அத்தியாயம் 19
அதிகாலை ஊட்டி காட்டேஜை வந்தடைந்த வம்சி முதலில் கண்டது என்னவோ சோகமாக காட்டேஜின் டெரேஸில் அமர்ந்து இருந்த கோதையைத் தான்.
“என்ன கல்யாணப் பொண்ணு, தூக்கம் கூட வராம உன் லவ்வரோட டிரீம்ஸ்ல இருக்கியா?” என வம்சி கேட்டதில் பட்டென நினைவுக்கு வந்த கோதை, “கிருஷ் வந்துட்டியா… உனக்காக தான் நான் தூங்காம காத்துக்கிட்டு இருந்தேன்” என்று அழத் தொடங்கினாள்.
“ஏய்! கோதை ரிலாக்ஸ்.. நான் தான் வந்துட்டேன்ல, நீ எனக்கு கால் பண்ணி அழுகுற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டவனிடம், நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் கோதை.
“கோதை இங்கப் பாரு உனக்கு நான் ஒரு சஜஷன் சொல்றேன். எப்பவுமே உன்னை உயிரா நினைக்கிறவனை மட்டும் கல்யாணம் பண்ணு. அவனுக்கு தான் உன்னை பிடிக்கவே இல்லையே, அப்போ எதுக்கு அவனுக்காக இப்படி துடிக்கிற?” என்று சலிப்பாக கேட்டான் வம்சி.
“அப்போ அந்த அனாதை ராதை அவனுக்கு கிடைக்கணும்னு சொல்றியா கிருஷ்?” என்று தேம்பி தேம்பி அழுதாள்.
“ராதையா! யார் அது?” என்று புரியாமல் கேட்டான் வம்சி.
“உனக்கு உண்மையாவே ராதையை மறந்து போச்சா?” என அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் மேலும் அழுதவள், அவன் ராதையைப் பத்து வருடம் முன்னால் அவமானப் படுத்தியதை சொல்லி, தன் சித்தப்பா மகள் இன்னும் தங்களோடு தான் இருக்கிறாள் என்று சொன்னாள்.
ராதையை மறந்து விட்ட வம்சிக்கு கோதை நடந்ததை ஞாபகம் படுத்திய பின்பு, “நான் அன்னிக்கே உன் கிட்ட சொன்னேன் கோதை, அவளால உனக்கு பிரச்சனை வரும்னு… அதான் நீ இப்போ இப்படி அழுதுட்டு வந்து நிக்குற” என்று கடுப்பானான்.
“சரியா சொன்னீங்க ண்ணா, நீங்க வந்திருப்பீங்கனு எனக்குத் தெரியும். அதான் எழுந்திருச்சிட்டேன்” என்ற யசோதாவோ தன் அண்ணனைக் கட்டிக்கொண்டு, “அண்ணா நீங்க போய் தூங்குங்க, நம்ம நாளைக்கு பேசிக்கலாம்” என்று அவனை இழுத்தாள் யசோதா.
“ஏய் யசோ, ஒரு நிமிஷம்” என்றவனோ கோதையின் கையைக் குலுக்கி, “ஹாப்பி பேர்த்டே கோதை… திஸ் இஸ் ஃபார் யு” என்று சொன்னவன், ஒரு அழகான மெரூன் நிற சதுரமான வெல்வெட் டப்பாவை நீட்ட, இத்தனை நேரம் இருந்த அழுகை விசும்பல் சற்று மட்டுப்பட்டு லேசான புன்னகை முகத்துடன் அதை பெற்றுக் கொண்ட கோதை அதை திறந்து பார்க்க, ஸ்தம்பித்து விட்டாள்.. அதில் மிக விலை உயர்ந்த அழகான வைர நெக்லஸ் இருந்தது… அதனைக் கண்டு அவள் அகம் மகிழ்ந்தாலும் கூட,
“க்ருஷ், இந்த வருஷம் என்னோட பேர்த்டே கிஃப்ட் வேற வேணும்… நான் கேட்குறதை கொடுப்பியா?” என மீண்டும் அழுதுக் கொண்டே கேட்டாள். தன் தோழி அழுதுக் கொண்டே இருப்பதால் அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் வம்சியும், அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன் என்று சத்தியம் செய்தான்.
