அத்தியாயம் 35

அத்தியாயம் 35

 

“அம்மா கொசு கடிக்குது என்னால இங்கே இருக்க முடியல” என்று அழுத மகளைப் பார்க்க பாவமாகவும் அதேசமயம் எரிச்சலாகவும் இருந்தது மைதிலிக்கு. இவளால் தானே இந்த நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்று அவர் நினைக்கும் போதே அவருக்கு அவருடைய அண்ணன் சேதுராமனிடம் இருந்து கால் வந்தது.

 

“மைதிலி, கோதை! வம்சிக்கு கால் பண்ணாளாம் ம்மா, வம்சி அவளுக்கு எந்த உதவியும் செய்ய தயாரா இல்லை. அவக்கிட்ட பேசவும் விருப்பமில்லைனு சொல்லிட்டான். என்னால வம்சியை மீறி எந்த உதவியும் பண்ண முடியாது மா, என்னை மன்னிச்சுடு” என்று தயங்கியவரிடம், 

 

“அண்ணா, நீங்க ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்? எங்களோட இந்த நிலைமைக்குக் காரணம் நாங்க தான். இதை நாங்க அனுபவிச்சு தான் ஆகணும். வம்சியோட கோபம் நியாயமானது.”

 

“ஆனால் அவன் என் பொண்ணு ராதையோட வாழ்க்கையையே சீரழிச்சுட்டான். இப்போ அவ எங்க இருக்கானு கூட எனக்கு தெரியல. அத்தையோட இறப்பு பத்தி அவளுக்குத் தெரிஞ்சா அதை எப்படித் தாங்குவானு என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல ண்ணா” என்று அழுதார். 

 

ராதை இங்குதான் பத்திரமாக இருக்கிறாள் என்று கூட சொல்ல முடியாத நிலைமையில் இருந்த வம்சியின் தந்தை தன் நிலையை நினைத்து வெட்கினார். 

 

“இப்போ எங்க இருக்கீங்க?” என்று கேட்ட அண்ணனிடம், “எங்க வீட்டு தோட்டக்காரனுக்கு தெரிஞ்ச ஒரு பத்துக்கு பத்து வீட்டுல இருக்கோம் ண்ணா…” என்று சொல்லும்போதே அவர் குமுறினார். 

 

“ஏன் உங்க வீடு என்ன ஆச்சும்மா?” என பதறினார் அண்ணனாக. 

 

“தொழிலை நம்பித்தான் நாங்க இருந்தோம். அதுவே எங்க கையை விட்டு இப்போ போயிடுச்சு. வெறும் வீட்டை வைச்சு என்ன பண்றது ண்ணா? மாளிகை போல இருக்குற எங்க வீட்டுல பராமரிப்பு வேலைக்காரங்க கூலியே ஒரு மாசம் ஒரு லட்சம் வரை செலவாகும்.”

 

“எங்க கிட்ட பேங்குல இப்போ ஃபிக்ஸட் டெப்பாஸிட் பணம் மொத்தமே பத்து லட்சம் தான் இருக்கு. சேர்த்து வைச்ச பணம் எல்லாத்தையும் இந்த ஊதாரி கோதைக்காக செலவு செஞ்சுட்டு இப்போ கோட்டை விட்டுட்டார் இவர்.”

 

“இப்போ இருக்குற பத்து லட்சமே ராதைக்குச் சேர வேண்டிய அவளுக்கு சொந்தமான பணம் தான், அதைத் தொடவே அசிங்கமாக இருக்கு ண்ணா. ஆனா எங்களோட நிலைமை இப்போ மோசமா இருக்குறதால எங்களுக்கு வேறு வழியும் தெரியல ண்ணா” என்று அழுதார். 

 

“அந்த வீட்டை வாங்க ஆள் வந்துட்டாங்களா?” என்று கேட்டவரிடம், 

 

“யாரோ ஒருத்தர் அந்த வீட்டை எட்டு கோடிக்கு கேட்டிருக்காங்க ண்ணா, யாருனு எனக்கு தெரியல” என்றார்.

 

“ஏதாவது பிரச்சனைனா கால் பண்ணுமா” என்று காலை அணைத்துவிட்டார் சேதுராமன். 

