அத்தியாயம் 10

இருவரும் அன்று மதியம் கோவைக்கு வந்தடைந்தார்கள். ராதையை அழைக்க, கோதை தன்னுடைய காரில் வந்திருந்தாள். வனிதாவை அழைக்க, பிரகாஷின் தம்பி விஜயேந்திரபூபதி வந்திருந்தான். 

 

ராதையைக் கண்ட கோதையோ அவளை இரண்டு வருடங்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் சந்தோஷத்துடன் கட்டி அணைத்தாள். ராதையுமே தன் அக்காவுடன் பாசப் பிணைப்பில் இணைந்து அகம் மகிழ்ந்தாள். அதன் பின்னர் வனிதாவிடம் பிரியாவிடை பெற்று தன் அக்காவுடன் சென்றாள். 

 

“ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க?” எனற்படி விஜய்யிடம் விளையாடினாள் வனிதா. 

 

“நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க? பார்த்தாலே தெரியுது ஒரு சுத்து பெருத்துப் போயிருக்க” என்றான் கிண்டலாக.

 

“ஏய் ரொம்ப வாய் பேசாத, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று பேச்சை தொடர்ந்தாள் வனிதா. அப்படியே அவர்களுடைய வீடு வந்தது.

 

இங்கு பாட்டி, விஜயகுமார் மற்றும் மைதிலி ராதையை வரவேற்க வெளியில் காத்திருந்தார்கள். 

 

“வாங்க இன்ஜினியர் மேடம்… வாழ்த்துக்கள்” என்றார் விஜயகுமார்.

 

“பெரியப்பா… பா! நான் எப்போவுமே உங்களோட அதே ராதை தான், நான் என்னிக்குமே உங்க ராதை அம்மு மட்டும் தான்” என்றவளோ தன் பாட்டியைக் கண்டதும் ஓடிப்போய் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். 

 

“பாட்டி நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். இனிமே நான் இங்க தான் இருக்க போறேன், ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள்.

 

“எனக்கும் சந்தோஷமா இருக்கு ராதைம்மா, உள்ளே போலாம் வா” என்று அவளின் கையை பிடித்துக் கொண்டுச் சென்றார் இராஜேஸ்வரி பாட்டி.

 

“அப்புறம் ராதை உன்னை என்னிக்கு வேலையில் சேர சொல்லிருக்காங்க?” எனக் கேட்டார் விஜயகுமார்.

 

“இன்னும் ஒரு மாசத்துல ஆஃபர் லெட்டர் வருமாம் பெரியப்பா, இங்க சரவணம்பட்டியில் தான் இருக்கு” என்றாள் ராதை.

 

“சரி ம்மா, உன்னை மாதிரி ஒரு பண்பான, பணிவான பெண்ணை வளர்த்த பெருமையை எங்களுக்கு கொடுத்துட்ட. உன் மனம் போல் எல்லாம் அமையணும்” என்றார்.

 

அப்போது, “அப்பா இங்க பாருங்க, நான் யாரை கூட்டிட்டு வந்திருக்கேன்னு” என்றாள் கோதை. 

 

அங்கே ஒரு ஐம்பது வயதை ஒட்டி இருக்கும் குறி சொல்லும் அம்மா இருந்தார்.

 

“கோதை இவங்க…” என்று அவர் இழுக்கும் போதே, “இவங்க குறி சொல்லுவாங்கப்பா, எனக்கு கேட்கணும்னு ஆசையா இருக்குப்பா, அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றாள் கோதை ஆர்வமாக.

 

“சரி ம்மா, அவங்களை உட்கார வை. மைதிலி ஏதாவது சாப்பிட கொண்டு வா” என்றழைத்தார். 

 

“அம்மா என் கையைப் பார்த்து குறி சொல்லுங்க” என்று தன் கையை நீட்டினாள் கோதை, அப்போது அங்கே வீட்டினர் எல்லாருமே கூடி தான் இருந்தார்கள்.

 

“ஜக்கம்மா… இந்த பாப்பாக்கு ஒரு நல்ல வழியை காட்டு தாயே…” என்றவரோ அவளின் கையைப் பார்த்து, 

 

“நீ வீட்டிற்குச் செல்லப் பெண், அடாவடிப் பெண். நீ இதுவரை ஆசைப்பட்ட எல்லாமே உனக்கு கிடைச்சிருக்கு ஆனா இப்போ நீ ஆசைப்படுற பொருள் உன்னை விட்டுச் செல்லப் போகுது அது உனக்கு கிடைக்கவே கிடைக்காது தாயி! உன்னை தேடி வர பொருளை வைச்சு நீ சந்தோஷமாக இரு! உன் வாய் தான் உனக்கு சனி, அதை கட்டுப்படுத்து” என்று முடித்தார். 

