அத்தியாயம் 25
பிரகாஷின் பெற்றோர்கள் ராதையை, பிரகாஷிற்கு மணக்க கேட்டு, நிச்சயத்திற்கு நாளையும் குறித்துக் கொண்டுச் சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பின் வீடே ரணகளம் ஆனது. கோதை அன்றும் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள். அவளை எப்படி அடக்குவது என்றே யாருக்கும் தெரியவில்லை.
தான் ஆசைப்பட்ட பிரகாஷ், இப்போது ராதைக்குச் சொந்தம் ஆகப் போகிறான் என்பது அவள் மனதில் நெருப்பை உண்டாக்கியது.
இராஜேஸ்வரி பாட்டி ராதையிடம் அமர்ந்து, “நீ இதை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத ராதைம்மா, நீ எடுத்த முடிவு தான் சரி” என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.
தன் பெரியம்மா, பெரியப்பாவிற்காகத் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்ட விஷயத்தைப் பாட்டியிடம் கூறாமல் இருந்த ராதை, பாட்டி சொல்வதையெல்லாம் கேட்டு அமைதியாக இருந்தாள்.
தன் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிய கோதை, ரொம்ப நேரமாக தன் நகங்களைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது தான் போன வாரம் க்ருஷ் சொன்னது அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. உடனடியாக அவனுக்கு கால் செய்தாள்.
ஹார்ஸ்லி ஹில்ஸில் தன்னுடைய பங்களாவின் பக்கத்தில் இருக்கும் தெருவில், மாலை ஜாகிங் சென்றுக் கொண்டிருந்த வம்சிக்கு கால் வந்தது.
தான் இங்கே இருந்தால் தன் வீட்டினர் யாரும் தனக்கு கால் செய்ய மாட்டார்கள் என்று வம்சிக்குத் தெரியும்.
இரண்டு நாட்களாக பிரணவ் மற்றும் தாரிகா மட்டுமே வேலை விஷயமாக அவ்வப்போது கால் செய்துக் கொண்டிருந்தனர். அவர்களாக இருக்கும் என்று நினைத்து தன்னுடைய ஐ போனை எடுத்துப் பார்த்தான்.
‘இவ எதுக்கு இப்போ கால் பண்றா?’ என்று சிந்தித்தவனோ, “சொல்லு கோதை” என்று ஓரிடத்தில் நின்று பேசினான்.
“க்ருஷ், பிரகாஷூக்கும் ராதைக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. என்னமோ பிரகாஷ் மிரட்டினாராம், இந்த கல்யாணம் நடக்கலைனா நாங்க எல்லாரும் நடுத்தெருவுல நிப்போம்னு… அந்த ராதை, அக்கா அக்கானு சீன் போட்டுட்டு கடைசியா பிரகாஷைக் கல்யாணம் பண்ண ரெடி ஆயிட்டா” என்று கடுப்பாகக் கூறினாள்.
இதைக் கேட்ட வம்சி, “நீ எனக்கு ஒரு வேலை செய்யணும்னு நான் அன்னிக்கு சொன்னேன். அதுக்கு இப்போ நேரம் வந்துருச்சு. டெய்லி ராதை எங்கே எல்லாம் வெளியே போவானு எனக்கு நாளைக்கு நைட்டுக்குள்ள தெரியணும்” என்றான் வம்சி.
“நான் கண்டிப்பா பண்றேன் க்ருஷ். ஆனா நீ அவளை என்ன பண்ணப் போற?” என்று ஆவலாக கேட்டாள்.
இதைக் கேட்டு எரிச்சல் அடைந்த வம்சி, “இங்கப் பாரு கோதை, உன்னால தான் அந்த ராதை எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்திட்டா. அவளை எல்லாம் பத்து வருஷம் முன்னாடியே நான் ஏதாவது பண்ணியிருக்கணும்.”
