அத்தியாயம் 58

அன்று இரவும் வம்சி கீழே உள்ள அறைக்குள்ளேயே உறங்கச் சென்றான். ராதைக்குத் தான் தூக்கம் என்பதே சிறிதளவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளுக்கு யோசித்து யோசித்து தலையே கனக்க ஆரம்பித்தது. 

 

சிறிது நேரத்தில் வயிறு வலிக்க ஆரம்பித்த ராதைக்கு, அப்போது தான் மாதவிடாய் நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்து தனது தலையில் அடித்த ராதை, “வம்சியோட வாரிசு உருவாகுற பாக்கியம் கூட இல்லாம போச்சே” என்று தனக்குள்ளே கூறியவள் அதிர்ச்சியில் தன் எண்ணப்போக்கை நினைத்து அவளுக்கே புரியாத புதிர் போல இருந்தது.

 

நாட்கள் இப்படியே நகர்ந்த சூழ்நிலையில், வம்சி ராதையின் கண்ணில் கூட படுவதே அரிதாக ஆனது. அத்தகைய சமயத்தில் தான் யசோதாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

 

வீடே மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் லட்சுமியோ வம்சி மற்றும் ராதையை அழைத்து, “நீங்க எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க?” என்று கேட்டபோது வம்சி மற்றும் ராதை இருவரும் உணர்வுகள் துடைத்த முகத்தோடு இருந்தனர்.

 

“அம்மா, குழந்தை பெத்துக்கற விஷயம் எல்லாம் எங்களோட மோஸ்ட் பர்ஸ்னல். இதைப் பத்தி நீங்க பேசுறது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்ற வம்சியை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ராதை.

 

கடந்த சில நாட்களாகவே வம்சியின் பாராமுகம் ராதையை இம்சிக்கத் தொடங்கியது. அவனிடம் சென்று பேச தைரியமும் இல்லாமல், என்ன பேசுவது என்பதிலும் தெளிவு இல்லாமல் இருந்த ராதை, யசோதாவின் குழந்தையுடன் நேரத்தை செலவழித்தாள். 

 

இப்படியே சென்றிருந்த தருணத்தில் தான் ஒரு நாள், அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்கும் சமயம் வம்சி, “நான் நாளைக்கு லண்டன் போகப் போறேன். நம்மளோட கம்பெனியை அங்க விரிவாக்கலாம்னு இருக்கேன்” என்று அவன் சொல்லும் போதே அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், ராதைக்கோ பேரதிர்ச்சி ஆனது.

 

“என்ன வம்சி, இப்படி திடீர்னு சொல்ற…? சரி எவ்வளவு நாள்டா அங்க இருப்ப?” என்று கேட்ட தந்தை சேதுராமனிடம், “அப்பா கண்டிப்பா ஒரு வருஷம் அங்க தான், தேவைப்பட்டா இனி வாழ்க்கை முழுசுக்கும் அங்கே இருக்குற நிலை கூட வரலாம்” என்று ராதையை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு தன் தந்தைக்குப் பதில் சொன்னான்.

 

“சரி ராதைக்கு டிக்கெட் எடுத்துட்டியா?” என்று கேட்ட லட்சுமியிடம், “ராதை எதுக்கு…? அவ இங்கே தான் இருப்பா. அவளுக்கு வேணும்னா கொஞ்ச நாள் அவளோட பெரியப்பா வீட்டுல இருக்கட்டும்” என்று தன் தாயிடம் கூறியவனை வெறித்துப் பார்த்தாள் ராதை.

 

வீட்டு பெரியவர்களுக்கு வம்சியின் செயல் ஏதோ விசித்திரமாக உணர்த்தப்பட்டது. ஆனால் அவனுடைய விஷயத்தில் தலையிட அவன் விட மாட்டான் என்று மௌனம் காத்தனர். “சரி குட் நைட்” என்று பொதுவாக அனைவரிடமும் சொன்ன வம்சி, உள்ளே அவனின் அறைக்குள் சென்றான். 

 

ராதையின் மனது ரணமாகக் கொதித்தது. ஏற்கனவே வம்சி தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்று மனதில் நொந்தவள் இப்போது வம்சி தன்னை விட்டுவிட்டு செல்லப்போகிறான் என்று தெரிந்ததும், அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

வம்சியிடம் இதைப் பற்றிப் பேச வேண்டுமென நினைத்தவள், என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என புரியாமல் விழித்தாள். 

 

வம்சியின் அறையின் கதவு சாத்தப்பட்டதால் எப்படி அவனிடம் பேசுவது என்று நினைக்கும் பொழுதே யசோதாவின் குழந்தை அழுகும் சத்தம் கேட்டதால் அவள் குழந்தையைப் பார்க்க சென்றுவிட்டாள். குழந்தையைச் சமாதானம் படுத்திவிட்டு வம்சியின் அறைக் கதவைத் தயக்கத்தோடு தட்டினாள். 

 

வம்சிக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. எனவே சிறிது நேரம் இயற்கை காற்றை சுவாசிக்கலாம் என்று வெளியே சென்றவனுக்கு பழைய நினைவுகள் அவன் மனதில் சூழ்ந்தது. 

 

முதன் முதலில் ராதையைப் பார்த்த அந்த தருணத்தில் இருந்து தற்போது நடந்த நிகழ்வுகள் வரை அனைத்தையும் நினைத்தவனுக்கு மனதில் ஒரு வெறுமை தோன்றியது. கடைசி வரை ராதை மனதில் தான் இல்லை என்ற விரக்தியில் இயற்கை காற்று கூட அவனுக்கு ரசிக்கவில்லை.

 

அவன் அறையை நோக்கி செல்லும் போது தான் ராதை அங்கே இருப்பதைக் கண்டான் வம்சி. கதவைத் திறக்கவில்லை என்றவுடன் வெளியேவே தயங்கி நின்றவளைக் கண்டவன், “இங்க என்ன பண்ற?” என்று தன் இரு கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றுக் கொண்டிருந்த வம்சியின் கம்பீரக் குரல் கேட்டு அதிர்ந்தாள் ராதை. 

 

கிட்டத்தட்ட ஒரு மாதமாய் வம்சி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனும் போது தனிமையில் அவனுடைய குரல் கேட்டு தன்னுள் ஏதோ சிலிர்ப்பை உணர்ந்தவள் அதை அதிர்ச்சியாக பிரதிபலித்தாள்.

 

“அது வந்து… ஒன்னும் இல்லை… சும்மா தான்… தண்ணீ குடிக்க ஹாலுக்கு வந்தேன்” என்று தயங்கி சமாளித்தவளைப் பார்த்த வம்சி, “தண்ணீர் குடிக்க என் ரூமுக்கு பக்கத்துல வந்து நின்னா கிடைக்குமா? கிச்சனுக்கு போ” என்று அமர்த்தலாக கூறியவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் கிச்சனுக்கு விரைந்தாள்.

 

உண்மையாகவே இப்போது ராதைக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. வம்சியிடம் பேச வேண்டும் என்று நினைத்தவள் திடீரென்று அவனின் குரல் கேட்டு சிலிர்த்தவளுக்கு நாவில் பேச்சு எழவில்லை. இனி வம்சியிடம் தன்னால் பயம் மற்றும் தயக்கம் இன்றி பேச முடியும் என பெண்ணவளுக்கு தோணவே இல்லை. ஆதலால் உறங்குவதற்காக தன் அறை நோக்கி சென்றாள்.

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!