தன்னை சமாதானப்படுத்திய பாட்டியிடம், “குட் நைட்” சொல்லிவிட்டு வந்து படுத்தாள் ராதை. ‘பாட்டி சொன்னது போல
கடவுள் பாத்துப்பாரு’ என்கிற நம்பிக்கையோடு உறங்க சென்றாள் ராதை.
அங்கு வனிதாவோ வீட்டிற்கு வந்ததுமே தேடியது பிரகாஷ் சிவமாறனை தான். “ஏய் வனிதா, என்ன ஆச்சு உனக்கு?” என புரியாமல் கேட்டார் வனிதாவின் தாய்.
“ஒன்னும் இல்லம்மா, அத்தை எங்க?” எனக் கேட்டவளின் குரலைக் கேட்டு வெளியில் வந்த விஜயா, “வா வனிதா, எப்படி இருக்க?” என சந்தோஷத்துடன் விசாரித்தார்.
“அத்தை, பிரகாஷ் அத்தான் கிட்ட நான் பேசணும்” என்றவளிடம், “ஏன்டி என்ன ஆச்சு?” எனக் கேட்டார் விஜயா.
“அவர் என் ஃபோன் நம்பர் வாங்குனாரு, ஆனா அவர் இதுவரைக்கும் எனக்கு கால் பண்ணவே இல்ல. ஒரு தடவை கூட” என்று முடிக்கும் போதே அழ ஆரம்பித்தாள்.
“வனிதா அழாத, நீயும் படிப்பை முடிச்சிட்ட, பிரகாஷூக்கும் இப்போ இருபத்தி ஏழு வயசு ஆகிடுச்சு. நான் மாமாகிட்ட பேசி உங்களோட கல்யாணத்துக்கு நாள் பாக்குறேன்” என்றார்.
“அண்ணி..” என ரமா தயக்கத்துடன் இழுக்க,
“என்னிக்கு இருந்தாலும் வனிதா தான் என் வீட்டு மருமக” என உறுதியாக சொல்லி ரமாவை மேலும் பேச விடாமல் செய்தார் விஜயா.
வனிதாவும், “சரி அத்தை” என்று விட்டு அவளின் அறைக்குச் சென்றாள்.
அன்று இரவு வீட்டிற்கு வந்த பிரகாஷ் சிவமாறனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க வனிதா தான் வந்தாள். அதைப் பார்த்து கடுப்பானவன், “இதெல்லாம் நீ பண்ணனும்னு அவசியம் இல்ல வனிதா, உன்கிட்ட ஓபனா பேச டைம் வந்திருச்சு, நீ உன் மனசுல தேவை இல்லாம ஆசையை வளர்த்துக்காத, நான் உன்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றவனோ சாப்பிடாமலேயே தன் அறைக்குச் சென்றான்.
வனிதாவிற்குத் தான் எங்கோ இடித்தது. இப்படி சொல்பவன் மனதில் எப்படி தன்னால் குடிப்போக முடியும்? இரண்டு வருடம் முன்னால் வரை சிறுபிள்ளைத் தனமாக இருந்து விட்டோம் என்றே நினைத்தாள். இனிமேல் இந்த வீட்டில் இருந்தால் அது அவமானம் என்று கருதிய வனிதா, தன் தந்தையிடம் இதைப் பற்றி பேசி ஒரு முடிவு எடுக்க நினைத்தாள்.
அடுத்த நாள் காலை விடிந்தவுடன் தன் அன்னை ரமாவிடம் தனியாகப் பேசினாள் வனிதா. “அம்மா அத்தானுக்கு என் மேல விருப்பம் இல்ல. அவருக்கு என் மேல் விருப்பம் இல்லைனு தெரிஞ்சும், அவர் வேணும் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அசிங்கமா என்னால யோசிக்க முடியாது. நம்ம கிளம்பிடலாம் ம்மா” என்றாள்.
“நீ சொல்றதும் வாஸ்தவம் தான் கண்ணு, நமக்கு இந்த காசு, பணம் எல்லாம் வேண்டாம். நிம்மதியா வாழணும் அது தான் முக்கியம். நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோ மா” என அவளை ஆறுதல் படுத்திச் சென்றார் அவளுடைய அன்னை ரமா.
ரமா, மணிகண்டனிடம் இதைப் பற்றிக் கூறிய பின்னர் அவர் நேராக விஜயாவிடம் சென்று, “உன் ஆசை எனக்கு புரியுதும்மா, ஆனா அதுக்கு பிரகாஷ்க்கு விருப்பம் இல்ல. இதுக்கு அப்புறம் நாங்க இனிமே இங்க தங்குறது நல்லா இருக்காது. எங்க வீட்டுக்கே கிளம்புறோம்” என்றார்.
விஜயாவிற்கும் பிரகாஷ் வனிதாவை திருமணம் செய்வான் என்று நம்பிக்கை இல்லாமல் தான் போனது. மகன் அவ்வளவு உறுதியாக இருக்கும் பொழுது அவரால் என்ன தான் செய்ய முடியும்.
