வம்சியின் காரில் ஏறிய ராதைக்கு சிந்தனை அனைத்துமே முதல் நாள் வேலை எப்படி இருக்குமோ என்கிற நினைப்பு மட்டுமே இருந்தது. தன் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவன் இறுக்கமாக வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் கவனிக்க தவறிவிட்டாள்.
தன் ஜாக்குவார் காரை தனக்குரிய தனி பார்க்கிங்கில் விட்ட வம்சி, “இறங்கு” என்று மட்டும் ஒற்றை வார்த்தை கூறினான்.
அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை உணராதவள், அங்கு தாரிகா வந்து தன்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த போது தன் சுய உணர்வுக்கு வந்து மறு புன்னகை செய்தாள்.
“தாரிகா, நீ ராதையை கூட்டிட்டு உள்ளே போ, நமக்கு இப்போ போயிட்டு இருக்குற நம்மளோட பெஸ்ட் ப்ராஜெக்ட் ஆன ‘அட்ரி’ல தான் ராதை டெவலப்பரா இருக்கணும்” என்றபடி தன் கூலர்ஸைப் போட்டுவிட்டு கர்வமாக காரை சாற்றியவன் ராதையைத் திரும்பிக் கூட பார்க்காமல் முன்னே சென்றுவிட்டான்.
‘வீட்டுல அவர் பாட்டி கிட்ட நல்லா சிரிச்சு பேசுனாரே, நம்மகிட்ட மட்டும் ஏன் இப்படி உர்ருனு இருக்காரு? ஒருவேள இவ்வளவு பெரிய கம்பெனியோட ஓனர்னு நம்மகிட்ட கெத்தை காட்டுறாரோ’ என நினைத்தபடி தாரிகாவோடு கம்பெனிக்குள் சென்றாள்.
பிரம்மாண்டமாக காணப்பட்ட அந்த வி2கே ஐடி கம்பெனியில் அடி எடுத்து வைப்பது ராதைக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. மிகவும் திறமை வாய்ந்தவர்கள் மட்டுமே வேலை பார்க்கும் இந்த நிறுவனத்தில் தனக்கும் வேலை கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி கொண்டவள் தாரிகாவின் பின்னே ஆவலோடு சென்றாள்.
ராதைக்கு ஒதுக்கப்பட்ட ப்ராஜெக்ட் டீமிடம் அழைத்துச் சென்ற தாரிகா, “கைய்ஸ், ஷி இஸ் கோமகள் ராதை. யுவர் டீம்மேட்” என்று அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு நகர்ந்தாள்.
வம்சி தாரிகாவுக்கு எந்த கட்டளையும் கொடுக்காததால் ராதை வம்சியின் மனைவி என்பதைச் சொல்லாமல் வந்துவிட்டாள் தாரிகா.
மொத்தம் எட்டு தளங்களைக் கொண்ட அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் எட்டாவது தளத்தில் இருந்த வம்சிக்கு ஐந்தாவது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராதை எங்கோ தூரமாய் சென்றது போல் உணர்ந்தான்.
அதனால் அட்மின் டிபாட்மென்ட்டில் இருக்கும் சிசிடிவியைத் தன்னுடைய லாப்டாப்பில் இணைத்து ராதை என்ன செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது என்னவோ ராதையின் டீம் ஆண்கள் அவளிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது தான். ராதை ஆண்களிடம் ஒதுங்கி இருக்கும் ரகம் என்பதால் அவள் பெரிதாக சிரித்து பேசவில்லை.
எல்லாவற்றையும் கருப்பு கண்ணாடி அணிந்துக் கொண்டு பார்த்தால் அது தப்பாகத் தான் தெரியும் என்று உணர்ந்த வம்சி இதனைக் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய ஸ்கெடியூலைப் பார்த்து பிரணவை அழைத்தான்.
அன்று வம்சியிடம் அடி வாங்கிய பின்னர் இன்று தான் அவனை தனிமையில் சந்திக்கப் போகும் பிரணவிற்கு மனது படபடப்பாக இருந்தது. தன்னுடன் படித்த யசோதாவை நான்கு வருடங்களாக காதலித்த பிரணவ் யசோதாவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து வம்சியின் மனதில் இடம் பிடிக்கவே அவனுடைய கம்பெனியில் டைரக்ட் பிஏ வாக சேர்ந்தான்.
எப்போதும் வம்சியின் மேல் மரியாதை கலந்த பயம் பிரணவிற்கு உண்டு. அன்று ராதைக்கு உதவி வம்சியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ராதையைத் தூக்குகிறேன் என்று அவன் சொன்னது அவனுக்கே திருப்பி ஆப்பு வைத்தது.
“மே ஐ கம் இன் பாஸ்” என்று பயத்துடன் கேட்ட பிரணவ் வம்சி உள்ளே வரச்சொன்னதும், “பாஸ் அது வந்து…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே, “ஸ்டாப் இட் பிரணவ், நீ யார் என்னனு எனக்கு தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கியா? நீயும் என் தங்கச்சியும் காதலிக்குறீங்க” என்றபடி எழுந்தான்.
