அத்தியாயம் 29
பேருந்து பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை அடைந்தது. “ராதை வா இறங்கலாம். இங்க இருந்து நாம போக வேண்டிய இடம் கே பி அக்ரஹாரா. ஆட்டோ ஏறி போகலாம்” என்று ராதையை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினாள். அப்போது கூட ராதை தன் ஸ்டோலைக் கழட்டவில்லை.
கே பி அக்ரஹாரத்தில் ஒரு விடுதியில் நின்றது ஆட்டோ. பின் இருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். ஏற்கனவே தான் வருவதைப் பற்றி வார்டனுக்கு தெரிவித்து இருந்ததால் வார்டனைக் கண்ட பின்னர் வனிதா, ராதைக்கும் ஒரு அறை கேட்டாள்.
முதலில் மறுத்த வார்டன் பின்பு தெளிவாக, “இங்க பாரும்மா, இது வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். இந்த பொண்ணு வனிதாக்கு வேலை இருக்கு அவ தங்குறா, ஆனா உனக்கு வேலை இல்லாம நான் எப்படி உன்னை தங்க வைக்குறது? இதெல்லாம் முடியாத காரியம், நீ இங்கே தங்க முடியாது” என்று உறுதியாகக் கூறினார். இதைக் கேட்ட ராதையின் கண்களில் கண்ணீர் மூண்டது.
***
“விஜயகுமார் கதவைத் திறப்பா… ராதை கடிதம் எழுதி வெச்சிட்டு இந்த வீட்டை விட்டே போய்ட்டாள்…” என்று இராஜேஸ்வரி பாட்டி அலறியதில், விஜயகுமார் மற்றும் மைதிலி பதறி வந்து கதவைத் திறந்தார்கள்.
இவர்களுடைய ஆர்ப்பாட்டத்தில் எழுந்து வந்த கோதை, விஷயத்தை அறிந்த பின் சந்தோஷப்பட்டாள். விஜயகுமார் மற்றும் மைதிலி தேம்பி அழுதார்கள். அவர்களால் இதை நம்பவும் முடியவில்லை, தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வு இருந்தது. தங்களால் தான் அந்த சின்ன பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி, இப்போது அவள் எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை என்று.
‘சனியன் ஒழிஞ்சா’ என்று நினைத்த கோதை, தான் ஒரு முட்டாள் என்பதை உணராமல் வம்சியின் நம்பருக்கு அழைத்தாள்.
நீண்ட ஏழு நாட்கள் பிறகு அன்று தான் நன்றாக உறங்கிய வம்சியின் கைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. யார் என்று பார்த்தவனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்து, “சொல்லு கோதை” என்றான் எரிச்சலாக.
“க்ருஷ்… அந்த அனாதை, லெட்டர் எழுதி வைச்சிட்டு ஓடிப் போயிட்டாள்” என்று அவள் சொல்ல, மறுபுறம் இங்கு வம்சிக்கு வார்த்தையே வரவில்லை.
அவன் மனதில் நிறைய கேள்விகள், ‘எப்படி ஆள் இருந்தும் தப்பிச்சா? எப்படி அவளுக்கு என்கிட்ட இருந்து தப்பிக்க தைரியம் வந்துச்சு? எங்க போயிருப்பா? யார்கூட போயிருப்பா?’ என்று கேள்விக்கு மேல் கேள்வி அவனுள் எழுந்தது.
‘என்ன ரொம்ப நேரமா பேசாமலேயே இருக்கான்?’ என்று நினைத்த கோதை, “க்ருஷ்… க்ருஷ்…” என்று கத்தினாள். ஆனால் கோதை சொன்ன விஷயத்தைக் கேட்ட சிறிது நிமிடத்திலேயே கால்லை துண்டித்த வம்சி, உடனடியாக குளித்துவிட்டு சாப்பிட்டவுடன் கோயம்புத்தூருக்கு விமானத்தில் விரைந்தான்.
