அத்தியாயம் 14
பிரகாஷும் அதற்கு சரி என்று தான் கூறினான். அந்த சமயத்தில் ராதையின் வீட்டில் தன் காதலைப் பற்றி கூறிவிடலாம் என்று பிரகாஷும் முடிவெடுத்தான்.
அதே சமயம் பிரகாஷின் வீட்டில் விஜயகுமார், மைதிலி மற்றும் கோதை வந்துருந்தார்கள். வந்தவர்களோ பிரகாஷை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக கேட்டிருக்க, பிரகாஷின் தந்தை ஆறுமுகமும் உடனே ஒப்புக்கொண்டார்.
ஏனெனில் அவர்கள் இருவரும் தொழில்துறை நண்பர்கள் தானே! அதுவும் இல்லாமல் விஜயகுமாரின் குடும்பத்தின் பின்னணியும் அவருக்கு தெரியும் அல்லவா!
“அப்புறம் விஜயகுமார் நீங்க எங்களுக்கு சம்மந்தி ஆகப் போறீங்க, ரொம்ப சந்தோஷம். ஆனாலும் இந்த விஷயத்தை பிரகாஷுக்குத் தெரியாமல் பண்றது தான் என் மனசுக்கு ஏதோ நெருடலாக இருக்கு” என்றார் ஆறுமுகம்.
“ஏங்க சும்மா இருங்க, பிரகாஷை எப்படி ஒத்துக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். கோதை தான் இந்த வீட்டு மருமகள்” என்றார் விஜயா புன்னகையுடன். அங்கு நின்றுக் கொண்டிருந்த வனிதாவிடம், நான் தான் வெற்றி பெற்றேன் என்பது போல பாவனை காட்டினாள் கோதை.
அன்று இரவு ராதைக்கு கால் செய்த வனிதா, “ஹாய் ராதை.. உனக்கு இந்த விஷயம் தெரியுமா! எங்க அத்தை திடீர்ன்னு என் அப்பாக்கு கால் பண்ணி நல்ல விஷயம் முடிவாகப் போகுது வீட்டுக்கு சீக்கிரம் வாங்கனு சொன்னாங்க, நாங்களும் போனோம். அங்க போய் பார்த்தா உன் அக்கா, பெரியப்பா, பெரியம்மா வந்திருந்தாங்க…”
“நான் உன்கிட்ட சொல்லவே இல்லைல. ஒரு மாசம் முன்னாடி நம்ம இங்க கோயம்புத்தூர் வந்தபோதே பிரகாஷ் அத்தான் என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறமும் அவரையே நினைச்சிட்டு இருக்க நான் லூசா என்ன? அதனால எங்க வீட்டுக்கே போய்ட்டோம்.”
“நான் தான் அத்தான் கிட்ட இருந்து மொத்தமா விலகிப்போயிட்டேன்! பிரகாஷ் அத்தானுக்கும் என் மேல அந்த மாதிரி அபிப்பிராயம் இல்லன்னு முடிவா சொன்ன அப்புறம் அவங்களும் அந்த விஷயத்தை விட்டுட்டாங்க. பிரகாஷ் அத்தானுக்கு வேற முறைப் பொண்ணும் இல்லை. அதனால பிரகாஷ் கூட சுத்திட்டு இருக்குற கோதையையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு அத்தை என்கிட்ட முன்னாடியே சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரும் காதலிக்குறாங்க போல அதான் எப்போ பாத்தாலும் ஜோடியா சுத்திட்டே இருக்காங்க” என்றாள் வனிதா.
“வனிதா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும், அதை ஃபோன் என்னால பேச முடியாது நேர்ல தான் பேசணும். நம்ம ரெண்டு பேரும் ஒரு தடவை ஒர் ரூஃப் டாப் ஹோட்டலுக்கு போனோமே அங்க வரியா?” என்று கேட்டாள் ராதை.
“சரிடி வரேன்” என்ற வனிதாவிடம், “என்னை, நீ வந்து கூட்டிட்டு போடி” என்றாள் ராதை.
“நீ எப்போ தான் வண்டி ஓட்ட கத்துப்பியோ? உன் அக்கா காரே ஓட்டுறா” என்றாள் வனிதா.
“சரிடி, நாளைக்கு பேசிக்கலாம்” என்று அழைப்பை கட் செய்தவள், நேராக தன் பாட்டியிடம் சென்று, “பாட்டி, அக்காக்கும் பிரகாஷ்க்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கோங்க” என்று கூறிவிட்டு உறங்கச் சென்று விட்டாள்.
