அத்தியாயம் 5

ராதை வீட்டிற்கு வரும்போது கோதையும் வனிதாவும் கேரம்போர்ட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 

 

‘என்ன கோதை அக்கா, இன்னிக்கு அதிசயமா வனிதா கூட விளையாடிட்டு இருக்கா?’ என்கிற யோசனையோடு வனிதாவிற்கு, “ஹாய் வனி…” என்று சொன்னாள் ராதை.

 

வனிதாவோ, “ஹாய் டி.. ராதை நம்ம ப்ராஜெக்ட் வொர்க்குக்கு நீ என்னை இங்க வீட்டுக்கு வர சொன்னல, பேசாம நீ எங்க வீட்டுக்கு வாயேன்டி” என்றாள். 

 

“இல்லடி, நீ வேற உன் அத்தை வீட்டுல இப்போ இருக்கேன்னு சொன்னல, வேண்டாம் நீ இங்கயே வா அதான் எனக்கு ஈசியா இருக்கும்” என்றாள் ராதை.

 

அப்போது, “ராதை நான் ஒரு கேள்வி கேட்பேன், நீ அதுக்கு சரியா பதில் சொல்லணும்” என்றாள் கோதை. 

 

தன் பாட்டிக்கு கவனமாக மருந்துகளை எடுத்துக் கொண்டே, “கேளுங்க கா” என்றாள். 

 

“நான் அழகா இருக்கேனா? இல்ல வனிதா அழகா இருக்காளா?” எனக் கேட்டாள். 

 

“நீங்க ஒரு விதமா அழகா இருக்கீங்க, அவ ஒரு விதமா அழகா இருக்கா கா” என புன்னகை முகத்துடன் தன் பாட்டிக்கு மருந்து கொடுக்கச் சென்றாள். 

 

‘இவகிட்ட நம்ம நேரடியாகவே பேசுறது தான் நல்லது’ என்று யோசித்த கோதையோ வனிதாவிடம், “நான் பிரகாஷ் சிவமாறனை லவ் பண்றேன்!” என்றாள் கர்வமாக. 

 

“விளையாடாத கோதை” என்ற வனிதாவின் இதயமோ அதிர்ச்சியில் வேகமாக படபடத்தது. 

 

“நம்ம இனிமே தான் விளையாட போறோம்னு வெச்சிக்கோயேன் வனிதா, உன்னை தான் பிரகாஷ் கல்யாணம் பண்ண  போறதா நினைச்சுட்டு இருக்க… ஆனா அவர் என்னை தான் கல்யாணம் பண்ணுவாரு.. வேணும்னா பாரு” என்றாள் கோதை உறுதியாக. 

 

இம்முறை கடுப்பான வனிதா, “இது என்ன முட்டாள்தனம்? அவர் என்னை தான் கல்யாணம் பண்ணுவார்” என்றாள் வனிதா அதீத நம்பிக்கையுடன்.

 

“ம்ம் உன்னோட நம்பிக்கை எனக்குப் பிடிச்சிருக்கு. சோ நம்ம ஒரு போட்டி வெச்சிக்கலாம். நானும் பிரகாஷ் கிட்ட என் காதலை சொல்றேன், நீயும் சொல்லு. அவர் யாரை தேர்ந்தெடுத்தாலும் இன்னொருத்தர் விலகிப் போய்டணும்.. இதான் டீல்” என்றாள். 

 

முதலில் மறுக்கலாம் என்று நினைத்த வனிதா, இப்போது மறுத்தால் தன்னுடைய தன்மானம் குறைந்து விடும் என்பதால் இந்தப் பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டாள். 

 

“தட்ஸ் குட் வனிதா, அதனால இனி வாரா வாரம் உன்னை பார்க்குற மாதிரி பிரகாஷை பார்க்க வருவேன். இனிமே நீ எப்போலாம் கோயம்புத்தூர் வரியோ அப்போலாம் நானும் வாரத்துக்கு  ஒருதடவை வந்து பார்ப்பேன்…” என கோதை பேசி முடிக்க வனிதாவின் முகம் இறுக்கமாக இருந்தது. 

 

“என்ன வனிதா மூஞ்சே காணும்? உனக்கு பயமா எங்க பிரகாஷ் சிவமாறன் என் அழகுல மயங்கி என்கிட்ட காதல்ல விழுந்திருவாருனு?” என்று ஏளனமாகக் கேட்டாள் கோதை. 

 

“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீ தோத்துப் போகும்போது உன் மூஞ்சு எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்” என நக்கலாக சொன்ன வனிதாவிடம், “அதையும் பார்ப்போம் சவால்!” என்றாள் கோதை திடமாக. அதற்கு மேல் வனிதாவால் அங்கு இருக்க முடியவில்லை.

