அத்தியாயம் 52

விஜயகுமாரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்த சமயத்தில், ‘வம்சி வந்துட்டானா, இனி அவனோட கண்ட்ரோல்ல சூழ்நிலையைச் சரியாக்கிடுவான். நல்லது நடந்தால் சரி’ என்று மைதிலி நிம்மதியானார். 

 

‘இவர் வருவான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கலயே… இவர் எதுக்கு இங்கே வந்திருக்கிறார்? இவர் முகத்தைப் பார்த்தால் கோபத்துல இருக்குற மாதிரி இருக்காரே’ என்று ராதை நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த இடத்தின் அமைதியாய் கலைக்கும் விதமாக, “ராதை, எல்லாருக்கும் காஃபி எடுத்துட்டு வாம்மா” என்ற மைதிலியின் கூற்றில் சுயவுணர்வுக்கு வந்தவள், அடுப்பங்கரைக்குச் சென்று காஃபி போட ஆரம்பித்தாள் ஆனாலும் அவளின் மனம் சமநிலையில் இல்லை.

 

“அண்ணா, எப்படி இருக்கீங்க? அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?” என்று ஏக்கமாகக் கேட்ட மைதிலியின் நிலையை அறிந்த ராதைக்குக் கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது. 

 

இப்படியே பேசிக்கொண்டிருந்த இடத்தில் காஃபியை அனைவரிடமும் கொடுக்க ராதைக்குச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியின்றி ஒரு கண்ணாடி டிரேயில் ஐந்து காஃபி கப்புகளை வைத்து ஒவ்வொருவருக்கும் குனிந்து தலை நிமிராமலே கொடுத்தவள், கடைசியாக வம்சியின் பக்கம் வரும் போது அவளின் கை மெலிதாக நடுங்கியது. 

 

“நான் ஒன்னும் உன்னை பொண்ணு பார்க்க வரல. என்னை நீ நிமிர்ந்தே பாக்கலாம்” என்று அவன் காஃபியை எடுத்துக்கொண்ட போது, அனைவரின் பேச்சும் நின்றது. 

 

இப்போது வேறு வழியின்றி நிமிர்ந்து பார்த்த ராதையை காஃபி குடித்துக்கொண்டே பார்த்த கணவனை எதிர்கொள்ள முடியாமல் ஒரு ஓரமாய் நின்றாள் ராதை. 

 

“நடந்தது எல்லாம் நடந்துபோச்சு ராதை… நான் உன்கிட்ட நல்ல மாமியாரா நடந்துக்கல. இனி அப்படி இருக்காது, நீ எங்க வீட்டுக்கு வம்சியோட பொண்டாட்டியா வரதுக்கு சம்மதமா?” என்று பட்டென்று கேட்ட லட்சுமியிடம், 

 

“அது எப்படிம்மா… என் பொண்ணோட விருப்பம் இல்லாம…” என்று விஜயகுமார் ஆவேசப்படும் போதே வம்சியின் அனல் பார்வை வீச்சை தாங்க முடியாமல், “எதுவா இருந்தாலும் ராதையோட முடிவு தான் எங்களுடையது” என்று அமைதியாகிவிட்டார். 

 

இப்போது எப்படி வம்சியின் முன் தன் முடிவை சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த ராதை, இனி சொல்லித்தான் ஆக வேண்டும். தன்னால் வம்சியுடைய வாழ்க்கையும் வீணாகிறது என நினைத்தவள், “நான் உங்களோட வீட்டுக்கு வரத் தயாரா இல்லை ஆன்ட்டி… எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லை. அதனால நான் விவாகரத்து கொடுக்குறேன்…” என்று லட்சுமியைப் பார்த்தே சொன்ன ராதை அதற்குப் பின் அமைதி ஆனாள். 

 

ராதை அப்படிக் கூறிய பின் யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அனைவரும் எதிர்பார்த்தது வம்சியின் அதிரடி தான். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் வம்சி அமைதியாகவே இருந்தான். இதை ராதையே எதிர்பார்க்கவில்லை. 

 

ராதையின் வார்த்தைகள் வம்சியின் மனதை தூபம் இட்டு சினத்தை பூட்டியது தான்.. ஆனாலும் அமைதியாக தான் இருந்தான்… 

 

“ஓகே நீங்க வந்த வேலை முடிஞ்சுது தானே… இப்போ நான் என் வேலையை ஆரம்பிக்குறேன்” என்றபடி விஜயகுமாரை அழுத்தமாகப் பார்த்த வம்சி, தன் கையில் இருந்த பத்திரத்தை விஜயகுமாரிடம் கொடுத்து, “இது உங்க வீட்டை நான் வாங்குனது, இதை மறுபடியும் உங்களோட பேர்லயே எழுதி வைச்சிருக்கேன்” என்று கொடுத்தவனை வியப்போடு பார்த்தனர் அனைவரும்.

