அத்தியாயம் 26
குளித்து முடித்து விட்டு பிரகாஷ் கொடுத்த அந்த சிவப்பு வண்ண காட்டன் சில்க்கை அணிந்து தலையை ஓபன் ஹேர் விட்டு தன் கண்களில் கண்மை இட்டவள் முதல் முறையாக தன்னைக் கண்ணாடியில் பார்த்தாள்.
தன்னை முதல் தடவையாக அழகாக உணர்ந்த ராதை தன் பெரியம்மா கொடுத்த மல்லிப்பூ வை தன் தலையில் சூடி, தன் பாட்டியிடம் சென்று தன்னைக் காட்டினாள்.
“பாட்டி நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன், என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றபடி காலில் விழுந்தாள். தன் பேத்தியின் அழகைக் கண்ட பாட்டி அவளுக்கு திருஷ்டி சுத்திப் போட்டு மனதார வாழ்த்தினார்.
“உன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி உனக்கு நல்ல புருஷன் அமையப் போறான்மா, அதனால கடவுள்கிட்ட போய் உன்னோட நன்றியை சொல்லிட்டு வாம்மா” என்று சந்தோஷத்துடன் பேத்தியைக் கோவிலுக்கு வழி அனுப்பினார் ராஜேஷ்வரி பாட்டி. மைதிலி மற்றும் விஜயகுமார் ராதையை சேலையில் பார்த்து மகிழ்ந்தார்கள்.
தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சந்தோஷமாக நடந்துச் சென்றாள் ராதை. ‘எவ்வளவு நாள் ஆச்சு இப்படி தனியா வெளியே போய் இனி நமக்கு பிரச்சனை இல்ல. நாம பயந்த பிரகாஷே நமக்கு இனி கணவனா, எனக்கு காவலனா வரப் போறாரு’ என்று மனதில் உற்சாகம் அடைந்தவள் கோவிலை அடைந்தப் பின்னர், பக்கத்தில் இருக்கும் பூஜை சாமான் கடையில் விளக்கை வாங்கிக்கொண்டு கோவிலின் உள்ளேச் சென்றாள்.
அந்த ஏரியாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் என்பதால் அங்கு கோவிலுக்குள் எப்போதும் ஒரு ஐயர் இருப்பார்.
“அடடே ராதை வாம்மா, உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. சௌக்கியமா இருக்கே தானே?” என்று கேட்டவர் அவளை முதலில் விளக்கு ஏற்றச் சொல்லிவிட்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிராசாதத்தைக் கையில் கொடுத்தார்.
விநாயகரை நன்றாக கும்பிட்டுவிட்டு அடுத்த தெருவில் இருக்கும் தன் இஷ்ட தெய்வமான முருகனின் கோவிலுக்கு நடந்துச் சென்றாள். மணி ஆறு நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அவளுக்கு பிரகாஷிடம் இருந்து கால் வந்தது.
“நான் கோவிலுக்கு வந்து இருக்கேன், நீங்க வந்துட்டீங்களா? சாரி! இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்று கோவிலுக்கு நடந்துக் கொண்டே பேசினாள்.
“ஏய்! ராதை பரவாயில்லை நான் வெயிட் பண்றேன், உன்னை சேலையில பார்க்க எனக்கு ரொம்ப ஆவலா இருக்கு” என்று ஆர்வமாகப் பேசினான் பிரகாஷ். அவனிடம் பேசிவிட்டு கால்லை கட் செய்தவள் முருகன் கோவிலுக்குள் சென்றாள்.
மாலை ஆறு மணி மேல் ஆனதால் அங்கு பெரிதாக கூட்டம் இல்லை. எப்போதும் இருக்கும் ஐயரும் அங்கு இல்லை.
அதனால், ‘சீக்கிரம் சாமி கும்பிட்டு போய்டலாம். பிரகாஷ் வேற அங்க காத்துட்டு இருக்கிறார்’ என்று தன் கண்களை மூடி முருகனிடம் வேண்டிக் கொண்டாள்.
முருகனிடம் பிரகாஷ் தனக்கு கணவனாக கிடைக்கப் போவதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தவள் தன் கண்களை திறந்த போது, அவள் எதிரில் கம்பீரம் கலந்த கர்வத்துடன் நின்றுக் கொண்டிருந்தான் வம்சி வேதந்த் கிருஷ்ணா.