 

இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர் கோதை உட்பட. அவளின் முகம் போன போக்கை உணர்ந்த விஜயகுமார், “இதுக்கு தான் கோதை இதெல்லாம் பார்க்கக் கூடாது” என்றார் கடுப்பாக.

 

“டேய் விஜய், இந்த குறி சொல்றது, ஜாதகம் பார்க்குறது, இது எல்லாத்துலயும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அவங்க தப்பா ஒன்னும் சொல்லலை. இவ குணத்தை தான் சொன்னாங்க” என்றார் இராஜேஸ்வரி பாட்டி. 

 

“ராதை நீ போய் உன்னுடைய கையை காட்டும்மா” என்றார் மைதிலி. 

 

“ஐய்யோ பெரியம்மா, வேண்டாம் ப்ளிஸ்” என்றாள் ராதை. “சும்மா காட்டு ராதை” என்று அனைவரும் வற்புறுத்தியதால் ராதை வேறு வழியின்றி தன் கையைக் காட்டினாள்.

 

“ஜக்கம்மா… இந்த பாப்பாவுக்கு நல்ல வழியைக் காட்டு தாயே…” என்றபடி ராதையின் கையைப் பார்த்தார் அவர். 

 

“தாராள மனசு… சுத்தமான எண்ணங்கள் இதெல்லாம் உன் பாதையை தெளிவா ஆக்கிருக்கு. உன்னை தேடி வருவான் உன் மணவாளன் …! அவன் மத்த பொண்ணுங்களுக்கு கிருஷ்ணனை போல நண்பனா இருப்பான், உதவுவான். ஆனால், உன்கிட்ட அவன் ஒரு அசுரன்… உன்னை அவனுள்ள எடுத்துட்டு போக காத்திருக்கும் வேட்டைக்காரன்… நீ இனிமே தான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் கண்ணு! தனியா வெளியே போகாத, பருந்து போல் உன்னை கொத்திச் செல்ல காத்திருக்கான் அவன்!” என்று முடித்தார். 

 

இதைக் கேட்ட வீட்டினரோ அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். ராதைக்கோ அதிர்ச்சியைய் தாண்டி மிகக் குழப்பமாக இருந்தது. 

 

விஜயகுமாரின் மனதிலோ இனி இதை வளர்க்க கூடாது பெண்களின் மனது கவலைப்படுகிறது என்று அந்த அம்மாவுக்கு, தட்டில் பூ பழம் மற்றும்  இரண்டாயிரம் ரூபாயை வைத்து அனுப்பி வைத்தார். 

 

கோதையோ, “ஆமா ப்பா, இதெல்லாம் பொய். நான் இதை நம்பல. ஏய் ராதை, நீயும் மனசை போட்டு குழப்பிக்காத. அப்பா! ராதை சும்மாவே தனியா வெளிய போகமாட்டா. இதுல அந்த அம்மா வேற குழப்பி விட்டுட்டாங்க” என்றவளோ அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமல் நம்பாமல் சிரித்தாள்.

 

அவர்கள் சமானப்படுத்தியதில் அப்போதைக்கு சமாதானம் ஆனாள் ராதை. ஆனால் அவளுக்கு மனது படபடப்பாகவே இருந்தது. இரவு ஆனதும் தன் பாட்டிக்கு சாப்பிட்ட பிறகு கொடுக்கும் மாத்திரையைக் கொடுக்கச் சென்றாள்.

 

ராதையின் எண்ண ஓட்டத்தை கணித்த பாட்டி, “என்னம்மா, அந்த குறி சொன்ன அம்மா சொன்னதையே நினைச்சிட்டு இருக்கியா?” என்றவரோ, ராதையின் தலையை ஆறுதலாக தடவினார். 

 

“அது வந்து பாட்டி… எனக்கு என்னமோ மனசு படபடப்பா இருக்கு. என்னை ஜாக்கிரதையா இருக்க சொல்லிருக்காங்க, தனியா போக வேண்டாம்னு சொல்லிருக்காங்க. இதெல்லாம் கேட்டதுல இருந்து பயமா இருக்கு பாட்டி” என்றாள் ராதை.

 

“இங்க பாருடா ராதை, இந்த குறி, கைரேகை இது எல்லாத்துலயும் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். எல்லாத்தையும் நாம நம்பக் கூடாது. நம்ம எல்லாருக்கும் மேல கடவுள் இருக்காருமா, நாம எல்லாரும் அவருடைய பிள்ளைங்க. அதனால நம்ம எல்லாரையும் நல்லபடியா பாத்துப்பாரு, நீ இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம போய் தூங்கு” என்று அவளை தைரியப்படுத்தி அனுப்பினார் இராஜேஸ்வரி.

 

***

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!