 

“என்னால நீங்க சொல்றதை நம்ப முடியல… இது கனவு மாதிரி இருக்கு” என்று வாயைப் பிளந்த விஜயகுமாரிடம், 

 

“கோதையை நம்பி நீங்க பண்ணினது முட்டாள்தனம். அதனால உங்கள் பிசினஸ் அண்ட் வீட்டை இழந்தீங்க, நான் நினைச்சிருந்தால் அப்போவே உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருக்க முடியும். கஷ்டம்னா என்னனு உங்களுக்குத் தெரியணும், நீங்க செஞ்ச தப்பைத் திருப்பி நீங்க செய்யக் கூடாது, அதுக்குத் தான் இந்த ஒரு வருஷம் உங்கள் மொத்த குடும்பத்துக்கும் தண்டனை கொடுத்தேன்” என்று அழுத்தமாகக் கூறியவன், 

 

ஒரு செக்கை எடுத்து, “இதுல அம்பது லட்சம் போட்டுருக்கேன், அத்தை உங்க பெயர்ல தான் இந்த செக் எழுதி கொடுத்திருக்கேன். இதை நீங்க பேங்க்ல ஃபிக்ஸட் டெப்பாசிட்டா போட்டு அதுல வர வட்டியை எல்லா மாசமும் எடுத்துக்கோங்க. அப்புறம் வீடு வித்த பணமும் இருக்கும் தானே? அதை வைச்சு நீங்க ஏதாவது பிசினஸ்ஸை தொடரலாம் இல்லை, அதையும் பேங்க்ல போட்டு நிம்மதியா வாழலாம்” என்று முடித்தவனை நன்றியாகப் பார்த்தனர் மைதிலியும் விஜயகுமாரும்.

 

வம்சியின் கையைப் பிடித்த விஜயகுமார், “வம்சி உங்களை நான் தப்பா நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் நீங்க தான் இப்போ எங்கள் குடும்பத்தையே காப்பாத்தி இருக்கீங்க… இதுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்னு எனக்கே தெரியல” என்று கை எடுத்து கும்பிட்டார். 

 

“ராதை ஒரு நிமிஷம் வா” என்று அவளின் கையை இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்றார் மைதிலி. 

 

“ராதை இங்கே பாரு வம்சி எவ்வளவு நல்லது பண்ணிருக்கான்னு… இப்படிப்பட்டவனை நீ விவாகரத்து செய்வியா?” என்று சொல்லும் போதே விஜயகுமாரும் உள்ளே வந்து, “ராதை நீ வம்சியோட பொண்டாட்டி. அது தவிர்க்க முடியாத உண்மை. நீ அங்க தான் இருக்கணும்” என்று கூறிய இருவரையும் அதிரச்சியாகப் பார்த்தாள் ராதை.

 

“ஏங்க நான் வேணும்னா ராதைகிட்ட மறுபடியும் பேசவா?” என்று தன் கணவனிடம் பேசிய லட்சுமியை, “அம்மா… நீங்க அவள்கிட்ட கேட்டீங்க, அவ தான் தெளிவா வர முடியாதுனு சொல்லிட்டாளே. டைவர்ஸ் கொடுக்கணும்னா அவளை புரோசீட் பண்ண சொல்லுங்க” என்று அழுத்தமாகக் கூறிய மகனை வியப்பாகப் பார்த்தனர் பெற்றோர்கள் இருவரும்.

 

“உன்னை புரிஞ்சுக்கவே முடியல வம்சி. ராதைக்காகத் தான் இவ்வளவு பண்ண, ஆனா அந்தப் பொண்ணு டைவர்ஸ்னு பேசுறா… நீயும் அதை ஈஸியா எடுத்துக்கிட்ட” என்று கேட்ட தந்தையைப் பார்த்து சிரித்தவன், 

 

“அப்பா நான் ராதையை கொஞ்ச நாள் முன்னாடி கோவால பார்த்தேன். அப்போ என் மேல் வராத காதலா அவளுக்கு இப்போ உடனே வந்துட போகுது? அவளோட பதில் என்னனு எனக்கு ஏற்கனவே தெரியும்” என்றான் கூலாக.

 

“அவ எனக்கு விவாகரத்து கொடுத்தாலுமே அவ மட்டும் தான் என் பொண்டாட்டி… அதுல எந்த மாற்றமும் இல்லை. அவ நம் வீட்டுல கால் எடுத்து வைச்சால், அது என்னோட காதல் பொண்டாட்டியா மட்டுமே வரணும்” என்று சொன்ன மகனைக் கவலையோடு பார்த்தார் தாய் லட்சுமி.

