அத்தியாயம் 4

விஜயா நினைத்தபடி தன் அண்ணன் மணிகண்டனிடம், “எனக்கு ஏதோ தனிமையா இருக்குற மாதிரி இருக்கு ண்ணா… பேசாம நீயும் அண்ணியும் இங்க வந்திருங்க, எனக்கு பேச்சு துணைக்கு அண்ணி இருப்பாங்கல” என்றவரோ தனிமையில் வாடுவது போல் நடித்தார். 

 

கோயம்புத்தூரில் ஒரு பிரைவேட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்த மணிகண்டன் என்றும் பேராசை படமாட்டார். தன் தங்கையிடம் காசு, பணம் எதிர்பார்க்க மாட்டார். எனவே, முதலில் முடிவாக மறுத்தவர் தங்கை தொடர்ந்து அழுததால் மட்டுமே வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார். பின் விஜயாவுடன் அவர் அண்ணன் குடும்பமும் குடியேறினார்கள். 

 

ராதையும் வனிதாவும் விடுமுறைக்காக கோவை வந்தார்கள். ரயில் நிலையத்துக்குச் சென்று ராதையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் விஜயகுமார். 

 

“அம்மு எப்படி இருக்க? ஏன் இப்படி மெலிஞ்சு போய்ட்ட?” என்று கவலைப்பட்டார் மைதிலி. 

 

“அப்படி எல்லாம் இல்ல பெரியம்மா, நீங்க நல்லா இருக்கீங்களா?” என்று அவள் கேட்கும் போதே அவளின் கண்களைப் பின்னே இருந்து மூடினாள் கோதை. 

 

“அக்கா நீங்க தான்னு எனக்குத் தெரியும்” என புன்னகைத்தவளிடம், “கேடி எவ்வளவு நாள் உனக்கு லீவ்?” என தங்கையின் தோளில் கையைப் போட்டாள் கோதை. 

 

“இன்னும் ஒரு மாசம் கா, ஆனா ப்ராஜெக்ட் வேலையும் நிறைய இருக்கு. அதனால அப்பப்போ பிஸி. மத்தப்படி ஃப்ரீ தான்” என்றாள். 

 

“ராதை வந்துட்டியா?” என்றபடி ஆர்வம் கலந்த உற்சாகத்துடன் வந்த பாட்டி, “நீ இல்லாம ஏங்கி போயிட்டேன். எப்படி இளைச்சு போயிருக்க பாரு நீ… இங்க இருந்து கிளம்பும் போது சாப்பிட்டு நல்லா உடம்பை தேத்திட்டு தான் கிளம்பணும்” என பாச கட்டளையிட்டார்.

 

“இவ்வளவு நாளா நானும் தான் இங்க வீட்டுலயே இருந்தேன், ஆனா ராதைக்கு மட்டும் தனி கவனிப்பா? என்னை மட்டும் பாட்டி உடம்பை குறைக்க சொல்றாங்க. உன்னை நல்லா சாப்பிட சொல்றாங்க” என்று கோவித்துக்கொண்டு அறையினுள் சென்றாள் கோதை. 

 

“இவ கொஞ்ச நாளாவே இப்படி தான் ஓவரா பேசுறா ராதை, முன்னாடி மாதிரி இல்ல இவ. உடம்பு முழுக்க திமிரு” என்ற மைதிலியை, “பெரியம்மா அக்கா தானே விடுங்க” என்றவளோ அதன் பின்னர் சந்தோஷமாக பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தாள். ராதை சிறிய வயதில் துறுதுறுவென பேசிக்கொண்டிருந்த ரகம். ஆனால் வயது ஏற ஏற, படிப்பு விஷயங்கள் கூட அமைதி ஆனாள். 

