து, “நீ சந்தோஷமா இல்லை வம்சி, எனக்குத் தெரியும்” என்றாள் வம்சியைப் பார்த்து அழுத்தமாக.
மஹிதா வம்சியிடம் பேச நெருங்கும் போதே ராதையின் வயிற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்தது. தன்னை மீறி அவர்களின் உரையாடலைக் கேட்க வேண்டும் என்று ராதையின் மனது அலற, வம்சி, மஹிதா இருந்த கார்டன் ஏரியா பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னால் நின்று அவர்களின் உரையாடலைக் கேட்டாள்.
“மஹிதா, என்னோட பொண்டாட்டி ராதை என்னொட தான் இருக்கா. அப்போ ஏன் நான் சந்தோஷம் இல்லாம இருக்கணும்?” என்று தன் கைகளைக் கட்டிக்கொண்டு அதே அழுத்தத்தோடு கேட்டான்.
“இல்லை வம்சி, நீ பொய் சொல்ற… உனக்காக நான் இருக்கேன்னு மறந்துராத…” என்று அவள் சொல்லிக் கொண்டுருக்கும் போதே, “அப்போ அடுத்து உனக்கும் மாப்பிள்ளை ரெடி பண்ணிட வேண்டியது தான்” என்றான் நக்கல் சிரிப்பாக.
“என்ன சொல்ற வம்சி நீ?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவளிடம், “லுக் மஹிதா, காதல் ஒரு அற்புதமான உணர்வு. எனக்கு ராதை மேல வந்த உணர்வு. அதை சொல்ல வார்த்தையே என்கிட்ட இல்ல. அவளுடைய அமைதி, பார்வை, அவளுடைய அழகு, எல்லாமே அவள் எனக்கானவள்னு நான் உணர்ந்தேன்…”
“ஷிவானி, அனிதாக்கு என் மேல் இருந்த காதல் தான் உனக்கும் இருக்கு. ஆனா உங்களையும் உயிரா விரும்புறவனை நீங்க கல்யாணம் பண்ணா தான் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும். அங்க பாரு ஷிவானி, அனிதா எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. அதே மாதிரி உன்னையே உலகமா நினைக்குற ஒருத்தன் வருவான்… பீ ஹாப்பி ஆல்வேஸ்” என்று அவளிடம் சிநேகமாக புன்னகைத்த வம்சியிடம்,
“ஒன் லாஸ்ட் டைம்” என்று வம்சியை சிநேகமாக கட்டிப்பிடித்த மஹிதா அவனிடம் விடைபெற்று கிளம்பும் போது, ராதையின் மனநிலை மதில் மேல் இருக்கும் பூனை போல ஆனது.
***