“எவ்வளவு தைரியம் அவளுக்கு, நான் சொன்னதைப் போல பேசாம மானம் மண்ணாங்கட்டினு எல்லார் முன்னாடியும் அன்னிக்கு அவ கிரியேட் பண்ணினா, அவளை என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று கால்லை கட் செய்து விட்டான்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல், ராதைக்கு பிரகாஷூடன் திருமணம் நடக்கக் கூடாது. அதான் தனக்கு வேண்டும் என்பதில் குறியாக இருந்த கோதை, க்ருஷ் என்ன செய்யப் போகிறான் என்பதை பற்றி நினைக்கவில்லை.
ராதையை உன்னிப்பாக கவனித்த கோதை, அடுத்த நாள் இரவு
க்ருஷ்ஷிற்கு கால் செய்து, “அவ எங்கேயும் வெளியே எல்லாம் போறது இல்ல க்ருஷ். பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்குத் தான் எப்பயும் போவா. அதுவும் கொஞ்ச நாளா போகல. என்னமோ நேத்துல இருந்து போறா. பிரகாஷூக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகப் போகுற சந்தோஷம் போல” என்று கடுப்பாகக் கூறினாள் கோதை.
“ஓ சரி, எத்தனை மணிக்கு போவா?” என்று கேட்ட வம்சியிடம், “சாயந்தரம் அஞ்சு மணிக்கு க்ருஷ்” என்றாள் கோதை.
“சரி நீ ஃபோனை வை” என்று கால்லை கட் செய்தவன், கோயம்புத்தூரில் இருக்கும் அந்த பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தனக்கு புக் செய்த அறையில் இருந்தான்.
“கோமகள் ராதை! நாளைக்கு உன்னோட மானம் மரியாதை எல்லாம் எங்கே போகுதுனு நான் பார்க்கத் தான் டி போறேன்” என்று ஆக்ரோஷமாக சிரித்தான்.
***
அன்று இரவு ராதைக்கு கால் செய்திருந்தாள் வனிதா. “டி ராதை, நான் கேள்விப்பட்டேன், நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது ரொம்ப சந்தோஷம் டி. இனி உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும். பிரகாஷ் அத்தான் உன் மேல பைத்தியமா இருக்காரு. அதனால உன்னை நல்லா பாத்துப்பாரு” என்றாள் வனிதா.
ஒரு பெருமூச்சு விட்ட ராதையும், “நான் நேத்துல இருந்து மறுபடியும் கோவிலுக்குப் போக ஆரம்பிச்சிட்டேன் டி. அந்த குறி சொன்னவங்க தனியா வெளிய போனா ஆபத்துனு சொன்னாங்க, அதான் இனி பிரகாஷை நினைச்சு பயப்பட அவசியம் இல்லாம போச்சே, விதிப்படி நடக்கட்டும்… சரி நாளைக்கு நீயும் கோவிலுக்கு வரியா?” என்று கேட்ட ராதையிடம்,
“இல்ல டி, இனி நீ தைரியமா வெளியே போலாம். நாளைக்கு எங்க வீட்டிற்கு கெஸ்ட் வராங்க, அதனால என்னால் வர முடியாதுடி சாரி” என்றாள் வனிதா.
“ம்ம் ஆமாம், நீ சொல்றதும் கரெக்ட் தான். இனி எதுக்கு பயம்? சரிடி நான் உனக்கு நாளைக்குப் பேசுறேன், பயங்கரமா தூக்கம் வருது” என்று படுத்த ராதைக்கு அடுத்த நாள் காலை பிரகாஷின் முகத்தில் விடிந்தது.
காலை ராதை அவள் அறையில் விழிக்கும் போதே அவள் முன் நின்றுக் கொண்டிருந்தான் பிரகாஷ் சிவமாறன். முதலில் அவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவள், பின் தன் மனதை ஒரு நிலைப்படுத்தி, “நீங்க எப்படி இங்க?” என்று தயங்கினாள்.