இராஜேஸ்வரி பாட்டி கொஞ்ச நாட்களாகவே ராதையின் குழப்பமான முகத்தைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் பேத்தியே வாயைத் திறந்து சொல்லட்டும் என்று அமைதியாக காத்திருந்தார்.
பிரகாஷின் மொபைல் எண்ணை பிளாக் செய்திருந்தாள் ராதை. அதனால் அவளிடம் பேச நினைத்த பிரகாஷிற்கு ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது.
‘சரி இன்னும் கோதையோட பேர்த்ட்டே வர ஒரு வாரம் தானே இருக்கு அங்க எல்லாரையும் நேர்ல பாக்குற போது அவளோட பெரியப்பாகிட்டயே நேரா பேசிடலாம்’ என்று நினைத்தவன் உறங்கச் சென்றான்.
அடுத்த நாள் மாலை வனிதா ராதையை ரூஃப் டாப்பிற்கு அழைத்துச் சென்றாள். சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்துவிட்டு ராதையிடம் திரும்பிய வனிதா, “சொல்லுடி, எதுக்கு வர சொன்ன?” என்று கேட்டாள். வனிதா அப்படி கேட்ட அடுத்த கணமே எதுவும் சொல்லாமல் மடமடவென அழ ஆரம்பித்தாள் ராதை.
“ஏய் ராதை, என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா? சொல்லு எதுனாலும் என்கிட்ட சொல்லு” என்றாள் பயம் கலந்த படபடப்புடன்.
ராதையோ பிரகாஷ் தன்னை கோவில் பக்கத்தில் சந்தித்தது முதல் இப்போது அவன் நம்பரை பிளாக் செய்தவரை அனைத்தையும் கூறினாள்.
“ராதை… என்ன டி சொல்ற! நீ சொல்ற கதையைக் கேட்டு எனக்கு தலையே சுத்துது… எனக்கு இப்போ தான் புரியுது, எதுக்கு அத்தான் ரெண்டு வருஷம் முன்னாடி உன் நம்பர் கேட்டாருனு.. செம கமுக்கம்டி அவரு” என்றாள்.
“என் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுடி, மனசே ஒரு மாதிரி இருக்கு. ஒரு குறி சொல்றவங்க வேற என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க, தனியா வெளியே போக வேணாம்னு சொன்னாங்க. அது வேற பயமா இருக்கு.”
“அது மட்டும் இல்லாம அவன் வருவான் உன்னை அடைஞ்சே தீருவான்னு லாம் சொன்னாங்க. அதுல இருந்து எனக்கு பிரகாஷைப் பார்க்கவே பயமா இருக்குடி” என்றவளின் கைகள் லேசாக நடுங்கியது.
“ராதை ரிலாக்ஸ் ஆகு… நீ பிரகாஷ் அத்தானை விரும்புறியா?” என்று கேட்டாள் வனிதா.
“இல்லைடி, உண்மையா இல்ல… எனக்கு இந்த காதல் கல்யாணத்துல இப்போ சுத்தமா விருப்பம் இல்ல. நமக்கு வயசு இருபத்தி ஒன்னு தானே டி ஆகுது, இன்னும் அட்லீஸ்ட் மூனு வருஷமாவது எனக்கு வேலை பார்க்கணும்” என்றாள் ராதை.
“நீ பிரகாஷ் அத்தான் ப்ரபோஸ் பண்ண அப்போவே உன் வீட்டுல சொல்லிருக்கலாம்லடி, உன் வீட்டுல இல்லன்னாலும் அந்த பிரகாஷ் பைத்தியம்… அதான் உன் அருமை அக்கா கோதை கிட்டயாவது சொல்லிருக்கலாம்” என்றாள் வனிதா சலிப்பாக.
“நான் அன்னிக்கே சொல்லலாம்னு தான்டி நினைச்சு வீட்டிற்கு வந்தேன் ஆனால்…” என்று அன்று நடந்த பிரச்சனை பற்றிக் கூறிவிட்டு அழுதவள்,” அப்போ எப்படி நான் இதை சொல்ல முடியும்” என்றாள் ஆதங்கமாக.
“பெரியப்பாவும் பெரியம்மாவும் பிரகாஷை மாப்பிள்ளை பார்க்க போனதுக்கு அப்பறம் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. என்னால இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வந்திடக்கூடாது” என்று அழுதாள் ராதை.