“க்ருஷ், எனக்கு அந்த ராதையை அழ வைக்கணும்… பிரகாஷ் அவளை வெறுக்கணும்… பிரகாஷ் மற்ற ஆம்பளைங்க மாதிரி கிடையாது, ரொம்ப விவரமானவர். அவர் கிட்ட இருந்து ராதையை விலக்கணும்னா அது உன்னைப் போல விவரம் உள்ள ஒருத்தனால் தான் செய்ய முடியும்.”
“ராதைக்கு கெட்டப் பெயர் கிடைக்கணும், அதுவும் அந்தப் பெயர் உன்னால கிடைச்சா தான் பிரகாஷ் அடங்குவான். அப்புறம் என்னை கல்யாணம் பண்ணிக்குவான்” என்றாள் வன்மமாக.
“ஏய் கோதை, லூசு மாதிரி பேசாத. வம்சி அண்ணாக்கு கல்யாணம் முடிவாயிடுச்சு. அண்ணா எங்க மாமா பொண்ணு ஷிவானியை கல்யாணம் பண்ணிக்கப் போறார்னு உனக்கும் தெரியும் கோதை. அப்படி இருக்கும் போது, அண்ணா எப்படி நீ சொல்ற மாதிரி எல்லாம் நடந்துப்பாரு” என இம்முறை கடுப்பானாள் யசோதா.
“அது வந்து யசோ, இப்போ கிருஷ்ஷால மட்டும் தான் என் வாழ்க்கையைக் காப்பாத்த முடியும். சின்ன வயசுலயே அந்த ராதை கிருஷ்ஷைப் பார்த்து அப்படி பயந்து நடுங்குவா. இப்போ எனக்கு பக்க பலமா க்ருஷ் இருந்தா கண்டிப்பா ராதை நடுங்குவா. அதுவும் இல்லாம பிரகாஷ் சிவமாறன் அவளை வெறுக்கணும், அதான் எனக்கு வேணும்” என்று பிடிவாதமாகக் கூறினாள்.
“கோதை, உனக்கு நான் ஹெல்ப் பண்றேன். நீ யசோவைக் கண்டுக்காத” என்றவன் யசோவிடம் திரும்பி, “உனக்கு உன்னோட பிரண்ட் ஷிவானியோட லைஃப் தான் முக்கியம் யசோ ரைட். உன்னால தான் இன்னிக்கு எனக்கும் ஷிவானிக்கும் கல்யாணம் நடக்கப்போகுது, எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கியா?”
“யசோ! அந்த ஷிவானி உன்னை வைச்சு தான் வீட்டுல காய் நகர்த்திருக்கா, ஆனாலும் நான் ஏன் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டேன்னு தெரியுமா? பாட்டி, தாத்தாக்காக… அவங்க இரண்டு பேருக்குமே இப்போ ஹெல்த் பிராப்ளம் இருக்கு. என்கிட்ட அவங்க அவ்வளவு கெஞ்சிக் கேட்டதால் மட்டும் தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.”
“அண்ட் மோர்ஓவர் ஷிவானி தான் என்னை உண்மையாக காதலிக்குறாளே, அதனால என் மேல அவளுக்கு நிறைய நம்பிக்கை இருக்கும். பட் கோதை என்னோட பிரண்ட், அவளோட வாழ்க்கை இப்போ கஷ்டத்துல இருக்கும் போது நான் தான் அதை சரி பண்ணனும்” என்றான் வம்சி தீர்மானமாக.
