பிரியாதிரு 30
சாருபாலா மற்றும் அனன்யாவிடம் பேசி வைத்த பின்னர் தான் அமிர்தாவிற்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது…
இப்போதும் கூட ஆத்மனிடம் தனக்கான உரிமையை கெஞ்ச அவளின் ஈகோ தடுத்தது…
மாறாக அவனின் மனதில் என்ன தான் உள்ளது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தாள்…
ஒருவேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவளுக்கு விருப்பமில்லை…
அவள் நினைத்தால் அவனின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கலாம்…
ஆனால் அப்படி கேட்க அவளுக்கு தான் முடியவில்லை.. ஏனெனில் அவள் பக்கமும் சில தவறுகள் இருக்கிறதே…
அன்று இரவு போல வீட்டிற்கு வந்தான் ஆத்மன் ரெட்டி.
அப்போது அமிர்தா கவிதா வுடன் நான் கிச்சனில் பேசிக்கொண்டு இருந்தாள்…
நாட்கள் கழித்து இன்று தான் அவனை வீட்டில் பார்க்கிறாள்… இன்று சிந்துஜாவுடன் வந்தான் தான் ஆனால் அவளுடனே திரும்பி சென்றுவிட்டான் அல்லவா…
இப்போது இரவில் அவன் வந்துருக்க அவனை பார்க்க வேண்டாம் என்று அவளின் அடம்பிடித்த மனது சொல்ல, அவளின் காதல் கொண்ட ஆழ்மனதோ அவளையும் மீறி கிச்சனில் இருந்து அவனை வெளியே எட்டிப் பார்த்தது… ஆனாலும் ஆத்மனின் கண்களில் படாமல் தான் இருந்தாள்..
“ஆத்மா… வேலை எல்லாம் முடிஞ்சுது தானே” என ராஜேஷ் ரெட்டி மகனின் சோர்வான முகத்தை பார்த்து கேட்க,
“எஸ் நானா.. ஃபைனலி நாளைக்கு படம் ரிலீஸ் ஆகுது…” என்றபடியே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான்…
சில நாட்களாகவே அவனுக்கு தூக்கம் என்பதே இல்லை… எடிட்டிங், பிரமோஷனில் வெகு பிசியாக இருந்தார்கள் ஆத்மனும் அவனின் டீமும்…
இந்தியா முழுக்க சுத்திக் கொண்டு இருந்தார்கள் மொத்த டீமும்.. சிந்துஜாவும் உடன் சென்றாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மனுக்கு மிக மிக உறுதுணையாக இருந்தாள் உள்ள தோழியாக.
இதோ இப்போது தந்தை முன் அமர்ந்து இருந்தவனின் சோர்வு தந்தையின் கண்ணில் படாமல் இல்லை…
ரெக்லைனர் சோஃபாவில் அமர்ந்துருந்த ஆத்மனோ சாய்வாக அமர்ந்தபடி இருக்க, ராஜேஷ் ரெட்டியோ தொலைக்காட்சியில் தான் கண்களை பதித்திருந்தார்…
கிச்சனில் சமையல் ஆள் உதவியுடன் கவிதா சமைத்துக் கொண்டுருக்க அவரின் பக்கத்தில் தான் நின்றுக் கொண்டு இருந்தாள் அமிர்தா.
“அமிர்தா! சாப்பாடு எல்லாம் ரெடி. ஆத்மனுக்கு வைச்சிடு” என்றவரிடம் மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திண்டாடினாள்…
மகன் மற்றும் மருமகளுக்குள் ஏதோ ஒரு விரிசல், இடைவெளி இருக்கிறது என்று உணர்ந்த கவிதா வேண்டும் என்றே இவ்வாறு பணித்தார்.
‘வேற வழி இல்ல.. நம்ம தான் எடுத்துட்டு போணும்’ என மனதில் நொந்தவளுக்கு படபடப்பு ஆரம்பித்தது…
அவனை எதிர்க்கொள்ள பயம் தாண்டிய படபடப்பு.. அது காதலின் வெளிப்பாடு என்று அவளுக்கு தெரிகிறது… ஆனால் அதை அவனிடம் வெளிக்காட்ட தான் பெண்ணவளுக்கு கொஞ்சம் கூட மனம் இறங்கவில்லை…
அமிர்தா சரியாக ஹாலை நோக்கி வர, “சினிமா செய்திகள்: பிரபல இளம் இயக்குனர் ஆத்மன் ரெட்டியுடன் கைக்கோர்த்து நிற்கும் இளம் தயாரிப்பாளர் சிந்துஜா… இருவரின் ஜோடிப் பொருத்தம் தான் இப்போது தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்… இதில் இயக்குனர் ஆத்மன் ரெட்டிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது” என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டுருக்க,
அதில் கோர்ட் சூட்டுடன் புன்னகை முகத்துடன் ஆத்மன் ரெட்டியும் அவனின் கர்த்தை பிடித்தபடி சற்று கவர்ச்சியான சேலையுடன் சிந்துஜாவும் புன்னகை முகத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வீடியோ தான் தற்போது டீவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுருக்கிறது…
அதனைக் கண்ட ராஜேஷ் ரெட்டியும், ஆத்மன் ரெட்டியும் அலட்சியமாக விட்டுவிட, ஹாலிற்கு வந்த அமிர்தா தான் தொலைக்காட்சியில் அந்த விஷயத்தை கண்டு, கேட்டு உறைநிலைக்கு சென்றுவிட்டாள்…
எத்தனை நொடிகள் இப்படியே நின்றாளோ, “அமிர்தா இன்னும் சாப்பாடு வைக்கலயா” என கேட்டபடி வந்த கவிதாவின் குரலில் தான் சுயம் பெற்றாள் அவள்.