“பிரச்சனையா… பிரகாஷ் உன்னை காதலிச்சிட்டு கண்டிப்பா கோதையை கல்யாணம் பண்ண மாட்டாரு ராதை. இந்த வாரம் எல்லாரும் ஊட்டி போறீங்கல்ல, கோதை பிறந்தநாளுக்காக அவங்க எங்களையும் இன்வைட் பண்ணிருக்காங்க.”
“அதனால நானும் உன் கூட இருப்பேன் பயப்படாத, எனக்கு தெரிஞ்சு கோதைக்கும் பிரகாஷ்க்கும் மேரேஜ்னு அவளுடைய பேர்ட்டே அன்னிக்கு சொல்லுவாங்கனு நினைக்குறேன். அப்படி தான் என் அத்தை, மாமா பேசிக்கிட்டாங்க.. பிரகாஷ் அத்தான் க்கு கோதையோட கல்யாணம் பேசின விஷயம் தெரியாது. அத்தானை குடும்பமா சேர்ந்து கோதை விஷயத்துல சர்ப்ரைஸ் பண்ண பிளான் பண்ணிருக்காங்க ஆனா அவர் உன்னை காதலிக்குறேன்னு சொல்லி எல்லாரையும் ஷாக் கொடுக்க போறாரு” என்றாள் வனிதா.
“அது ஏன் பிரகாஷ் கல்யாணத்தை பத்தி அவர்கிட்ட இன்னும் சொல்லல?” என்று சந்தேகமாகக் கேட்டாள் ராதை.
“என்னோட கெஸ் என்னனா, என் அத்தைக்கு பிரகாஷ்னா உயிரு, அவர் கோதையை காதலிச்சிருந்தா இந்நேரம் கோதைக்கிட்ட காதலை சொல்லிருப்பார். கோதைக்கிட்ட இதுவரைக்கும் சொல்லலை.”
“அதுனால பிரகாஷுக்கு காதல் ஆசை இல்லாத கோதையை கல்யாணம் பண்ணி வெச்சாங்கனா பிரகாஷ் தன் அம்மா மேல இருக்குற பாசம் விலகாம, மருமகளையும் தன் கைக்குள்ள போட்டுக்கலாம்னு பிளான் தான். அதுப்போக உன் பெரியப்பா, பெரியம்மா வெயிட்டு பார்ட்டி பணக்காரங்க ஈக்வல் டு பணக்காரங்க அவ்வளவு தான்டி லாஜிக்” என்றாள் வனிதா.
“சரிடி, இப்போ நான் என்ன பண்றது?” என்ற ராதையிடம், “நீ ஒன்னும் பண்ண வேண்டாம்டி, பிரகாஷ் தான உன்னை விரும்புறாரு, இதுல உன் தப்பு எதுவும் இல்ல. பொறுமையா வேடிக்கை பார்ப்போம். உன் மேல அம்பு பாய்ஞ்சா, நீ அவரை விரும்பவில்லைனு சொல்லிடு. அப்பறம் பிரகாஷ் பாடு, கோதை பாடு நமக்கென்ன?” என்றாள் வனிதா.
“ஐய்யோ கோதை அக்கா மனசு கஷ்டப்படக்கூடாதுடி…” என்ற ராதையிடம், “நீ இப்படியே அன்னை தெரசா மாதிரி பேசிக்கிட்டு இரு, உனக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு, இது நீ உன் அக்கா மேல பாவப்படுற… அவளால தான் இவ்வளவு பிரச்சனை, ஒருத்தன் தன்னை காதலிக்குறானானு தெரியாம அவனை அடைஞ்சே தீரணும்னு கங்கணம் கட்டிட்டு குடும்பத்தோடு வந்து மாப்பிள்ளை கேட்க வச்சிருக்கா.”
“எவ்வளவு சுயநலவாதி உன் அக்கா, இவ பிரகாஷைக் கல்யாணமே பண்ணினாலும் அந்த வாழ்க்கை அவளுக்கு நல்லா இருக்குமா என்ன?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் வனிதா.
“வனிதா ப்ளீஸ் போதும். அக்கா பிரகாஷ் கூட நல்லா இருக்கணும்” என்றாள் கெஞ்சுதலாக. அதன் பின்னர் வனிதா வாலும் எதுவும் பேசவில்லை.
***