 

ராதையோ இவர்கள் பேசி முடிக்கும் போது தான் உள்ளே வந்தாள். “என்னாச்சு வனிதா, உடனே கிளம்புற?” என புரியாமல் கேட்ட ராதையிடம், “உன் அக்கா கிட்ட கேளு, ஆனா நான் தான் ஜெயிப்பேன் ராதை” என்று கோதையிடம் ஒரு வெற்றிப் பார்வையை கொடுத்து விட்டு கிளம்பி விட்டாள். 

 

“என்னாச்சு கா, நீங்க ரெண்டு பேரும் என்னமோ பண்றீங்க, ஆனா அது எனக்குத் தேவையான விஷயம் இல்லைனு நினைக்கிறேன். சரி க்கா உன் ஆள் போட்டோ காட்டு நான் பார்க்கணும்” என்றவளிடம், “நாங்க ரெண்டு பேரும் ஜோடியா சேர்ந்து வந்து நிக்கிறோம்டி, அப்போ நீயே நேர்ல பாரு” என்றாள். 

 

அடுத்த வாரம் கோதை, பிரகாஷ் சிவமாறன் வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டின் உள்ளே நுழைய அவளை நுழைய விடாமல் தடுத்தான் வெளியே நின்ற செக்யூரிட்டி. அவன் கோதையை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கடுப்பான கோதை, வனிதாவிற்கு கால் செய்து உள்ளே விடுமாறு சொன்னாள். 

 

விஜயாவிடம் தன் தோழியின் அக்கா வந்து இருக்கிறாள், அவளை உள்ளே விடுமாறு கேட்டாள் வனிதா. “நீ எதுக்கு வனிதா அவங்களை எல்லாம் வீட்டிற்கு கூப்பிடுற? வயசு பசங்க இங்க இருக்காங்க” என்றவரிடம், “என்ன த்தை, பிரகாஷ் அத்தான் இந்த பங்களாவில் எங்க இருக்கார்னு கூட தெரியல, அப்புறம் டாக்டர் ஒரு மாசம் கேம்ப் போயிருக்காரு. ஒன்னும் ஆகாது அத்தை, நான் பாத்துக்குறேன்” என்றவள் தன் அத்தையிடம் பந்தயத்தைப் பற்றி மறைத்தாள். 

 

எங்கு விஜயாவுக்கு தெரிந்தால் அவர் கோபப்படுவாரோ என்ற பயத்திலேயே மறைத்தாள். விஜயாவின் உத்தரவின் படி கோதையை உள்ளே விட்டார். 

 

“ஹாய் வனிதா” என்று உள்ளே வரும் கோதையை விஜயா அவளை ஆராய்வது போல் பார்த்தார். 

 

“ஹாய் ஆன்ட்டி!” என்று போலியாக வழிந்தாள் கோதை.

 

“நீ யாரும்மா? உன்னைப் பத்தி வனிதா இதுவரைக்கும் சொன்னதில்லையே?” என்று கோர்வையாக கேட்டார். 

 

“அது வந்து… நான் வனிதாவோட சென்னையில படிக்கிற ஃப்ரெண்ட் ராதையோட அக்கா கோதை” என்றாள். 

 

“ஓ அப்போ நீ வனிதா ஃப்ரெண்ட்டோட அக்கா அப்படிதானே, உனக்கு இங்க என்னமா வேலை? இப்போ லீவுல தான இருக்கா, உனக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேள்வி கேட்டார். 

 

“அம்மா… வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுவீங்களாமா? டூ மச்… நீங்க உள்ள போங்க. வனிதா, அவளை உள்ள கூட்டிட்டுப் போ” என்று தன் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு வந்து கூறினான் பிரகாஷ் சிவமாறன்.

 

வனிதாவும் கோதையை அழைத்துக் கொண்டு உள்ளேச் சென்றாள். “ஏய் என்ன அவங்க இப்படி எல்லாம் பேசுறாங்க? நான் பயந்தே போயிட்டேன்” என்ற கோதையிடம்,

 

“உன் நோக்கம் எல்லாமே என் அத்தை கிட்ட சொல்லிட்டேன். அதனால தான் உன்கிட்ட அப்படி பேசினாங்க… ஹே ஹே பந்தயத்துல நான் என் அத்தை கிட்ட சொல்லக் கூடாதுனு நீ சொல்லவே இல்லையே” என பொய் உரைத்தவளோ சிரித்தாள். 

 

தன் நாவை அடக்கிக் கொள்ளாத வனிதா மேலும், “என் அத்தான் ஜாதகப்படி, வெளிய இருக்குற பொண்ணை கல்யாணம் செஞ்சா அவர் அந்தப் பொண்ணு கிட்டயே போய்டுவாராம், அதனால என் அத்தை கண்டிப்பா என்னைத் தான் அத்தானுக்கு கல்யாணம் பண்ணி வெப்பாங்க. உன் கிட்ட தோத்து போற அளவுக்கு நான் மக்கு இல்ல” என்றாள் வனிதா. 