“அம்மா, வம்சி அண்ணாக்கு என்ன ஆச்சு? நான் தான் காலையில சாப்பாடு வைச்சேன், என்கிட்ட கூட ஒரு வார்த்தை அண்ணா பேசல. வேலைக்காரங்க, சமையல்காரங்க இருந்தும் இன்னைக்கு ஏன் நான் சாப்பாடு வைக்கிறேன்னு அண்ணா என்னைக் கேட்கவே இல்ல… இன்னிக்கு என்னோட பிறந்தநாள், அண்ணா விஷ் பண்ணுவாருன்னு ஆசையில தான் நானே பரிமாறுனேன். ஆனா அண்ணா ஏதோ கடுப்பாகவே இருந்தாங்க… நான் பேசிட்டே இருக்கேன் மா நீங்க ஏன் இப்படி சோகமா இருக்கீங்க?” என்று கேட்ட யசோதாவிடம் முந்தைய நாள் இரவு நடந்த அனைத்தையும் கூறி அழுதார் லட்சுமி. இந்த விஷயம் விஸ்வநாதன் மற்றும் காந்திமதியையும் அடைந்தது அவர்களும் பேரனின் இந்த செயலில் திகைத்தார்கள்.
***
“மேடம் ப்ளிஸ் எனக்கு ஒரு பத்து நாள் டைம் கொடுங்க, நான் இன்ஜினீயரிங்ல டிஸ்டின்ங்ஷன் வாங்கி இருக்கேன். கண்டிப்பா பத்து நாளுல எனக்கு வேலை கிடைச்சிடும்” என்று அழுது கெஞ்சினாள் ராதை.
தன் தோழியின் நிலைமையைக் கண்டு வனிதாவின் கண்களிலும் கண்ணீர் வர ஆரம்பித்தது. அவளும் கெஞ்சி பார்த்தாள்.
“உனக்கு பத்து நாள் தான் மா டைம் அதுக்குள்ள ஏதாவது வேலை கிடைச்சிருக்கணும், அப்படி இல்லனா உனக்கு இங்க இடம் இல்லை” என்று தீர்மானமாக ஆங்கிலத்தில் கூறிய வார்டன் அவர்களுக்கு செக் இன் செய்துவிட்டு சாவியைக் கொடுத்தார்.
அறையில் நுழைந்த உடனே ராதை சோர்வாக அமர்ந்தாள். தன் அறையில் பொருள்களை வைத்து விட்டு வந்த வனிதா உடனே ராதைக்கு ஆறுதல் கூற எண்ணி அவளின் அறைக்கு விரைந்தாள்.
“அழாத ராதை, உன் படிப்புக்கும் திறமைக்கும் கண்டிப்பா வேலை கிடைச்சிடும். ச்சே என்ன குடும்பமோ… உன் பெரியப்பா, பெரியம்மா, உன் நொக்கா இவங்களுக்காக பெங்களூர்ல கிடைச்ச ரெண்டு ஆஃபரையும் ரிஜெக்ட் பண்ணிட்டோம்.. கோயம்புத்தூர்ல கிடைச்ச வேலைக்கு இப்போ போகவும் முடியாது… சரி நீ கவலைப்படாத, பெங்களூர்ல டாப் ஐடி கம்பெனீஸ் நிறைய இருக்கு. நீ இப்போவே லாப்டாப் எடுத்து அப்ளை பண்ணு” என்றாள் வனிதா ஆறுதலாக.
“ரெண்டு வாரம் முன்னாடி ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணிருந்தேன் டி.. நான் அப்ளை பண்ணும் போது அது கோயம்புத்தூர்ன்னு தான் போட்டு இருந்துச்சு.. ஆனா இப்போ அதே கம்பெனிக்கு பேங்களூர்ல இருந்து இன்டர்வியூக்கு மெயில் வந்துருக்கு..” எனக்கு ஒரு கம்பெனியில் இருந்து இன்டர்வியூக்கு கூப்பிட்டு இருக்காங்க. அது இந்தியாவிலேயே டாப் ஐடி கம்பெனி டி…” என்று இழுத்தாள் ராதை.
“அப்போ ஏன்டி இழுக்குற?” என்று கேட்டாள் வனிதா.
“அது இல்லைடி, அது இந்தியாவிலேயே டாப் ஐடி கம்பெனி. பெரிய யூனிவர்சிட்டி பி ஸ்கூல்ஸ்ல படிச்சவங்க வேலை பார்க்குற கம்பெனி. என்கிட்ட எச் ஆர் கால் பேசும்போதே உங்களுக்கு வேலை கிடைச்சாலும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்குற மாதிரி தான் இருக்கும்னு சொன்னாரு” என்று முடித்தாள்.
