பிரியாதிரு 27

பிரியாதிரு 27

 

அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள் ராஜேஷ் ரெட்டியின் குடும்பம்… அமிர்தாவோ கதறி கதறி அழ, கவிதாவும் அப்படி அழுதார்… 

 

ராஜேஷ் ரெட்டி துவண்டு விட, சுவாதியின் கண்களில் குளம் கட்டியது. 

 

அஜய் க்கும் பதற்றம் அதிகமாகியது… 

 

“ஆத்மன் சார் MRR ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரு” என ஒருவன் கால் செய்து சொல்லிவிட்டு உடனே கட் செய்துருக்க, அமிர்தாவோ ஸ்தம்பித்து உறைந்து விட்டாள்… 

 

அந்நொடி அவள் அதிர்ச்சியில் மயங்கியும் விழுந்திருக்க, சுற்றி இருந்தவர்கள் அவளின் முகத்தில் நீர் ஊற்றி எழுப்பி அவளை எழச் செய்து, இதோ இப்போது மொத்த குடும்பமும் மருத்துவமனையில்… 

 

“டேரக்டர் ஆத்மன் இங்க அட்மிட் ஆயிருக்காங்க எந்த வார்ட்” என ரிசெப்ஜனில் இருந்த பெண்ணிடம் ஓடி வந்து கேட்டது அமிர்தா தான்.. 

 

மயங்கி எழுந்ததில் இருந்து “நான் உடனே ஆத்மனைப் பாக்கணும்” என பைத்தியம் போல கத்திக் கொண்டு இருந்ததும் அமிர்தா தான்… 

 

“ஆத்மன் சார் ஐசியுல இருக்காரு” என அப்பெண் சொல்ல அமிர்தாவுக்கு மூச்சே அடைத்து விட்டது… 

 

“ஐசியு வா” என உறைநிலையில் அதிர்ச்சியுடன் அவள் திணறிக் கொண்டு இருக்கும் போதே, 

 

“எனக்கு ஒன்னும் இல்ல நானா ஐ அம் ஃபைன்” என்று ஆத்மனின் குரல் அவளுக்கு சற்று அருகில் ஒலிக்க, அக்குரல் வந்த திசை வேகமாக திரும்பினாள் அமிர்தா… 

 

“ஐய்யோ சாரி மேம்… ஆத்மன் சார்” என அப்பெண் ஆரம்பித்தது எல்லாம் அமிர்தாவின் காதில் விழுந்தால் தானே! 

 

அவளோ அதே வேக ஓட்டத்துடன் ஆத்மனை நோக்கி வர, அதற்குள் அவனின் தந்தையும், சித்தியும் அவனைக் கட்டிக் கொண்டு அழ, 

 

ஒரு கையில் கட்டுடன் இருந்தவனோ, இன்னோரு கைகளில் தன் தாய் மற்றும் தந்தைக்கு ஆறுதலாய் தலையை வருடியவன், 

 

“எனக்கு ஒன்னும் இல்ல கையில சின்ன அடி தான்” என அவன் பெற்றோர்களிடம் சொன்ன பின்னர் தான் அமிர்தா வுக்கு உயிரே வந்தது… 

 

“என்னாச்சு ஆத்மா.. எப்படி கையில அடி” என ராஜேஷ் ரெட்டி பதற, 

 

“ஒன்னும் இல்லப்பா ஒரு சின்ன அடி.. என்னோட தப்பு தான்” என்றவனின் முன் கலங்கிய விழிகளுடன் ஆத்மனின் முன் வந்து நின்றாள் பெண்ணவள்… 

 

ஆனால் ஆத்மனோ அவளின் புறம் திரும்பவில்லை.. அமிர்தா வீட்டில் ஓய்வில் இருக்கிறாள் என்று அவன் நினைத்திருக்க, அவனோ தன் அம்மா மற்றும் அப்பாவை தேற்றுவதிலேயே கண்ணாக இருக்க, தன்னை ஆத்மன் தவிர்க்கிறானோ என்றே அமிர்தாவிற்கு தோன்றியது.. 

