நடுராத்திரி இரண்டு மணிக்கு விழித்த வம்சி, பக்கத்தில் உடை இல்லாமல் கசங்கி அழுது வீங்கிய முகத்தோடு உறங்கிக் கொண்டுருந்த ராதையைக் கண்ட பின் அவனின் மனதே பாரமானது.
“நான் உன்னை இப்படி அடையணும்னு நினைக்கவே இல்ல டி… என்னோட உணர்வுல நீ விளையாடினதுக்கு உனக்கு ஏத்த தண்டனை தான் இது” என்றவனோ அவளின் உடையில்லாத தேகத்தின் மேல் போர்வையைப் போர்த்தி விட்டு எழுந்து, தன் உடைகளை அணிந்துவிட்டு பால்கனிக்குச் சென்றான்.
ராதைக்குத் தான் கொடுத்தது தான் நல்ல தண்டனை என்று அவன் மனதில் நினைத்தாலும், மனதின் ஓரத்தில் தான் இப்படி நடந்து கொண்டதை எண்ணி அவனுக்கே அவன் மீது கோபம் தான் அதிகமாக வந்தது.
“உன்னை எப்படி எல்லாம் காதலிச்சு அன்பைப் பொழிஞ்சு உன் கூட வாழணும்னு நான் நினைச்சேன், என்னை இப்படி ஆக்கிட்டியே ராதை… என்ன வாழ்க்கை டி இது?” என்று தனக்குத் தானே பேசிவிட்டு சுவரில் குத்தியவனின் சத்தத்தைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு விழித்தாள் ராதை.
“ப்ளிஸ் என்னை எதுவும் பண்ணிடாதீங்க…” என்று போர்வையைத் தன்னோடு இறுக்கி கெஞ்சியவளைப் பார்க்கும் போது, தான் செய்த செயலின் வீரியம் அவனுக்குப் புரிந்தது.
“நான் வெளியே இருக்கேன், உன்னுடைய டிரெஸ்ஸை போட்டுக்கோ” என்று சென்றவனை, முழுக்க நனைந்த பின் முக்காடு போட்டு என்ன பிரயோஜனம் என்று கோபத்தில் வெறித்து பார்த்தவளின் மனமோ, ‘இவ்வளவு நாள் நான் பாதுகாத்து வைச்சிருந்த கற்பை ஒரே நொடியில சீரழித்த பாவி உனக்கு வம்சின்னு பேர் வெச்சதுக்கு பதிலா துவம்சினு பெயர் வைச்சிருக்கலாம்’ என்று மனதில் எரிந்தாள்.
தன் உடைகளை அணிந்துவிட்டு படுக்கும் போது, “மறுபடியும் என்னை சீண்டுவானோ?” என்ற பயத்திலேயே இருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை…
ராதை உடை அணிந்து விட்டு கதவைத் திறந்த பின்னரும் வம்சி அறைக்கு வரவில்லை என்றவுடன் நிம்மதியாக உறங்கினாள். காலையில் பொழுது விடியும் போது மணி ஆறு என்பதைப் பார்த்தவள் பல் துலக்கிவிட்டு குளித்து விட்டு கீழே வரும் போது பாட்டி மற்றும் தாத்தா காஃபி குடித்துக்கொண்டிருந்தனர்.
“வாம்மா ராதை, என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சிட்ட? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிருக்கலாம்ல கண்ணா” என்று கூறிய பாட்டியின் பக்கத்தில் மண்டியிட்ட ராதை, “பரவாயில்லை பாட்டி, நான் வீட்டை விட்டு போனதுனால உங்களுக்கு என் மேல் கோபமா பாட்டி?” என்று கேட்டவளின் தலையைக் கோதினார் காந்திமதி பாட்டி.