மேலும் தன் அண்ணன் மகளை காயப்படுத்த வேண்டாம் என்று அவரும் தன் அண்ணனிடம் சரி என்று சொன்னார்.
அன்று காலை கோதைக்கு ஏதோ மனது படபடப்பாகவே இருந்தது. “ஏன் கா, ஒரு மாதிரி இருக்க என்ன பிரச்சனை?” என்று கேட்டாள் ராதை.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ராதை, இன்னிக்கு ஒரு கிளைன்ட் கூட பிரசென்டேஷன் இருக்கு. எப்போவுமே பிரகாஷ் தான் அதெல்லாம் பாத்துப்பாரு, இன்னிக்கு என்ன தோணுச்சோ என்னை பிரசென்டேஷன் எடுக்க சொல்றாரு. அதான் பயமா இருக்கு” என்றாள்.
“இதெல்லாம் உனக்கு சப்ப விஷயம் கா, நீ நல்லா பண்ணுவ பயப்படாத” என்றாள்.
“ம்ம்… நான் கிளம்பறேன்” என்றவளோ தன் காரை ஓட்டிக்கொண்டு பிரகாஷின் PSM Exports க்கு சென்றாள். பிரகாஷோ கோதை வந்தவுடன் தன் லாப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டே, “எல்லாம் பக்கா தானே கோதை?” என்றான். “ஆ… ஆ” என்று தடுமாறினாள் கோதை.
உண்மையில் கோதைக்கு ஒரு கம்பெனியை எடுத்து நடத்தும் அளவுக்கு அனுபவமும் இல்லை. அறிவும் இல்லை. கண்மூடித்தனமாக பிரகாஷிடம் நெருக்கம் ஆக வேண்டும் என்று எடுத்த முடிவு தான் அது. விஜயகுமாரும் தன் மகளின் லட்சணம் தெரிந்தும் அவளை நம்பி பொறுப்புகளைக் கொடுத்து பெரிய முட்டாள்தனம் செய்து விட்டார்.
“ஓகே கோதை, நீ என்கிட்ட ஒரு தடவை பிரசென்டேஷன் பண்ணிக்காட்டு, அப்போ தான் நீ கிளைன்ட் கிட்ட பண்ணும் போது உனக்கு ஈஸியா இருக்கும்” என்றான். ஆரம்பத்திலேயே சொதப்பிய கோதையின் கண்களை மட்டும் கவனித்துக் கொண்டே இருந்தான் பிரகாஷ்.
அவளுக்கு சுத்தமாக அறிவு இல்லை என்பதை உணர்ந்த பிரகாஷ், “இனஃப் கோதை, நீ என்னோட பிரண்ட். ஆனா இது கம்பெனி சம்பந்தப்பட்ட விஷயம். இதுக்கு ஏத்த ஆள் நீ இல்லை” என்றான் பிரகாஷ் முடிவாக.
“இப்போ விபி குரூப்ஸ்ல இருந்து எனக்கு ஒரு பக்காவான ப்ரேசென்டேஷன் வரணும் கோதை. அதை செய்றது நீயா இருக்கலாம் இல்ல, உங்க அப்பாவா கூட இருக்கலாம், இல்ல உங்க குடும்பத்துல வேற யாராவதா கூட இருக்கலாம்! உனக்கு டூ டேஸ் டைம் தரேன். எனக்கு பக்காவா ரெடி ஆகணும்” எனத் தீர்மானமாகக் கூறினான்.
“பிரகாஷ் ப்ளிஸ் புரிஞ்சிக்கோ, அங்க அப்பா இருக்கும் போது நாங்க ஓவர்சீஸ் கிளைன்ட் கிட்டலாம் போனது இல்லை. பட் நீ மேக்ஸிமம் ஷேர்ஸ் இன்வெஸ்ட் பண்ண அப்பறம் நீ குளோபல் லெவல்ல விபி குரூப்ஸை கொண்டு போற, அது ரொம்ப நல்ல விஷயம் தான். ஆனா அப்பாக்கும் இந்த மாதிரி பிரசென்டேஷன் எடுத்துலாம் பழக்கம் இல்ல. எனக்கும் சுத்தமா இல்ல” என்றாள் கோதை.
“ஓகே, சோ நீ உன்னோட சைடுல இருந்து சொல்லிட்ட, இப்போ நானும் என்னோட சைடுல இருந்து சொல்லணும் இல்லயா. ஐ வில் கிவ் யூ டூ ஆப்ஷன்ஸ், ஒன்னு யூ நீட் டு லீவ் யுவர் சிஇஓ பொசிஷன்… உன் வீட்டுல இருக்குற வேற யாராவது அந்த பொசிஷனுக்கு வரணும். இல்லனா நான் ஒரு சிஇஓவை அப்பாயிண்ட் பண்ணுவேன். நீ கம்பெனியை என்கிட்ட வித்துரு. ஆனா இந்த இரண்டு ஆப்ஷன்ல எதை எடுத்தாலும் அந்த நியூ சிஇஓ எனக்கு கீழ தான் வேலை பாக்கணும். ஏன்னா முக்கால்வாசி ஷேர்ஸ் இப்போ என்னுடையது” என்றான் பிரகாஷ் அதிரடியாக.