 

“அதான் நம்ம வந்த வேலை முடிஞ்சுதுல கிளம்பலாம் தானே” என்று கேட்ட மகனை, “அவங்க குடும்பத்தோட உள்ளே போயிருக்காங்க, வெளியே வரட்டும் சொல்லிட்டு கிளம்புவோம்” என்று வேதனையாகச் சொன்ன அன்னையைப் பார்க்க வம்சிக்கே பாவமாகத் தான் இருந்தது. உண்மையாகவே லட்சுமிக்கு இப்போது தன் மகனின் வாழ்க்கையே முதன்மையாகப்பட்டது.

 

“பெரியம்மா, என்னால முடியாது… பாட்டியோட இறப்புக்கு வம்சி தான் ஒருவகையில காரணம்! அதுவும் இல்லாம அவர் என்னை முறை இல்லாம கல்யாணம் பண்ணி இருக்கார்” என்று ராதை சொல்லும் போதே அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மைதிலி. 

 

இதுவரை மைதிலி ராதையிடம் இவ்வளவு கடுமையாய் நடந்துக் கொண்டதில்லை. அதிர்ச்சியில் தன் கன்னத்தில் கைவைத்தபடி விழித்த ராதையிடம், “உன் பாட்டி இறந்ததுக்கு முதல் காரணம் உன் பெரியப்பா தான்… இவர் தான் பெண்ணை ஒழுங்கா வளர்க்காமல் இருந்தார். ரெண்டாவது காரணம் உன் அக்கா கோதை, அவளோட முட்டாள் தனம். மூனாவது நான்… இவங்க ரெண்டு பேரையும் கண்டுக்காம விட்டதுக்கு, நீ நியாயப்படி எங்ககிட்ட தான் கோபப்படணும். எங்களைத் தான் ஒதுக்கி வைக்கணும்…”

 

“உனக்கு ஏன்டி நான் சொல்றது எதுவும் புரிய மாட்டேங்குது… கடைசி வரைக்கும் வாழா வெட்டியா இருக்கப் போறியா? நீ இப்படியே இருந்தா கோதைக்கு எப்படி கல்யாணம் ஆகும்? சுயநலமா யோசிக்குறத விட்டுட்டு ஒழுங்கா உன் புருஷன் வீட்டுக்குக் கிளம்பு” என்று சொன்ன மைதிலி கூறிய வார்த்தைகளின் வீரியத்தில் இருந்து வெளியே வராமல் அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதை.

 

“மைதிலி நீயா இப்படிப் பேசுறது?” என்று வாயெடுத்த கணவனை முறைத்த மைதிலி, “நீங்க இனி என் பொண்ணுங்க விஷயத்துல தலையிடாதீங்க” என்றார்.

 

“நீ மட்டும் இப்போ வெளியே வந்து அவங்க கிட்ட வம்சியோட வாழ சம்மதம்னு சொல்லலைனா… கோதைக்கு நீ பெரிய பாவம் செய்யப்போற. அது எனக்கும் பெரிய பாவம். அதுக்கு பேசாம எங்களைக் கொன்னு…” என்று சொல்லும் போதே, 

 

“பெரியம்மா நிறுத்துங்க… போதும்… நான் வெளியே வந்து நீங்கள் சொன்னது போலவே சொல்லிடுறேன். நான் யாருக்கும் பாவம் செய்ய மாட்டேன், பாரமாகவும் இருக்க மாட்டேன்” என்று கூறினாள்.

 

“உன் முகத்தைத் தொடைச்சிட்டு வெளியே வந்து சந்தோஷமா சொல்ற மாதிரி சொல்லு… வாங்க நாம வெளியே போலாம்” என்று கணவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் மைதிலி.

 

அவர்கள் சென்ற பின் சிலையாய் அமர்ந்திருந்த ராதை, தன் முகத்தைத் துடைத்து விட்டு வெளியே வந்த சமயம், வம்சி எந்த ஒரு சலனமும் இல்லாமல் தன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“சரிம்மா ராதை, அப்போ நாங்க கிளம்புகிறோம்” என்று கூறிய லட்சுமியிடம், “அத்தை, நானும் வர்றேன்… நம்ம வீட்டுக்கு… உங்கள் மகனோட மனைவியா…” என்று கூறியவளைப் பெரும் அதிர்ச்சியோடு பார்த்தான் வம்சி. 

 

“ரொம்ப சந்தோஷம் ம்மா… உன் திங்க்ஸை பேக் பண்ணு, நாங்க காத்திருக்கோம்” என்று கூறினர் சேதுராமன் மற்றும் லட்சுமி. 

 

அவர்கள் கூறியதைக் கேட்டு உள்ளேச் சென்ற ராதை தன் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அங்கு இருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி, சந்தோஷம், நிம்மதி இருந்தது. ஆனால் வம்சிக்கு மட்டும் கோபம், பெரும் கோபம் அனலாய் தகித்தது.

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!