“ஹா…ஹான் அத்தை.. இதோ வைக்குறேன்” என தடுமாறியவள் அப்படியே போய் டைனிங் டேபிள் பக்கம் நிற்க, கணவனுக்கு சாப்பாடு பரிமாற வந்த கவிதாவோ அமிர்தாவின் செய்கையை கண்டு சலிப்பு தான் வந்தது…
‘ஆத்மனை கூப்பிடாம இவ பாட்டுக்கு அங்க போய் நிக்குறா’ என மனதில் நொந்தவர் அமிர்தாவிடம் செய்கை செய்து, ‘ஆத்மனை வந்து கூப்பிடு’ என்றார்.
“பாவா சாப்பிட வாங்க” என தன் கணவனை அழைத்தவர் டைனிங் டேபிள் நோக்கி வர, எப்போதும் தன்னையும் சேர்த்து அழைக்கும் அன்னை இன்று அழைக்காமல் இருப்பதை கண்டு புரியாமல் இருந்தான்… ஆனாலும் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…
“சாப்பிட வாங்க” என மெதுவாக கேட்ட குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவனுக்கு அது யாரின் குரல் என்று கூடவா தெரியாமல் இருக்கும்…
அவளின் குரல் வந்த புறம் திரும்பியவனின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் பட்டென்று குனிந்து விட்டாள் அமிர்தா… அவளுக்கு அவனை எதிர்க்கொள்ள பயமா, கோபமா இல்லை வெட்கமா என்று அவளுக்கே தெரியவில்லை! அவளின் இதயம் படபடவென அடித்தது….
அவள் இத்தகைய மனநிலையில் இருக்க ஆத்மனோ, “என்னை கூப்பிடுறியா இல்ல தரைய கூப்பிடுறியா” என சாதாரணமாக தான் கேட்டான். ஆனால் அமிர்தாவிற்கு தான் அவன் அவளை அதட்டலிடுவது போலவே இருந்தது… அவளின் உடலில் லேசான நடுக்கம் அது ஆத்மனின் கண்களிலும் விழ,
‘கேள்வி கேட்டாலே நடுங்குறவளை வைச்சிட்டு என்ன தான் பண்ண போறேனோ!’ என மனதில் நொந்தவன் எதுவும் பேசாது சோஃபாவில் இருந்து எழுந்து டைனிங் டேபிள் வரை சென்று அமர்ந்தான்…
சிந்துஜாவின் விஷயம் பெண்ணவளின் மனதில் கொடிய முள்ளாக குத்திக்கொண்டே இருந்தாலும் இப்போது அனைவரின் முன் கேட்க முடியாமல் மனதிலியே வைத்து அழுத்திக் கொண்டவள், அவனுக்கு சாப்பாடு வைக்க டைனிங் டேபிள் நோக்கி வந்து தட்டு மற்றும் உணவு பதார்த்தங்களை எடுத்தவள் அவனின் முகத்தை கூட பாராமல் கடமையே கண்ணாயிரம் என்பது போல் அவனுக்கு பரிமாற, அவளைத் தான் முதலில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தான் ஆத்மன் ரெட்டி…
அமிர்தாவின் எண்ணவோட்டத்தில் சிந்துஜாவின் விஷயம் மனதை தோண்டி துருவ அவள் இவ்வாறு நடந்துக் கொள்ள, ஆத்மனுக்கோ அவள் வேண்டா வெறுப்பாக தனக்கு பரிமாற வந்தது போலவே இருந்தது…
ஏற்கனவே அவளின் மீது அவனுக்கு கோபம்.. ஆனாலும் அதை இப்போது வரை வெளிக்காட்டாமல் தான் இருக்கின்றான்…
இப்போது அவளின் செயல் அவனை மேலும் கடுப்பேத்த பட்டென்று கை நீட்டி தடுத்தவன், “அம்மா! எப்போவுமே நீங்க தானே எனக்கு பரிமாறுவீங்க.. இப்போ இன்னிக்கு என்னாச்சு!” என்றவன் கேள்வியாக கேட்க, அமிர்தாவிற்கு தான் ஒரு மாதிரி ஆனது…
“அதான் உன் பொண்டாட்டி வந்துட்டால கண்ணா” என கவிதா சமாளிக்க,
“ஆனாலும் இங்க எதுவும் மாறல” என்றவன் அழுத்தமான சொல்ல, அது அமிர்தாவிற்கு தான் மிகுந்த அவமானமாகி போனது.