 

அவள் விடுமுறையில் இருக்கும்போது வனிதா அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வருவாள். அப்படி வரும் போது ராதை பாட்டியுடன் வெளியே போயிருந்தாள். அவளை வரவேற்ற மைதிலி அவளுக்குப் பருக ஆப்பிள் பழச்சாற்றை கொடுத்தார். அப்போது கோதையும் அவளுடைய கல்லூரி படிப்பு முடிந்து வீட்டில் தான் இருந்தாள். 

 

“ஹாய் வனிதா எப்போ வந்த?” என அவளிடம் பேச்சைத் தொடர்ந்தாள் கோதை. அப்போது அவளின் மொபைல் வால்பேப்பரில், பிரகாஷ் சிவமாறன் ஒரு கூலிங்கிளாஸை போட்டு அழகாக சிரித்தபடி இருந்த புகைப்படத்தை எதேர்ச்சையாக பார்த்தாள். 

 

அதைக் கண்ட கோதையோ அதிர்ச்சியாக, “ஏய் வனிதா, இது… உன் ஃபோன்ல இருக்குறது… பிரகாஷ் சிவமாறன் தானே?” என்று சந்தேகமாகக் கேட்டாள். 

 

“ஆமா, பிரகாஷ் அத்தான் என்னோட சொந்த அத்தை பையன். நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்” என பெருமையாகச் சொன்னாள் வனிதா. 

 

இதைக் கேட்ட கோதையோ அதிர்ந்தாள். இது நடக்கவே கூடாது, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள். 

 

***

 

சரவணம்பட்டியில் இருக்கும் அந்த மிகப்பெரிய பிஎஸ்எம் குரூப்ஸ் கட்டிடத்தின் ஆறாவது மாடியில், பிரகாஷ் சிவமாறனோடு ஒரு டீலீங்கிற்காக வந்து இருந்தாள் வினயா. ஏறத்தாழ சிவமாறனின் வயதை ஒட்டி இருந்தவள் தன் தந்தையின் டெக்ஸ்டைல் பிசினஸை கையில் எடுத்திருந்தாள். சிவமாறனின் அழகில் மோகம் கொண்டவள், அவனை அடைவதற்கே அவனோடு டீலிங் வைக்க ஒரு வருடம் அப்பாயின்மென்ட் கிடைக்காமல் ஒருவாறு போராடி இப்போது வாங்கி இன்று வந்து இருந்தாள். 

 

பிரகாஷ், “சோ வினயா, யு கேன் ஸ்டார்ட் யுவர் பிரசென்டேஷன் நௌ” என்றவனோ தன் லேப்டாப்பில் வேறொரு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். இதை எதிர்பார்க்காத வினயா மலங்க மலங்க விழித்தாள். 

 

சிறிது நேரம் ஆகியும் அவள், “அது வந்து…” என்று இழுத்துக் கொண்டிருக்க, “லுக் வினயா, ஐ டோன்ட் வான்ட் டு பி ஹார்ஷ் வித் லேடிஸ். நீங்க என்ன தயார் பண்ணிருக்கீங்களோ அதை தமிழ்ல சொன்னா கூட பரவாயில்ல” என்றான் அவள் கண்களைப் பார்த்து. 

 

இதுதான் நல்ல சமயம் என்று, “நான் உங்களை ரொம்ப காதலிக்குறேன் பிரகாஷ். உங்களை மீட் பண்ணணும்னு தான் அப்பாயின்மென்ட் வாங்கினேன். உண்மையா நான் எங்க கம்பெனி பத்தி எதுவும் ரெடி பண்ணல” என்றாள் சற்றே பயத்துடன். 

 

“இங்க பாருங்க வினயா, நான் பேஸிக்கா பொண்ணுங்க கிட்ட ரூடா நடந்துக்க மாட்டேன். எனக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் கூட இருக்காங்க, உங்க காதல் எனக்குப் புரியுது. ஆனா எனக்கு இதுலலாம் விருப்பம் கிடையாது. சோ நீங்க கிளம்பலாம்” என்று அவளை வெளியே அனுப்பினான். ஏமாற்றமாக வெளியேச் சென்றாள் வினயா. 

 

***

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!