சமீபத்தில் ஒரு தடவை மட்டுமே வம்சியைக் கண்டிருந்தாலும் ராதையின் கண்களிலும் மனதிலும் ஆழமாக பதிந்திருந்தது வம்சியின் முகம்.
‘இவன் எப்படி இங்க?’ என்று அவள் அதிர்ச்சியுடன் சிந்தித்துக் கொண்டுருக்கும் போதே பெண்ணவள் இமைக்கும் நொடிகளில், வேகமாக அவளின் கழுத்தை சுற்றி தாலி கட்டி அவளைத் தன் மனைவியாக்கினான் வம்சி!
அவனின் இச்செயலில் பெண்ணவளுக்கு அதிர்ச்சியில் மூளை உறைந்து மனமும் உடலும் சிலையாகியது.
அங்கு உண்டியலின் மீது படர்ந்து இருந்த குங்குமத்தை தன் கையில் எடுத்து, அவளின் நெற்றியின் மேல் அழுத்தமாக வைத்து விட்டான்.
வம்சி குங்குமத்தை வைத்துவிட்டு தன் விரலை எடுக்கும் பொழுது, ராதையின் கண்களில் இருந்து அருவிப் போல் கண்ணீர் வழிந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தவளுக்கு தனக்கு நேர்ந்ததை உணரவே அவளுக்கு ஓரிரு நிமிடங்கள் எடுத்தது.
உணர்ந்த பின் அங்கேயே கதறி கதறி அழ ஆரம்பித்த ராதையின் பரிதவிப்பை ரசித்துக்கொண்டிருந்த வம்சி, அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.
அவளை காரில் வலுக்கட்டாயமாக அமரவைத்து, சீட் பெல்ட்டை போட்டு, காரின் கதவை லாக் செய்து வேகமாக காரில் ஏறியவன் கோதையின் வீட்டிற்கு விரைந்தான்.
கார் வேகமாக சென்றுக் கொண்டிருந்த போதே ராதை, “ஏன் இப்படிப் பண்ணீங்க…? எனக்கு பிரகாஷோடு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்காங்க…!” என்றபடி தன் தலையில் அடித்து அழுதுக் கொண்டு இருந்தவளிடம்,
“ஏய் சத்தம் வந்துச்சு, உன்னை கொன்னுடுவேன்… வாயை மூடு” என்று கத்தினான். அவன் கத்தியதில் பயந்த ராதை தன் வாயைப் பொத்தி சத்தம் வராமல் அழுதுக் கொண்டிருந்தாள்.
ஐந்தே நிமிடத்தில் கோதையின் வீட்டை அடைந்த வம்சி, வேகமாக காரில் இருந்து இறங்கி, ராதை அமர்ந்து இருந்த பக்கம் வேகமாக கதவைத் திறந்து, அவளின் சீட் பெல்ட்டை எடுத்துவிட்டு, அவளின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே விரைந்தான்.
ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரகாஷிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் மைதிலி மற்றும் விஜயகுமார். ராதையின் கதறல் சத்தம் கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்து பார்க்கும் போதே, வம்சியின் இறுக்கமான பிடியில் இழுத்துக் கொண்டு வரப்பட்ட ராதையைக் கண்டனர் அனைவரும்.
‘வம்சி எப்படி இங்க?’ என்று வீட்டினர் யோசித்துக் கொண்டிருந்த போதே, “ஏய்… அவளோட கையை விடு, ராதை என்னோட மனைவி ஆகப் போறா” என்று வம்சியிடம் கத்திக்கொண்டே அவர்களை நெருங்கினான் பிரகாஷ்.
“அன்னிக்கு என்கிட்ட வாங்கின அடி உனக்கு பத்தலையா?” என்றவனோ தன் கை முஷ்டியை இறுக்க பட்டென்று ராதை புறம் திரும்பி, “என்னடி, வாயில என்ன மண்ணா வெச்சிருக்க? சொல்லுடி.. நான் உனக்கு யாருனு அவன்கிட்ட சொல்லு” என்றபடி பிரகாஷை ஆக்ரோஷமாகப் பார்த்தான் வம்சி.