“தாங்க் யூ சோ மச் க்ருஷ்” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மணி ஐந்தரை ஆனது. அச்சமயம் எழுந்து டெரேஸிற்கு வந்தான் பிரகாஷ்.
அங்கு புதிதாக வந்திருந்த வம்சியை ஆராய்ந்தவன் நேராக கோதையிடம் வந்து, “ஹாப்பி பேர்த்டே கோதை, நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும். உனக்கு ஏத்த ஒருவன் கண்டிப்பா வருவான். அவனை கல்யாணம் பண்ணிக்கோ” என்றவன் வம்சியை பார்த்து, “இவர் யாரு?” என்று கேட்டான்.
பிரகாஷ் பேசுவதையே மார்புக்கு குறுக்கே தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு கவனித்த வம்சி அவனிடம் எதுவும் பேசாமல் அவர்களின் உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
“இவர் வம்சி வேதந்த் கிருஷ்ணா… என்னுடைய மாமா பையன்” என்று அறிமுகப்படுத்தினாள் கோதை.
“ஓ இவர் தான் உன்னோட கோடீஸ்வர மாமன் மகனா… என்னை விட பணம் பலம் அதிகம் இருக்கு போலயே, அழகாவும் இருக்காரு. அப்போ இவரையே கல்யாணம் பண்ணிக்கோ கோதை” என்று வேண்டும் என்றே கூறினான் பிரகாஷ்.
இதைக்கேட்டு கடுப்பான வம்சி, “ஸ்டாப் இட், உனக்கு டீசென்சினா என்னனு கூட தெரியாதா! ஒரு பொண்ணை பிடிக்கலைனா அவக்கிட்ட எப்படி பேசணும்னு ஒரு லிமிட் இருக்கு, அண்ட் என்கிட்ட நீ இதுவரைக்கும் பேசுனது கூட கிடையாது. இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குற…”
“கோதை என்னோட பிரண்ட். லுக் பிரகாஷ் நீ ஒரு லோக்கல், பட் நான் இன்டர்நேஷனல். நான் நினைச்சேனா உன்னோட பிசினஸை ஒன்னும் இல்லாம ஆக்கிடுவேன்” என்று மிரட்டிவிட்டு கோதையை முறைத்தவன் உள்ளேச் சென்றான் வம்சி.
கோபமாக செல்லும் வம்சியை நக்கல் புன்னகையுடன் பார்த்த பிரகாஷோ கோதையின் புறம் திரும்பி, “இங்க பார் கோதை, இன்னிக்கு உன்னோட பேர்த்டே அதனால உன்கிட்ட கோபப்படாம இருக்கேன். இன்னிக்கு ஈவினிங் உன்னோட பர்த்டே பார்ட்டில நமக்கு முடிவு பண்ணின கல்யாணத்தை பெரியவங்க சொல்ற முன்ன, நான் ராதையை லவ் பண்றதை எல்லார் முன்னாடியும் சொல்லப்போறேன். அதுக்கு அப்புறமும் வெக்கமும் மானமும் உள்ள குடும்பமாக இருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்துவீங்க” என்று சிரித்துக்கொண்டே காட்டேஜிற்குள் சென்றுவிட்டான்.
அங்கே நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டுருந்த யசோதாவோ, “இதெல்லாம் உனக்கு தேவையா கோதை? இதுக்கு மேலேயும் நீ அவன் கிட்ட அவமானப்பட முடியாது. பேசாம அந்த ராதையே அவனைக் கல்யாணம் பண்ணிக்கட்டும், இவனை நீ கல்யாணம் பண்ணா கூட உன் வாழ்க்கை நிம்மதியா இருக்காது” என்று முடித்தாள்.
“கிருஷ் வர வரைக்கும் வேற மாதிரி பேசுன, இப்போ உன் மாமா பொண்ணு ஷிவானிக்காக பேச்சை மாத்தி பிரகாஷ் ராதையைக் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு சொல்ற, நானும் உன் அத்தை பொண்ணு தான்.”