“என்னுடைய வருங்கால பொண்டாட்டிக்கு இன்னிக்கு பேர்த்ட்டே… அதான் அவளைக் காலையிலேயே பார்த்து விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். ஹாப்பி பர்த்டே ராதை” என்று அவளிடம் ஒரு அழகிய சிவப்பு வண்ண சில்க் காட்டன் சேலையைக் கொடுத்தவன்,
“உன்னை சேலையில பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ராதை. எனக்கு இப்போ முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் சாயந்தரம் ஆறு மணிக்கு வந்து வெயிட் பண்ணுவேன். நீ இந்த சேலையில ரெடியா இரு, நான் உன்னை வெளியே கூட்டிட்டு போறேன்.”
“ஏன் இப்படி முழிக்குற? நீ என்னோட வருங்கால பொண்டாட்டி, உன்னோட பெரியப்பா, பெரியம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டு தான் உன்னை வெளியில கூப்பிடுறேன். இனி என் ஃப்போன் நம்பரை நீ அன்பிளாக் செஞ்சிடலாம்” என்று அவளிடம் விடைபெற்று விட்டு கிளம்பி விட்டான்.
எல்லாம் கனவு போல் தோன்றிய ராதைக்கு, ‘ஒருவேளை கடவுளா பார்த்து நமக்கு கொடுத்த வாழ்க்கை இது தானா! இனி நான் தான் பிரிகாஷை சந்தோஷமாக ஏத்துக்கணுமா?’ என்று பெண்ணவளுக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் தோன்றியது. ஆனாலும் மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோஷம் இருந்தது.
தன் பிறந்தநாளுக்காக பிரகாஷ் காலையிலேயே வந்து வாழ்த்தியது ராதைக்கு ஒரு வித நம்பிக்கையை விதைத்தது, இந்த வாழ்க்கை தனக்கு நன்றாக இருக்கும் என்று.
பிரகாஷ் சென்ற பின் தன் பாட்டியிடம் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்கிய ராதைக்கு, பாட்டி அவளுடைய கையில் ஒரு லட்சம் ரூபாய் காசோலையைக் கொடுத்தார். “ஐய்யோ பாட்டி, எதுக்கு இதெல்லாம் எனக்கு உங்களோட அன்பு மட்டும் போதும்” என்று அதை வாங்க மறுத்தாள் ராதை.
“நீ உன்னோட எல்லா பிறந்தநாளுக்கும் எங்கக்கிட்ட ஆசீர்வாதம் வாங்குற, ஆனா அடுத்த வருஷம் நீ எங்களோட இருக்க மாட்ட, கல்யாணம் பண்ணிட்டு உன் மாப்பிள்ளை வீட்டுக்கு போயிடுவ…” என்று இராஜேஸ்வரி பாட்டி சொல்லும்போதே அவர் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இதைக் கேட்டு ராதைக்கும் அழுகை வர ஆரம்பித்தது.
“பாட்டி, அம்மா, அப்பா இல்லாத என்னை இருபத்தி ரெண்டு வருஷமா அன்பு, ஆதரவு, அரவணைப்பு கொடுத்தெல்லாம் வளர்த்துருக்கீங்க… நான் கல்யாணம் பண்ணிட்டு போனாலும் உங்களை அடிக்கடி வந்து பார்ப்பேன் பாட்டி. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றாள் பேத்தி நெகிழ்வாக.
“சரி இந்தப் பணம் உனக்கு தான். பாட்டி மேல உனக்கு உண்மையான அன்பு இருந்தா வாங்கிக்கோ” என்று கட்டளை இட்டு ராதையின் கையில் பணத்தைத் திணித்தவர், பேத்தியை வாழ்த்தினார்.
