ஆம், அனன்யா அஷ்வினை பல வருடங்களாக ஒரு தலையாக காதலிக்குறாள்.
அஷ்வின் மற்றும் அனன்யா இருவருக்குமே சொந்த ஊர் ஊட்டி தான்..
அனன்யாவின் தாத்தா வேதாச்சலத்திடம் அஷ்வினின் தந்தை மணி மேனேஜராக பணிபுரிந்தார்.
மணியின் வீடு அனன்யாவின் பங்களாவை ஒட்டியே இருக்க, அப்போது இருந்தே அஷ்வினை ஒருதலையாக காதலிக்குறாள்.
அஷ்வினின் மொபைல் எண்ணை அப்போதே திருட்டுத்தனமாக மணியின் செல்லில் அவருக்குத் தெரியாமல் எடுத்து, சில வருடங்கள் முன்னர் அவனை தான் காதலிப்பதாய் பல மெசேஜ்களும் அனுப்பி விட்டாள்..
அதற்கு அஷ்வினும் அவனின் தந்தை அவர்களிடம் அத்தனை வருடங்கள் வேலைப் பார்த்தத விஷயத்தை மனதில் வைத்து அனன்யாவிடம் அப்போதே பிளாக் செய்யாமல், அவனுடன் ஒரே மருத்துவமனையில் அவனுடன் மருத்துவராக பணிபுரியும் அவனுடைய காலேஜ் ஜூனியர் சாருபாலாவிடம் கடுப்புடன் சொல்லி அனன்யாவின் செயல்களை உடனே நிறுத்தச் சொன்னான்.
சாருபாலா.. அனன்யா மற்றும் அமிர்தாவின் சொந்த மாமன் மகள்.. இவர்கள் இருவருக்குமே சாருபாலா என்றால் உயிர். அவளுக்கும் இவர்கள் என்றால் உயிர் தான்!
சாருபாலா இவர்களின் பெரியப்பா மகன் இந்திரஜித்தின் மனைவியும் கூட..
இந்திரஜித் மற்றும் சாருபாலாவின் கதையைத் தெரிந்து கொள்ள இந்திரனின் ஊர்வசியே என்னும் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
சில வருடங்கள் முன்னர் சாருபாலா அனன்யாவிடம் இனி அஷ்வின் பின்னே சுத்தாதே, அவருக்கு மெசேஜ் அனுப்பாதே என்று சொன்ன பின்னர் அஷ்வினைத் தொந்தரவு செய்வதை அப்போதைக்கு நிறுத்திக் கொண்டாள்..
ஆனாலும் அனன்யாவின் மனதில் அஷ்வின் கிருஷ்ணா மட்டுமே சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்க, நேரம் வரும் பொழுது மறுபடியும் அவனிடம் பேசிக் கொள்ளலாம் என அப்போதைக்கு விட்டவளுக்கு இப்போது அவளின் இன்னொரு பெரியப்பா மகன் விஜய்க்கு அஷ்வினின் தங்கை பவித்ராவை பேசியிருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டதும், இத்தனை நாட்கள் மனதில் காதலை வைத்து மனதிற்குள்ளேயே அஷ்வினுடன் டூயட் பாடியவள் இப்போது மீண்டும் அஷ்வினை காதல் இம்சை செய்ய முடிவு செய்துவிட்டாள்.
அதனின் விளைவு இப்போது பவித்ராவின் எண்ணை விசாலாட்சியிடம் இருந்து பெற்றுக் கொண்டவள், ‘இந்த முறை அவசரப்பட்டு அஷ்வின் கிட்ட ஒட்டி, ஒரசி அவரை கடுப்பாக்கிடாத அன்னு.. முதல்ல அவர் கூட நல்ல பிரண்ட்டாக முயற்சி பண்ணு… அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவரைக் கரெக்ட் பண்ணிடலாம்’ என மனதில் திட்டம் தீட்டியவள், அவ்வாறே நடந்தாள்.
அதன் படி பவித்ராவிற்கு கால் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் ஒட்டினாள்.