“நீ திரும்பி வருவேன்னு எனக்கு தெரியும்மா. ஏன்னா வம்சி உன் மேல வைச்சிருக்குற காதல் அவ்வளவு திடமானது. அந்தக் காதல் உங்க ரெண்டு பேரையும் கண்டிப்பா இணைக்கும்னு நம்பினோம்” என்று பாட்டி கூறும் போது நேற்று இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள் ராதை.
அப்போது அவர்களின் ஈருடல் இணைந்த அத்தருணம் அவளின் மனதில் வந்து போனது. ‘ம்ம் பெரிய காதலாம்… உண்மையா காதலிக்குறவங்க இப்படித் தான் அந்தப் பெண்ணோட விருப்பம் இல்லாம தொடுவாங்களா? இந்தப் பாட்டிகிட்ட இதுக்கு அப்புறம் பேசினா அவங்க பேரன் புராணம் பேசியே கடுப்பேத்துவாங்க’ என்று நினைத்தவள், “நான் சமையல் செய்ய போறேன் பாட்டி” என்று நகர்ந்து விட்டாள்.
ராதை சமையல் அறைக்குள் செல்லும் போதே, “தலைக்கு குளிச்சிட்டியாம்மா, வா இந்தா காஃபி எடுத்துக்கோ” என்று கூறிய மாமியார் எதற்கு தலைக்கு குளிச்சிட்டியா என்று ஆர்வமாக கேட்கிறார் என்று புரிந்த ராதைக்கு அவ்வளவு கோபம்.
‘இவங்க அருமை புத்திரன் விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து என்னை நாசம் பண்ணுவான். ஆனா இவங்களுக்கு நான் தலைக்குக் குளிச்சது அவ்வளவு சந்தோஷம். ச்ச என்ன ஒரு சுயநலத்தனம்?’ என்று மனதில் பொறிந்த ராதைக்குத் தெரியவில்லை, தாமாக விருப்பப்பட்டு தான் இந்த வீட்டிற்குள் இப்போது வந்திருக்கிறோம் அவளை யாரும், ஏன் வம்சியே வற்புறுத்தவில்லை என்பதை அவள் புரிந்து கொள்ள நினைக்கவில்லை.
இனி தினமும் அவன் தன்னை அனுபவிப்பான், தன்னை அவனுடைய ஆசைக்கு அடிபணியச் செய்வான் என்று மனதில் எரிந்து கொண்டிருந்த ராதை, ‘இனி என்னோட வாழ்க்கையே இது தான்… ச்ச் என்ன வாழ்க்கை இது?’ என்று நினைத்துக் கொண்டிருந்த போது தான் ஹாலில் வம்சியின் சத்தம் கேட்டு அதிர்ந்தாள்.
“அம்மா காஃபி…” என்று கத்திய மகனின் சத்தத்தைக் கேட்டு ஒரு வருடம் கழித்து தன் மகன் தன்னிடம் உரிமையாக காஃபி கேட்பதில் கண்களில் கண்ணீரே வந்தது லட்சுமிக்கு. “இதோ எடுத்துட்டு வரேன் வேதந்த்” என்ற அன்னை ராதையை அழைத்து வம்சியிடம் காஃபி கொடுக்குமாறு கூறினார்.
‘அவ்வளவு தான் இனி அவருக்கு காலையில காஃபி கொடுக்குறதுல இருந்து நைட் தினமும் என்னை தீணியாக்கும் வரை என்னை யூஸ் பண்ணுவான்’ என்று வம்சியைப் பற்றி அசிங்கமாகவே நினைத்த ராதைக்கு வம்சியின் காதல் இப்போது கொச்சையாகவே இருந்தது.
காஃபி கப்பை நீட்டிய ராதையைக் கண்ட வம்சி, “அம்மா, நான் உங்ககிட்ட தானே காஃபி கேட்டேன்” என்று அழுத்தமாகக் கேட்டான் தன் அன்னையை பார்த்தபடியே.
“யார் கொடுத்தா என்ன டா, நான் தானே காஃபி போட்டேன்” என்று சொன்ன அன்னையிடம் வேறு எதுவும் பேசாத வம்சி அதை குடித்து விட்டு குளித்துவிடச் சென்றான்.