 

கோதைக்கு இப்போது தன் மேலேயே தான் கோபம், எரிச்சல் எல்லாம் வந்தது. பிரகாஷுக்காக எவ்வளவு பெரிய தப்பு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தாள். தன்னுடைய அப்பாவே தன்னிடம் பேசாமல் ஒதுக்கி வைத்து விட்டாரே, இதை எப்படி சரி செய்ய போகிறோம் என்று யோசித்தாள். பின் ஒரு முடிவு எடுத்தவளாக தன் அம்மாவிடம் சென்றாள். 

 

“அம்மா, நான் வேலைக்கு போகப் போறேன். எனக்கு படிப்பு வராது மா, எனக்கு தெரிஞ்ச ஒன்னு என்னை அழகுபடுத்திக் கொள்றது மட்டும் தான். அதனால நான் ஒரு பார்லர்ல வேலை கிடைக்குதானு பார்க்குறேன்” என்று கூறி விட்டு வெளியேச் சென்றாள். 

 

வெளியேச் செல்லும் மகளைப் பாவமாக பார்த்தார் அன்னை.

 

***

 

வம்சி ஹாலுக்கு சென்ற போது தன் அன்னை லட்சுமியின் பார்வை கூர்மையாக விழுந்ததைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தான். 

 

ஆனாலும் தாய் மனம் விடாமல், “வேதந்த் சாப்பிட வா” என்று பரிமாறத் தொடங்கினார் லட்சுமி.

 

வேகமாக குளித்துவிட்டு வந்த ராதை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் போதே, “அண்ணி, அண்ணா உங்களை கீழே கூப்பிட்டாங்க” என்று ராதையின் பக்கத்தில் வந்த யசோதா அவளின் கையைப் பிடித்து, 

 

“அண்ணி அது வந்து சாரி, நான் உங்களை இதுவரை நிறைய அவமானப்படுத்தி இருக்கேன். இனி அந்தத் தப்பை கண்டிப்பா செய்ய மாட்டேன்… அப்புறம் அண்ணி இன்னிக்கு நீங்க போட்டு இருக்குற சீனா சில்க் சேரி உங்களுக்கு ரொம்ப கச்சிதமாக இருக்கு” என்ற யசோதாவிடம் சிரிக்கக் கூட ராதைக்குத் தோன்றவில்லை. 

 

யசோதா உடன் கீழே சென்றுக் கொண்டிருந்த ராதை அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த வம்சியைக் கண்டாள். 

 

“அண்ணி வாங்க வந்து உட்காருங்க” என்று ராதையின் கையை இழுத்துக்கொண்டு வந்து வம்சியின் பக்கத்து இருக்கையில் அமர வைத்தாள் யசோதா. 

 

யாரிடமோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்த வம்சி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியின் முகத்தை பார்க்கவில்லை. ஆனால் தன் அருகில் அவள் அமர்ந்து இருக்கிறாள் என்பதை சந்தோஷமாக உணர்ந்தான். 

 

“இதுவும் உன் வீடு தான்மா நிம்மதியா சாப்பிடு” என்றார் விஸ்வநாதன்.

 

“ராதைக்கு சாப்பாடு பரிமாறு லட்சுமி” என்றார் காந்திமதி. 

 

தன் மாமியாரை மனதில் திட்டியவர், வேறு வழியின்றி ராதைக்குச் சாப்பாடு வைத்தார். அவர் சாப்பாடு வைத்த விதமே அவருக்கு ராதையைப் பிடிக்கவில்லை என்று அனைவருக்கும் உணர்த்தியது. 

 

வம்சி தன் தாயின் செயலைக் கண்டு கடுப்பானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அப்போதுதான் வீட்டினுள் வந்தாள் ஷிவானி.வம்சியின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் புதியவள் தான் ராதை என்று உணர்ந்த ஷிவானி கடுப்படைந்தாள். 

 

நேராக தன் அத்தையிடம் வந்து, “அத்தை, நானும் சாப்பிடல. எனக்கும் சாப்பாடு வைங்க” என்று வம்சியின் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டவள், ராதையை வைத்த கண் எடுக்காமல் முறைத்துக் கொண்டிருந்தாள். 