அப்போது யசோதாவை அழைக்க வந்தான் வம்சி… அதையறியாத கோதையோ, “ச்ச எல்லாமே என் தப்பு, க்ருஷ் மாதிரி ஒரு ஹான்ட்சமான மில்லியனர் மாமன் பையன் கூட பிரண்டா பழகுனதுக்கு பதிலா அவனைக் காதலிச்சிருக்கலாம்… அந்த ஷிவானியை விட நான் அழகா தானே இருக்கேன்” என்றபடி யசோதாவிடம் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
கோதை அப்படி பேசி முடிக்கும் பொழுதே அவளின் கன்னத்தில் அறைந்திருந்தான் வம்சி. இதைப் பார்த்த யசோதாவும் அதிர்ந்து நின்றாள்.
“ஆர் யூ மேட் கோதை! லவ் எல்லாம் அழகைப் பார்த்து தான் வருதுனே வெச்சிக்கலாம். ஆனா அதையும் தாண்டி ஒரு ஃபீல் இருக்கு. பிரகாஷை விட நான் பெட்டர்னு ஃபீல் பண்றியே… நீ என்னைக் காதலிச்சு இருந்தாலும் நான் உன்னைக் காதலிச்சிருக்க மாட்டேன். உன்னை என்னோட பிரண்ட்டா மட்டும் தான் பார்க்குறேன்” என கடுப்புடன் சொன்னான்.
வம்சி அங்கு வருவான் என்பதை எதிர்பார்க்காத கோதையோ, “என்னை மன்னிச்சிடு க்ருஷ், ஏன் யாருக்குமே என்னை பிடிக்க மாட்டிங்குது? நான் அழகா தானே இருக்கேன். ஏன் பிரகாஷ் என்னை வெறுக்குறான்? எனக்குப் பைத்தியமே பிடிக்குற போல் இருக்கு…” என்று அந்த இடத்திலேயே அமர்ந்து அழுத கோதையோ,
“போச்சு, எல்லாம் போச்சு! பிரகாஷ் என்கிட்ட சவால் விட்டுட்டு போறார். இன்னிக்கு ஈவ்னிங் என்னோட பர்த்டே பார்ட்டில ராதையை காதலிக்குறதா எல்லார் முன்னாடியும் சொல்லப் போறாராம்… அந்த ராதை கிட்ட நான் தோத்து போய்ட்டேன்” என்று கதறி கதறி அழுதாள்.
அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்த நிலையில் வம்சி கோதையை அழைத்தான். “கோதை அழாத, கண்டிப்பா நீ ராதைக்கிட்ட தோக்க மாட்ட. இன்னிக்கு ஈவினிங் ராதையோட பெயர் கேவலப்படும்… அது கண்டிப்பா நடக்கும்! பிரகாஷே அவளை கல்யாணம் பண்ண மாட்டான்” என்று கூறிவிட்டு உள்ளேச் சென்றுவிட்டான். வம்சியிடமே வாக்கு வாங்கியதை நினைத்து நம்பிக்கையில் இருந்தாள் கோதை.
வம்சியின் பின்னே சென்ற யசோதாவோ, “அண்ணா, எனக்கென்னமோ இது ஏதோ பிரச்சனையில் போய் முடிஞ்சிருமோனு பயமா இருக்கு” என்றாள் படபடப்பாக.
“ம்ம் யசோ இதுல அந்த ராதையோட பெயர் மட்டும் தான் கெட்டுப் போகப் போகுது என்னோட நேம் க்கு ஒன்னும் பாதிப்பு வராது… கவலைப்படாத” என்று இம்முறை தங்கையைத் தேற்றியவன் தனக்கு தூக்கம் வருவதாய்க் கூறிவிட்டு உறங்கச் சென்றான்.
***