‘இந்த விஜய் அவராவும் கால் பண்ண மாட்டிங்குறாரு.. நான் கால் பண்ணாலும் பிஸினு கட் பண்ணிடுறாரு.. ஆனா அனன்யா மட்டும் எனக்கு தவறாம கால் பண்ணி ஏதாவது பேசுறா.. அட்லீஸ்ட் அவளாவது என்னை அண்ணி அண்ணினு உரிமையா கூப்பிட்டு மதிக்குறாளே’ என மனதில் ஏக்க பெருமூச்சு விட்ட பவித்ராவோ வீட்டினரிடம் இதையெல்லாம் சொல்லி பெரிது படுத்த விரும்பவில்லை.
சில நாட்களாகவே ஃபோனும் கையுமாக இருக்கும் தங்கையை கவனித்த அஷ்வினுக்கு மனது நிம்மதி அடைந்தாலும், “உனக்கு முகூர்த்தப் பட்டு எடுக்கணும்னு மாப்பிள்ளை வீட்டுல இருந்து ஃபோன் பண்ணாங்க பவித்ரா.. நீ எப்போ முடியும்னு சொன்னின்னா அவங்க கிட்ட அந்த டேட்டை சொல்லிடலாம்” என அன்னை கேட்க,
சற்று நேரம் அமர்ந்து யோசித்தவள் யாருக்கோ ஃபோன் செய்து, “அனன்யா.. உன் அண்ணன் விஜய் அடுத்த வாரம் புதன்கிழமை ஃப்ரீயான்னு கேளு.. அவர் வரலன்னா நான் முகூர்த்தப் பட்டு எடுக்கவே வரமாட்டேன்” என உரிமைக் கோபத்துடன் பவித்ரா ஃபோனில் பேச, வார இறுதிக்காக வீட்டுக்கு வந்திருந்த அஷ்வினுக்கோ தங்கை அனன்யாவிடம் பேசுவதும், அவளிடம் பேசும் விஷயமும் அவனுக்கு ரொம்பவே நெருடியது..
ஆனாலும் அப்போதைக்கு தங்கையிடம் எதையும் வெளிப்படையாக கேட்காமல் அமைதியாக பவித்ராவை கவனிக்க ஆரம்பித்தான்.
எதற்கு எடுத்தாலும் தங்கை அனன்யாவிடமே கால் செய்து பேசுவதை கவனித்த அஷ்வின், தங்கை உறங்கியதும் அவளுக்கே தெரியாமல் அவளின் செல்லை எடுத்து அவளின் வாட்ஸ் அப்பை எடுத்துப் பார்த்தான்.
அவன் நினைத்தது போலவே தங்கை அனன்யாவிடம் தான் விஜய் பற்றி அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருக்கிறாள்…
விஜய்க்கு ஓரிரு முறை பவித்ராவே மெசேஜ் செய்துருக்க அவன் அதற்கு பதில் மட்டும் சொல்லியிருக்குறான்.
மற்றபடி அவனிடம் அவளுக்கான எந்தவொரு ஆசையும், காதலும், பாசமும், நேசமும் இல்லை.. அதை கண்டவனுக்கோ கோபம் பற்றிக்கொண்டு வந்தது..
நீண்ட நேரமாக யோசித்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக தங்கையின் செல்லில் இருந்து அனன்யாவின் எண்ணை எடுத்து தனக்கு அனுப்பிக் கொண்டான்..
முன்னாடியே அனன்யா அவனுக்கு மெசேஜ் அனுப்பியிருந்த சமயம் சாருபாலாவிடம் அவளுக்கு எச்சரிக்கை கொடுத்தவன் அப்போதே அனன்யாவின் எண்ணை டெலீட் செய்துருந்தான்.
இப்போது அவளின் எண்ணை தன் செல்லில் ஏத்தியவன் மணியைப் பார்க்க அது இரவு பதினொன்றைக் காட்டியது.