 

ஆத்மனின் பெற்றோர்களும் கூட மகனின் உடல்நிலையில் பதறியதில் அமிர்தாவை மறந்து தான் போயினர்… 

 

சோர்வான நடையுடன் தாங்கள் வந்த காரை நோக்கி சென்றாள் அமிர்தா… 

 

“நான் என் கார்ல வரேன்.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” என்ற ஆத்மனுக்கோ ஒரு கால் வர, 

 

“நீங்க கிளம்புங்க.. நான் வீட்டுக்கு வர கொஞ்சம் டைம் ஆகும்” என ஃபோனை அட்டென்ட் செய்ய, குடும்பத்தினரும் காரில் ஏறி கிளம்பி விட்டனர்…

 

காரில் ஏறும் போது தான் அமிர்தா இங்கு வந்ததை கவனித்த ஸ்வாதி, “ஏன் அண்ணி முன்னாடியே வந்துட்டீங்க” என கேட்டபடியே காரில் ஏற, அமிர்தாவோ மௌனத்தை தான் பதிலாக தந்தாள்…

 

வீட்டிற்கு வரும் வரை அமிர்தா எதுவும் பேசவில்லை.. ஆத்மனோ இசை வெளியீட்டு விழாவில் மும்முரமாக இருக்க, மீண்டும் விழா நடக்கும் தேதி தள்ளிச் சென்றது…

 

அமிர்தாவை ஆத்மன் வீட்டில் நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள்.. ஆனால் அமிர்தாவிற்கு தான் மனதில் பல வித உணர்வுகள்… 

 

அந்த ஜீவன் விஷயத்தில் கணவனை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறோம் என்கிற கவலை ஒருப்பக்கம்… அவன் தன்னை மன்னிப்பானா! தன்னை இதன் பின்னர் மனைவியாக ஏற்றுக்கொள்வானா? என்று அவளுள் பல கேள்விகள். 

 

விடை தெரியாமல் திக்கித் திணறியவளோ வீட்டினரின் முன்னே அழ கூட முடியாமல் திண்டாடித் தான் போனாள். 

 

 ஒரு வாரம் கடந்து இருந்தது.. 

 

ஆத்மன் இப்போது வரை வீட்டிற்கு வரவில்லை.. அவன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இசை நுட்ப கோளாறுகள் வந்ததால் பிரச்சனை வந்து இருக்க, அது தள்ளிப்போயிக் கொண்டே இருந்தது.. 

 

ஆத்மன் மனதில் அதைப் பற்றிய சிந்தனைகள் இருக்க, அவ்வப்போது அமிர்தாவின் நலனை தன் அன்னையிடம் கேட்டு விசாரித்தான்.. 

 

அமிர்தா தனக்கு கால் செய்யவில்லை.. தன்னை அவள் மருத்துவமனையில் வந்து பார்க்க கூட இல்லை என்கிற கோபம் தான் அவனை சூழ்ந்தது.. 

 

அது மட்டும் இன்றி ஜீவன் விஷயம் கூட அவனின் மனதில் ஒரு வித கோபத்தைக் கொடுத்தது.. 

 

அன்று காலை விழித்த அமிர்தாவிற்கு மனதே மிக கனமாக இருந்தது.. வாழ்க்கை எதை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை. 

 

அப்போது,“அமிர்தா.. கதவை திற மா” என வாசலில் நின்றபடி அவர்களின் அறைக்கதவை தட்டினார் கவிதா. 

 

“ஆன்.. வரேன் அத்தை” என்றபடி கதவை திறந்தாள் அமிர்தா. இப்போது எல்லாம் அவளின் மாமனார் மற்றும் மாமியாரை அத்தை மற்றும் மாமா என்று தான் அழைக்கிறாள் பெண்ணவள். 

 

“ஆத்மன் வந்து இருக்கான்.. கீழ வாம்மா” என இன்முகத்துடன் அவர் சொல்லிவிட்டு செல்ல, அமிர்தவின் இதயம் வேகமாக தடதடக்க ஆரம்பித்தது. 