பின் வனிதா அவளுக்கு கால் செய்து வாழ்த்தினாள். காலையில் குளித்து விட்டு தன் பெரியப்பா, பெரியம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிய ராதை, கோதையைப் பார்க்க, அவளின் அறைக்கு வெளியில் காத்துக்கொண்டிருந்தாள்.
இங்கு வம்சிக்கு ஒரு கால் வந்தது. அதை எடுத்தவனிடம், “வம்சி சார், நீங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் நான் சொல்றேன் சார். PSM Exports ல VP GROUPS மூனு வருஷமா டீலிங்குல இருக்கு. முதல்லயே கோதை மேடம் அத்தாரிட்டி அன்ட் ஷேர்ஸ் எல்லாம் பிரகாஷ் சார் கிட்ட கொடுத்தாங்க. இப்போ அதனால தான் VP GROUPS க்கு இந்த நிலைமை வந்திருக்கு சார். அதான் இப்போ அதை வெச்சு பிரகாஷ் சார் கோதை வீட்டை கார்னர் பண்ணிட்டாரு” என்று கூறி முடித்தான் பிரகாஷின் லீகல் அட்வைசர் வசந்த்.
“ஒகே வசந்த், யூ வில் கெட் த பேமெண்ட் டுடே” என்று காலை கட் செய்த வம்சி பிரணவிற்கு கால் செய்து ஐந்து லட்சங்களை வசந்தின் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பச் சொல்லிவிட்டான்.
கோதையின் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த ராதைக்கு கிடைத்தது ஏமாற்றமே. கோதை தன் அறையைத் திறக்கவே இல்லை.
அவள் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மைதிலி, “ராதை இன்னிக்கு உன்னோட பிறந்த நாள். இருபத்தி ரெண்டு வருஷம் முன்னாடி உன்னோட பெரியப்பா கையில இருந்து உன்னை வாங்குன அந்த நொடி… அதே சந்தோஷம்… இப்போவும் எங்க கிட்ட இருக்கு.”
“நீ நல்லபடியா பிரகாஷை கல்யாணம் பண்ணிட்டு வாழணும். அப்போ தான் உன்னோட பெரியப்பா, பெரியம்மாவுக்கு நிம்மதி” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் மைதிலி.
“பெரியம்மா, ஆனா கோதை அக்கா…” என்று இழுத்தாள் ராதை.
“கோதையோட பிரச்சனை கோதை தான் ராதை. அவளுக்கு கொடுத்த செல்லம் தான் அவளைக் கெடுத்து இருக்கு. அவ தான் பிடிவாதக்காரி ஆச்சே, கொஞ்சம் நாள் ஆகும் அவ சரியாக… சரி நீ பிரகாஷ் தம்பி கொடுத்த பட்டு சேலையை உடுத்திட்டு கோயிலுக்கு போயிட்டு வா. பிரகாஷ் தம்பி கூட வேற வெளியே போகணும், இந்தா மல்லிப்பூ வைச்சிக்க ராதை” என்று அவளின் கையில் கொடுத்தார்.”
“உன்கூட நாங்க கோவிலுக்கு வரலைனு தப்பா நினைக்காதே மா, கோதை ஏற்கனவே பைத்தியம் போல் நடந்துக்குறா. உன்னோட இன்னிக்கு கோவிலுக்கு வந்தா உன்னை உன்னோட பிறந்த நாள் அதுவுமா கூட காயப்படுத்துவாள். அதனால நீ வேணும்னா வனிதாவை கூப்பிடேன்” என்றார் மைதிலி.
“ஐய்யோ பெரியம்மா, பக்கத்துல இருக்குற கோவில் தானே அதுக்கு எதுக்கு துணை எல்லாம்? நானே போயிட்டு வந்திடுவேன்” என்று மைதிலியைக் கொஞ்சிய ராதை கோவிலுக்குச் செல்லும் முன்னர் தலைக்கு குளித்து விட்டுச் செல்லலாம் என்று குளிக்கச் சென்றாள்.
***