“அதுக்கு என்னடி, இந்த காலத்துலயும் நீ நைட் ஷிப்டிற்கு எல்லாம் பயப்படுறியா? இப்போ கம்பெனியிலேயே கேப் ஃபெசிலிட்டி தராங்க, ரொம்ப சேஃபா இருக்கு. அதனால நீ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு, இப்போ முதல்ல உனக்கு வேலை கிடைக்கணும்டி, அதான் ரொம்ப முக்கியம்” என்றாள் வனிதா.
வனிதா சொல்வதிலும் அர்த்தம் இருப்பதால் அரைமனதாக அந்த இன்டர்வியூவை அட்டென்ட் செய்வதாகச் சொன்னாள் ராதை.
***
பிரகாஷின் அறைக் கதவை வேகமாக உடைத்துக் கொண்டு வந்த வம்சி, அவன் சட்டையைப் பிடித்து, “ராதை எங்க?” என்று அதட்டலுடன் உலுக்கினான்.
ஏற்கனவே தன் வாழ்க்கையே பரிபோன சோகத்தில், வெறுப்பில் இருந்த பிரகாஷ், வம்சி சொன்னதைக் கேட்டு வம்சியின் சட்டையைப் பிடித்து, “ஏய் விளையாடாத, உன் கஸ்டடியில ராதையின் வீடு இருக்கும் போது என்கிட்ட வந்து கேட்கிற? அவளை என்னடா பண்ண?” என்று கத்தினான் பிரகாஷ்.
பிரகாஷை வேகமாக கீழே தள்ளிய வம்சி, ராதையின் வீட்டிற்கு விரைந்தான். அங்கு அவன் வைத்த ஆள்கள் படபடப்பாக பயத்துடன் நின்றுக் கொண்டிருந்தனர். தன் காரில் இருந்து வேகமாக இறங்கியவன், கோபத்தில் மூவரையும் தாக்கினான்.
“டாம் இட், உங்களைத் தாண்டி அவ ஓடிட்டாள். நீங்க நல்லா மலைமாடு மாதிரி தூங்கிட்டு இருந்தீங்களா? உங்களை…” என்று மேலும் தாக்கியவன் கோபத்துடன் தன் காரை எடுத்துக் கிளம்பினான்.
“யார் காலிங் பெல்லை அடிச்சிட்டே இருக்காங்க?” என்று முணுமுணுத்தபடி கதவைத் திறந்த ரமாவின் முன் ரௌத்திரமான முகத்துடன் நின்றுக கொண்டிருந்தான் வம்சி.
‘இவன் அவனா? அவனை மாதிரி தான் இருக்கு. ஆமா ராதையோட கழுத்துல தாலி கட்டினவன் தான்’ என்று மனதில் சுதாரித்தவர், “தம்பி யாரு நீங்க?” என்று நடித்தார்.
அவரைத் தாண்டி உள்ளே வந்த வம்சி, வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் போய் யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்து விட்டு, ரமாவிடம் திரும்பி, “உங்களோட பொண்ணு வனிதா எங்க?” என்று கேட்டான் அதட்டலாக.
‘ராதை எங்கன்னு கேட்பான், நம்ம தெரியாதுனு சொல்லிவிட்டு போயிடலாம்னு பார்த்தா, இவன் பலே கில்லாடி போல, வனிதா எங்கன்னு கேட்குறான்.ஙஇவன் ரொம்ப ஆபத்தானவன் தான் போல’ என்று நினைத்தவர் முன், “உங்க பொண்ணு வனிதா எங்கே?” என்று இந்த முறை அழுத்தமாக எரிச்சலாகக் கேட்டான்.
“அது… அவ நேத்தே பெங்களூர் போய்ட்டா பா, அவளுக்கு அங்கே வேலை கிடைச்சிருக்கு” என்று பூசி மொழுகினார் ரமா.
“உங்க பொண்ணும் ராதையும் தான் இணை பிரியா தோழிகள் ஆச்சே, அப்போ என் கெஸ் கரெக்ட்னா ராதை பெங்களூர்ல தான் இப்போ இருக்கணும்” என்றான் புருவத்தை உயர்த்தி.
“என்ன தம்பி ராதையைக் காணுமா? எங்களுக்கு எதுவும் தெரியாது தம்பி. வனிதாவுக்கும் ராதை காணாம போனது இப்போ நான் கால் பண்ணி சொன்னா தான் தெரியும்” என்று நடித்தார்.
யோசனையாக அவரைப் பார்த்தவன், அவரிடம் எதுவும் சொல்லாமல் தன் காரை எடுத்தான்.
***