வம்சி பேசியதில் அனைவரும் குழம்பினர் பிரகாஷ் உட்பட. வம்சியின் குரலைக் கேட்டு வெளியே வந்தார்கள் கோதை மற்றும் பாட்டி. ராதை எதுவும் பேசாமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.
“இப்போ நீ வாயைத் திறந்து சொல்லலைனா அதுக்கும் சேர்த்து என்கிட்ட அனுபவிப்ப… ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு.. சொல்லுடி” என்று ராதையின் முன்னே வந்து அதட்டினான் வம்சி.
“எனக்கு… இவர் தா… தாலி க… கட்டிட்டாரு” என்று திணறியபடி தன் முகத்தைத் தன்னுடைய இரு கைகளால் மூடி அந்த இடத்திலேயே உட்கார்ந்து கதறி அழுதாள் ராதை. இதைக் கேட்ட அனைவரும் திகைத்தனர். பிரகாஷோ அதிர்ச்சியில் பனியைப் போல உறைந்து விட்டான்.
கோதைக்குமே இது அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் வம்சி ராதையைத் திருமணம் செய்வான் என்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையே!
நேராக சென்று வம்சியின் சட்டையைப் பிடித்த விஜயகுமார், “ஏன்டா பாவி இப்படி பண்ண? ராதையோட வாழ்க்கையை அழிக்கறதுல உனக்கு என்ன அவ்வளவு வெறி?” என்று கத்தினார்.
வம்சியோ, “மைதிலி அத்தை… உங்களுக்காக இவரை எதுவும் பண்ணாம இருக்கேன். மரியாதையா அவரைக் கையை எடுக்க சொல்லுங்க இல்லன்னா.. என்கிட்ட அடி வாங்கிடுவார்” என ஆக்ரோஷத்தோடு மைதிலியிடம் கூற,வேகமாக தன் கணவரின் கையைப் பிடித்து பின்னாடி இழுத்து வந்தார் மைதிலி.
“அவனை எப்படி ராதை நீ கல்யாணம் பண்ணின?” என்று அழுதார் இராஜேஸ்வரி பாட்டி.
“பாட்டி, நான் இவனை..” என ஒருமையில் கோபத்துடன் தொடங்கியவளை வம்சி தீயாக முறைக்க பட்டென்று பயந்தவளோ,
“நான் இவரை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருப்பேனு நீங்க நினைக்குறீங்களா? நான் கோவில்ல சாமி கும்பிட்டு கண்ணைத் திறந்த போது நான் அதை உணர் துக்குள் இவர்… என் கழுத்துல இதைக் கட்டிட்டார்” என்றபடி தன் பாட்டியிடம் அந்த மஞ்சள் கயிறு மாங்கல்யத்தை எடுத்துக் காட்டி அழுதாள் பேத்தி.
“அவ விருப்பம் இல்லாம தாலி கட்டிருக்க… அதை எல்லாம் ஒரு கல்யாணமா யாராலும் ஏத்துக்க முடியாது…” என்ற பிரகாஷ் ராதையின் பக்கத்தில் வந்து, “இந்த தாலியைக் கழட்டி போடு ராதை… இதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீ எனக்கு மட்டுமே சொந்தம் ஆனவ” என்று பிரகாஷ் கூறி முடிக்கும் போது வம்சியின் முகம் தீயாய் கொதித்தது.
“ஆமாம் ராதைம்மா இதை கழட்டு” என்று பாட்டியும் கூற, மைதிலி மற்றும் விஜயகுமார் கூட இதனை ஆமோதித்தார்கள்.
தன் நடுங்கிய கைகளைத் தாலியிடம் எடுத்துச் சென்ற ராதை வம்சி கட்டிய தாலியின் மேல் கைவைத்து அதை எடுக்க முற்பட்ட போது, ராதையின் கன்னத்தில் அறைந்த வம்சி, “தாலி மேல நீ கை வைச்சா, இங்க எல்லார் முன்னாடியும் நீ அசிங்கப்படுற அளவுக்கு செஞ்சுடுவேன்” என்றவனின் வார்த்தைக்குப் பயந்தவள் செய்வதறியாது நின்றாள்.
***