 

‘ஆத்மன் கிட்ட மன்னிப்பு கேட்கணும். நானும் சர்வாவும் காதலிக்கல அது எல்லாமே நாங்க போட்ட டிராமான்னு சொல்லணும்.. முதல்ல ஆத்மன் என்ன பொண்டாட்டியா நினைக்குறாரான்னே தெரியலேயே.. உன்னை பொண்டாட்டியா நினைக்காமலா உன்னை ஹீரோ போல காப்பாத்தி இருக்காரு ’ என்றெல்லாம் தான் அவளின் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

 

வேகமாக குளித்து முடித்து விட்டு வெளியே வந்தவள் தன்னை ரொம்பவே மெனக்கிட்டு அலங்காரம் செய்தாள். ஆத்மன் மீது இப்போது அவளுக்கு அளவு கடந்த காதல் வந்துவிட்டது.. 

 

அவளை எத்தகைய ஆபத்தில் இருந்து காப்பாத்தி இருக்கிறான் அல்லவா!

 

இந்நேரம் ஜீவன் அவளை கெடுத்து இருந்தால் அவள் தன் உயிரையே மாய்த்து இருப்பாளே!

 

கீழே ஆவலாக சென்றவள் முன்னே மிக மிக கம்பீரமாக வசீகரமாக காட்சியளித்தான் அவளின் கணவன் ஆத்மன் ரெட்டி! முதல் முறை அவனை முழு மனதுடன் ரசிக்கிறாள் பெண்ணவள்.. மனதில் எத்தகைய குழப்பமும் இல்லை தயக்கமும் இல்லை! 

 

கருப்பு சட்டை மற்றும் ஜீன் அணிந்திருந்தான் ஆத்மன் ரெட்டி.. அவனை அப்படியே கண் இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்த அமிர்தாவின் கண்கள் அப்படியே உறைந்து நின்றது.. ஏனெனில் ஆத்மனின் கரத்தை அங்கு உரிமையாக பற்றிக் கொண்டு நின்று இருந்தது என்னவோ சிந்துஜா தான்.

 

தன்னவன் கரத்தை ஒருத்தி உரிமையாக கோர்த்து இருப்பதைக் கண்ட அமிர்தாவுக்கு அத்தனை கோபம் கலந்த ஏரிச்சல் வந்தது. 

 

மகனுடன் பேசிக் கொண்டு இருந்த ராஜேஷ் ரெட்டியோ மருமகள் வந்ததைக் கண்டு,“அமிர்தா வா..” என்று அழைக்க, அமிர்தாவின் கண்களோ ஆத்மனின் மீது தான் இருந்தது.. 

 

அவன் தன்னை பார்ப்பானா? என்கிற ஆவலுடன் அவள் அவனை பார்க்க, ஆத்மனோ சிந்துஜாவிடம் பேசிக்கொண்டு இருந்தானே தவிர.. அமிர்தா வருகிறாள் என்று காதில் விழுந்துமே அவன் திரும்பவில்லை.. 

 

அதில் பெண்ணவளுக்கு முகம் ரொம்பவே வாடிப் போக, “கங்குராஜூலேஷன்ஸ் அமிர்தா ஃபார் யுவர் ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட்.. உன்னோட ஃபர்ஸ்ட் சாங் ஆடியோவா ரிலீஸ் ஆயிடுச்சு.. நாங்க பெருசா ஆடியோ லாஞ்ச் பண்ண நினச்சோம் ஆனா ப்ரொடக்ஷன் ஸைட் கொஞ்சம் சிச்சுவேஷன் சரி இல்ல” என்ற சிந்துஜா அமிர்தாவின் கையை குழுக்க, அவளோ இன்ப அதிர்ச்சியுடன் நின்றாள். 

 

“உன் சாங் வெளிய வந்து ரொம்ப ஹிட் ஆயிடுச்சாம் அமிர்தா” என சந்தோஷத்துடன் கவிதா சொல்ல,

 

“எஸ்.. தாங்க்ஸ் போர் யு” என மென் புன்னகைத்தாள் சிந்துஜா. 

 

அமிர்தாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷம் பொங்கினாலும் அவளின் கண்கள் ஆத்மனை தான் ஏக்கமாக பார்த்தது.. 

 

அவனின் கடைக்கண் பார்வைக்காக அவள் காத்திருக்க, அவனோ அவளின் புறம் கூட திரும்பாமல் யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான். 

      

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!