அவன் அலுவலகத்திற்குக் கிளம்பும் போது காலையில் இட்லி மற்றும் சட்னி செய்த ராதை, அவனுக்கு பரிமாறும் போது கூட வம்சி ராதையைக் கண்டுகொள்ளாமல் தான் சாப்பிட்டு விட்டு சென்றான். ‘இவன் நைட் மட்டும் என்னை தொந்தரவு செய்யுற வகைப் போல’ என்று மனதில் அவனை ஒரு பொறுக்கி போல் நினைத்தவள், தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் காரில் பயணித்த வம்சிக்கு, ‘நான் ஏன் அவகிட்ட அப்படி நடந்துக்குட்டேன்? இவ்வளவு மட்டமான தண்டனை அவளுக்கு நான் கொடுத்திருக்கக் கூடாது’ என நினைத்தவன், ‘இனி உன் மனசுல இருந்து உன் உதட்டுல இருந்து என்னை காதலிக்கிறேன்னு சொல்லும் வரை என் விரல் நுனி கூட உன் மேல் படாது ராதை’ என்று தன் மனசாட்சிக்குக் கூறிக் கொண்டான்.
‘ஒருவேளை கடைசி வரை ராதைக்கு உன் மேல் காதல் வரவில்லை என்றால்…?’ என்று அவனுடைய மனசாட்சி பட்டென்று கேட்டதும் படாரென்று காரை நிறுத்தியவன், தன் மனதுக்குள்ளே ஒரு முடிவு எடுத்துவிட்டு காரை எடுத்தான்.
இரவு வரை சந்தோஷமாக இருந்த ராதைக்கு, வம்சி வீட்டிற்கு வந்த பின் பயம் சூழ்ந்துக் கொண்டது. வம்சி வீட்டிற்கு வந்த பின்னர் மேலே இருக்கும் தன் அறைக்குச் சென்ற சமயம், ராதையிடம் காஃபி கப்பைக் கொடுத்து மேலே கொடுக்க சொன்ன மாமியாரை மனதில் திட்டியவள் வேறு வழியின்றி மேலே சென்றாள்.
இரவு குளியலை முடித்துவிட்டு தன் உடைமைகளை ஒரு டிராலியில் அடுக்கிக் கொண்டிருந்த வம்சியை கேள்வியாகப் பார்த்த ராதையிடம், “என்ன?” என்று கேட்டான்.
“காஃபி” என்று அவள் கூறியபின், “அதை வெச்சிட்டுப் போ” என்று மட்டும் சொன்னவன் மறந்தும் கூட அவள் பக்கம் திரும்பவில்லை.
ராதை கீழே சென்று இரவு உணவைத் தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் வம்சி தன் டிராலியோடு கீழே இறங்கி வந்தான்.
“என்னடா கிருஷ்ணா?” என்று கேட்ட விஸ்வநாதனிடம், “தாத்தா இனி எனக்கு நைட் நேரத்திலும் ஆபிஸ் வேலை இருக்கும். அதனால கீழே இருக்குற ரூமை யூஸ் பண்ணிக்க போறேன்” என்றவனை விசித்திரமாகப் பார்த்தனர் அனைவரும்.
“சரிம்மா ராதை, அப்போ நீயும் உன்னோட டிரெஸை எடுத்துக்கிட்டு வம்சி இப்போ இருக்கப் போற ரூம்ல வை” என்ற பாட்டியிடம், “பாட்டி ராதை மேலயே இருக்கட்டும், எனக்கு இனி நைட் வேலை இருக்கும். அதனால நான் என் ரூமுக்கு போக முடியாது” என்று அழுத்தமாகக் கூறியவனிடம் அதற்குப் பின் யாராலும் பேச முடியவில்லை.
ராதைக்குத் தான் வம்சியின் செயல் அதிர்ச்சியாக இருந்தது.
***