அவன் பிரணவின் பக்கத்தில் வரும்போதே, ‘ஐய்யயோ மாட்டிக்கிட்டோமே, மறுபடியும் அடிச்சிடுவாரோ?’ என்று அவன் மனதில் நடுங்கிக் கொண்டு இருக்கும் போதே, “நீ இன்டர்வியூல சுமாரா பெர்பார்ம் பண்ணியும் எடுக்கறதுக்கு நான் என்ன முட்டாளா…?”
“நீ எதுக்கு என் கிட்ட வேலைக்கு வந்தன்னு எல்லாமே எனக்குத் தெரியும். எனக்கும் ஆல்மோஸ்ட் உன்னை பிடிச்சிருந்தது. எனக்கு பிடிக்கிது பிடிக்கல, ஆனா நான் காதலை மதிக்குறவன். அதனால என் தங்கச்சி விரும்புன உன்னை கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு இருக்கேன்” என்று மென் புன்னகை சிந்தி விட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.
பிரணவ்வோ வம்சி பேசியதில் மெய் மறந்து அப்படியே சிலை போல நின்றான்.
“இந்த சண்டே உன் அப்பா, அம்மாவோட வந்து எங்க வீட்டுல பொண்ணு கேளு” என்று முடித்தவன் சந்தோஷத்தில் இருந்த பிரணவைப் பார்த்து, “அதான் பச்சைக் கொடி காட்டியாச்சே, அப்புறம் எதுக்கு இங்க இருக்க, ரிசைன் பண்ணிட்டு உன்னுடைய வேலையைப் பாரு” என்று தன் லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார், அது வந்து… நான் உங்க கூடவே இருக்கேன் உங்களுக்கு பிஏவா” என்று இழுத்தான்.
“நோ பிரணவ், எப்போவுமே நீ உன்னோட தனித்துவத்தை நிரூபிக்கணும், என்னோட கூட்டுக்குள்ள இருந்து வெளியே போகணும்” என்று அழுத்தமாகக் கூறினான்.
“சரி சார், நான் என்னுடைய ரெசிக்னேஷன் அப்ளை பண்றேன்” என்றுவிட்டு கிளம்பினான்.
பின் தன் அன்றாட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த வம்சியின் கண்ணில் பட்டது, ராதை ஒருவனோடு நடனம் ஆடிக்கொண்டிருந்தது தான். அதைப் பார்த்த பின் அவன் நரம்புகள் மற்றும் புலன்கள் சூடு ஏறியது.
***
ஒவ்வொரு ப்ராஜெக்ட் டீமிலும் வாரத்துக்கு ஒரு முறை ஃபன் அட் வொர்க் கேம் நடக்கும். ஒவ்வொரு டீமும் அந்த தளத்தில் இருக்கும் கான்பரன்ஸ் ஹாலில் ஆடிப்பாடி விளையாடலாம்.
ராதை இன்று புதிதாக சேர்ந்ததால் அனைவரும் அவளை வட்டமிட்டு முதலில் பாடச் சொன்னார்கள். வேறு வழியின்றி அவளும் பாடினாள்.
அப்போது அவர்கள் டீமில் இருக்கும் ஒரு பெண், “ஏய் நம்ம டீம்லயே ரொம்ப ஸ்மார்ட் ஆன பையன் அஜய் தான், அதே மாதிரி நம்ம டீம்ல இப்போ அழகான டிரெண்டிங்ல இருக்குற பொண்ணு ராதை தான், சோ ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ரொமான்டிக் டான்ஸ் ஆடணும்” என்று கரகோஷம் போட்டாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் சத்தம் எழுப்பினர்.
இதற்கு தன் மறுப்பை தெளிவாகக் கொடுத்தாள் ராதை. ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை. ராதை விட்டால் அழுது விடுவாள் போல இருந்தாள்.
அப்போது தான் அவளின் முகத்தை கவனித்த அஜய், அவளின் பக்கத்தில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய், “ஹாய் ராதை, ரொம்ப பயந்து இருக்கீங்க போல, நான் ஒன்னு சொல்லவா? இப்போ நீங்க என் கூட ஆடலைனா இவங்க பின்னாடி பேசுவாங்க. புதுசா வந்த பொண்ணு சீன் போடுறா, தலைக்கனம் பிடிச்சவ அந்த மாதிரி. சோ சும்மா ஒரு ரெண்டு ஸ்டெப் மட்டும் போட்டுட்டு போயிடுங்க” என்று அவளின் கையைப் பற்றி ஆடத் தொடங்கினான். அப்போது தான் சிசிடிவியில் இதனைக் கண்டான் வம்சி.
“நீயே முதல் வெட்கம் தந்த நீயே” என்ற பாடலைத் தங்களின் மொபைலில் போட்டு, அஜய் மற்றும் ராதையை ஆட வைத்தனர். அச்சமயத்தில் தான் புயல் போல் அந்த அறைக்குள் நுழைந்தான் வம்சி.
***