“பிரகாஷ்… வாட் இஸ் திஸ்?” என்றாள் கோதை அதிர்ச்சி கலந்த பதற்றத்துடன். “ஐ அம் சாரி கோதை, பட் நோ மோர் ஆப்ஷன்ஸ்” என்றான் தீர்மானமாக.
“ஒகே பிரகாஷ், நான் யோசிச்சிட்டு சொல்றேன். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடு” என்றாள் கோதை. பிரகாஷின் மேல் கோபம் இருந்தாலும் அவனின் மீது கொண்டுள்ள காதல் கோதையை அடங்கச் செய்தது.
பிரகாஷ் ஒரு திட்டத்தோடு தான் காயை நகர்த்தினான். அதற்கு தகுந்த போல் கோதைக்கும் நிர்வாகம் நடத்தும் திறன் இல்லாமல் போனது அவனுக்கு வசதியானது.
வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் இதைப் பற்றிக் கூறினாள் கோதை. இதைக் கேட்ட விஜயகுமாருக்கோ அதிர்ச்சியில் தலையே சுற்றியது.
“ஓவரா செல்லம் கொடுத்து இப்போ எந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்திருக்கா பாருங்க” எனக் கத்தினார் மைதிலி.
அன்று ராதை கோவிலுக்குச் சென்றிருந்தாள். தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டியவள், “முருகா… நீங்க தான் என்னையும், என் குடும்பத்தையும் காப்பாத்தணும். என் மனசு என்னவோ ஏதோ தப்பு நடக்க போகுதுனு சொல்லிட்டே இருக்கு.. என் கூட எப்போயும் இருங்க! எல்லாமே நல்லதா மட்டும் தான் நடக்கணும்” என்று வேண்டியவள் கோவில் பிரகாரத்தை சுற்றிய பின்னர் வெளியில் வந்தாள்.
ராதையின் வீட்டிற்கு அடுத்த தெருவில் தான் இந்த கோவில் இருக்கிறது. அதனால் அவள் நடந்து தான் வந்தாள். வெளியே போட்டுருந்த தன் காலணிகளை அணிந்தவள் வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருக்கையில் வேகமாக ஒரு BMW கார் அவளின் பக்கத்தில் வந்து நின்றது. அந்த தீடீர் சம்பவத்தில் அதிர்ந்த ராதை சிலையாய் நின்றாள்.
அதிலிருந்து வேகமாக வந்து இறங்கிய பிரகாஷ் சிவமாறன், ராதையின் முன் வந்து நின்று தன் காரின் மேல் ஸ்டைலாக சாய்ந்துக் கொண்டு, அவனின் இருகைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு ராதையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘யார் இவரு? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனால் ஞாபகத்திற்கு வரலையே’ என குழம்பினாள் ராதை.
“கோமகள் ராதை…. ரெண்டு வருஷம் முன்னாடி பத்தொன்பது வயசு சின்னப் பொண்ணு, இப்போ இருபத்தியொரு வயசு அழகான பொண்ணாகிட்ட. உனக்கு வயசு ஏற ஏற அழகும் கூடுதே…” என்றவனோ அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.
அவனின் பார்வையில் கடுப்பானவள், “நீங்க யாருனு எனக்கு தெரியல, நான் கிளம்புறேன்” என்றவளோ தன் வழியைப் பார்த்து நடக்க முன்னேறினாள்.
அவள் சொன்ன பதில் பிரகாஷிற்கு கோபத்தை உண்டாக்கியது. ‘என்னை யாரன்னு அவளுக்கு தெரியலன்னா, அவ மனசுல நான் இம்மி அளவும் பதியலன்றது தானே உண்மை’ என மனதில் நினைத்தவனோ தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன், தன்னைத் தாண்டிச் செல்லும் ராதையின் கையைப் பிடித்தான்.
அதில் திடுக்கிட்ட ராதை, “ப்ளிஸ் என் கையை விடுங்க, நான் வீட்டுக்கு போகணும்… நீங்க யாருனு கூட எனக்கு தெரியல” என்றவளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது.
“ராதை, நான் பிரகாஷ் சிவமாறன்… இப்போ நான் யாருனு உனக்கு தெரியும். நான் உன்னை லவ் பண்றேன்… உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்… நீயும் என்னை காதலிக்கணும்! என்னை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்!” என மென்மையாக ஆரம்பித்து அதிகாரமாக முடித்தான்.