அடுத்த நாள் காலை அனன்யாவிற்கு “Hi Ananya Ashwin Here” என்று அவளுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்க, அடுத்த கணமே அவனுக்கு அவளிடம் இருந்து,
தன் வீட்டில் வேலைப் பார்த்துக் கொண்டுருத்த அனன்யாவின் செல்லில் மெசேஜ் வந்த சத்தம் கேட்க அதை எடுத்து பார்த்தவளுக்கோ அவளின் கண்களையே நம்பமுடியவில்லை..
அவன் வேண்டும் என்றால் அவளின் எண்ணை டெலீட் செய்துருக்கலாம்.. ஆனால் அவள் அவனின் எண்ணை அப்படியே, “My Special One” என்று அவள் ஃபோனில் சேமித்து வைத்திருக்க அவன் அனுப்பிய மெசேஜ்ஜை திறவாமலேயே துள்ளி குதித்தவள் படபடத்த இதயத்துடன் அதைத் திறந்து பார்த்தவளுக்கு பதற்றத்தில் கையெல்லாம் நடுங்கியது…
அவனின் மெசேஜ்ஜை படித்த உடனே, “Hi Ashwin.. இது கனவா இல்ல நனவா” என அவளையும் மீறி ஆர்வத்தில் அவள் மெசேஜ் அனுப்பியிருக்க,
அதனைக் கண்டவனோ, ‘இவ இன்னும் வேற ஆள் கிடைக்காம தான் சுத்திட்டு இருக்கா போல!’ என எளக்காரமாக நினைத்தவன் அவனின் தங்கையின் வாழ்க்கையை மனதில் வைத்து,
“Can we meet?” என கேட்டுருக்க,
அதனைக் கண்ட அனன்யாவிற்கோ தலை கால் புரியவில்லை.. அவளின் இதயம் உற்சாகத்தில் வேகமாக அடிக்க, அதே வேகத்துடன் பக்க விளைவுகளை உணராமல்,
“I was madly waiting for that” என்று அவள் காதலுடன் அனுப்பியிருக்க,
அந்த மெசேஜை முகம் சுளித்து பார்த்தவனோ, “எல்லாம் என் நேரம்.. இந்த வழிஞ்சவ கூட எல்லாம் சகிச்சிட்டு பேசணும்னு” என முணுமுணுத்தபடியே கடிந்து கொண்டவன்,
“இன்னிக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு பார்க் ரெஸ்டாரன்ட்ல மீட் பண்ணலாம்” என்றவன் அனுப்பியிருக்க,
அனன்யாவிற்கோ இன்று மாலை ஆறு மணிக்கு ஹோட்டல் ஸ்டாரில் உள்ள கிளப்பில் மியூசிக் நைட் ஈவண்ட் இருந்தது.
முன்னாடி எல்லாம் அனன்யாவை அவனின் கட்டுப்பாட்டில் வைத்துருந்த இந்திரஜித், இப்போது தங்கைக்கு தான் போட்டு இருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் விடுவித்துருக்க மறுபடியும் அவளின் மியூசிக் பேன்ட்டில் சேர்ந்து விட்டுருந்தாள் அனன்யா.
“ஐய்யோ! இப்போ என்ன பண்றது.. பேசாம அஷ்வினுக்கு கால் செஞ்சு நம்ம சிச்சுவேஷனை சொல்லிடலாம்” என வேகமாக முடிவெடுத்தவள் சற்றும் யோசிக்காமல் அவனுக்கு கால் செய்ய, அஷ்வினின் ஃபோன் அலறியது.
அப்போது பார்த்து தன்னுடைய இன்னொரு எண் அதாவது அஷ்வின் பிசினஸ் யூஸ்ஸிற்கு வைத்திருக்கும் மற்றொரு எண்ணில் அவன் வேறு ஒருவருடன் காரிடரில் நின்று பேசிக் கொண்டுருக்க, அன்றைய அப்பாயின்மெண்ட்ஸ் பற்றி அவனின் அறைக்குள் சொல்ல வந்து காத்திருந்த ராகினியின் கண்களில் அஷ்வினின் பேர்ஸ்னல் ஃபோன் அடிப்பது பட்டது.