 

அவளின் அழகை கண்டு பொறாமை கொண்டாள் ஷிவானி. வம்சி ராதையின் மீது சாய்ந்து விடுவானோ என்கிற அச்சம் அவளுக்குள் தோன்றத் தொடங்கியது. 

 

சாப்பிட்டு முடித்த வம்சி அப்போதுதான் ராதையைக் கண்டான். தன் முன்னே தேவதைபோல் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் அழகாக இருந்த தன் மனைவியின் மேல் கண்ணை வைத்தவனுக்கு வேறு எங்கும் திருப்ப மனம் வரவில்லை. 

 

“ஷிவானி, உனக்கு இங்க என்ன வேலை? காலையிலேயே வந்து இருக்க?” என்று கேள்வி கேட்டான் வம்சி. 

 

“அது வந்து சும்மா தான் வந்தேன் வம்சி” என்று இழுத்தவள் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள். 

 

“ராதை சாப்பிட்டு முடிச்சிட்டு என்னோட கிளம்பு” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்த சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் வம்சி. 

 

‘எதுக்கு இவன் என்னை கூப்பிடுறான்?’ என யோசித்தவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். 

 

ராதையைத் தன்னோடு காரில் அழைத்துச் சென்றவனின் காரோ நின்ற இடம் கோயம்புத்தூர். அங்கே வந்த உடனே ராதையின் மனது தனது பாட்டி மற்றும் குடும்பத்தை நினைத்து கலங்கியது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றவன் அவளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றான். 

 

ராதைக்கோ, இப்போது தன்னை வம்சி எதுவும் செய்ய மாட்டான் அப்படி செய்ய நினைத்தால் நேற்றே செய்திருக்க வேண்டும் என்று துணிவாக தான் சென்றாள். 

 

பணக்காரர்கள் மட்டுமே வந்து போகும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அது. அங்கு தாங்கள் சென்ற அறையில் உள்ள வசதியைக் கண்ட ராதைக்கு எல்லாம் புதிதாய் இருந்தது. வம்சி யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தான். பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வரும் வரை கூட வம்சி ராதையிடம் எதுவும் பேசவில்லை. 

 

அவர்கள் வந்திருந்த கொஞ்ச நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்தாள் தாரிகா. அவளைக் கண்டு எரிச்சல் அடைந்த வம்சி, “ஏன் இவ்வளவு நேரம் தாரிகா?” என்று கேட்டான். 

 

“சாரி பாஸ், அது வந்து நீங்க திடீர்ன்னு பிளைட் புக் பண்ணுவீங்கனு நான் நினைக்கல. அதான் கிளம்பி வரதுக்கு லேட் ஆயிடுச்சு” என்று பயத்துடன் சொன்னாள். 

 

“ம்ம்ம் எனக்கு டைமிங் ரொம்ப முக்கியம். நான் புக் பண்ண பிளைட் மிஸ் பண்ணிட்டு அடுத்த பிளைட்டுல வந்திருக்க, உனக்காக நான் இங்க காத்திருக்கணுமா?” என்றவனோ கோபத்தை அடக்கி, “நான் வெளியே கிளம்புறேன், நான் வர வரைக்கும் இவளோட இரு… இவ தப்பிக்க நினைச்சா உன்னை கொன்னுடுவேன்” என்றவனோ ராதையின் பக்கம் திரும்பினான்.

 

“உனக்கும் நான் சொன்னது காதுல விழுந்துச்சு தானே, இவ உயிர் இப்போ உன் கையில” என்று மடமடவென வெளியேறினான் வம்சி. 

 

வம்சி, ராதையை கோயம்புத்தூர் அழைத்து வந்ததன் காரணம் லட்சுமி. தன் அன்னை இவளை வார்த்தையால் வதைக்கக் கூடாது என்று அவளைத் தன்னோடு அழைத்து வந்தவன், இப்போது தாரிகாவை பகடைக்காயாக வைத்தான். 

 

அவனுக்குத் தெரியும் ராதையின் நல்ல மனதை பற்றி! தாரிகாவிற்காகத் தப்பிக்காமல் இருப்பாள் என்று ஆணித்தரமாக நம்பினான். அந்த உறுதியுடன் அந்த வீட்டை அடைந்தான்.

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!