 

கோதையோ மனதில், ‘இந்த மேட்டரை இனிமே வேற மாதிரி தான் டீல் பண்ணணும்’ என நினைத்த கோதை, “இனி உன் பேரை வெச்சிட்டு நான் இந்த வீட்டுக்குள்ள நுழையமாட்டேன், பிரகாஷ் சிவமாறனை எப்படி நெருங்கணும்னு எனக்குத் தெரியும்” என்று வெளியே சென்றாள் கோதை. 

 

அவள் வெளியேச் செல்லும்போது, அங்கு அவர்கள் வீட்டு கார்டனில் நடந்துக் கொண்டே யாரிடமோ பேசிக் கொண்டிருந்த பிரகாஷ் கோதையைக் கண்டதும், “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் மினிட்” என்று அவள் முன் வந்தான். 

 

“ஐ அம் சாரி… நீ கோதை தானே, அம்மா அப்படி பேசியிருக்க கூடாது. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றான். 

 

இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியவள், “உங்க அம்மா பாவம் பிரகாஷ், அவங்களுக்கு பயம். எங்க நீங்க என்னை லவ் பண்ணிடுவீங்களோனு… உங்க ஜோசியர் சொல்லிருக்காராமே, நீங்க வெளிய ஏதாவது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினா, உங்க அம்மாகிட்ட உங்களுக்கு இருக்குற பாசம் போய்டுமாம். அந்தப் பொண்ணு கிட்டயே போய்டுவீங்களாம். அதான் வனிதாவ உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெக்குறாங்களாம்” என அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாள். 

 

இதைக் கேட்ட பிரகாஷின் முகம் இறுகியது.

 

“பிரகாஷ் நான் கிளம்பறேன், அப்பா உங்களை ரொம்ப கேட்டதா சொல்லச் சொன்னாங்க. ஒரு நாள் வீட்டுக்கு டின்னருக்கு வாங்க…” என்று இழுத்தவள், “உங்க மொபைல் நம்பர் தாங்க, நான் உங்ககிட்ட ஒரு ஃப்ரெண்ட்டா பேசணும்னா மெசேஜ் இல்லனா, கால் பண்ணுவேன்” என்றாள். 

 

“ஒகே கோதை, நானும் மிஸ்டர் விஜயகுமாரை கேட்டதா சொல்லுங்க… ஒரு நாள் கண்டிப்பா வரேன்” என்று அவனுடைய மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு உள்ளேச் சென்றான். 

 

கோதை பேசியதில் தன் அன்னையின் நினைப்பை உணர்ந்தவன், “அம்மா… உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நான் யாரையாவது வெளியில பொண்ணை கல்யாணம் பண்ணினா உங்க மேல பாசம் போய்டும், அதனால வனிதாவை எனக்கு கல்யாணம் பண்ண நீங்க முடிவு பண்ணிட்டா போதுமா?” 

 

“எனக்குப் பிடிச்ச பெண்ணைத் தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அது கண்டிப்பா வனிதா இல்ல. உங்க எண்ணத்தை இத்தோட கை விட்டுருங்க. இதெல்லாம் என்கிட்ட அந்தப் பொண்ணு கோதை வந்து சொல்றா, வெளியாட்கள் சொல்லித் தெரிஞ்சிக்க அவ்வளவு கடுப்பா இருக்கு. எனக்கு வர ஆத்திரத்துக்கு… நான் கோதை கூட இனி பழகுவேன் மா” என்று கடுப்பில் தன் அறைக்குச் சென்றான். 

 

தன் மகனுக்கு எப்படி இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வந்தது என்று யோசித்த விஜயா வனிதாவின் அறைக்குச் சென்றார். 

 

“நீ அந்தப் பொண்ணு கோதை கிட்ட ஏதாவது உளறி வெச்சியா?” என்று கேட்டார்.

 

“ஆமா அத்தை, அந்த கோதை கிட்ட சொல்லிட்டேன். பிரகாஷ் அத்தான் ஜாதகத்துல இப்படி இருக்கு, அதனால அத்தை என்னை தான் கல்யாணம் பண்ணி வெப்பாங்கனு. ஆனாலும் அவ அடங்காம கீழே அத்தானோடு பேசிட்டு இருந்தா” என்றாள். 

 

“என்ஜினீயரிங் படிக்கிறியே வனிதா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவகிட்ட அதைச் சொல்லி வெச்சிருக்க, அவள் தெளிவா பிரகாஷ் கிட்ட சொல்லி ஸ்கோர் பண்ணிட்டா. அவன் என்கிட்ட கத்திட்டுப் போறான். இந்தப் பொண்ணு கண்டிப்பா வில்லங்கம் பிடிச்சவ தான். இவகிட்ட நீ ஜாக்கிரதையா இரு வனிதா” என்றவரோ பிரகாஷிடம், வனிதாவை திருமணம் செய்ய மறுத்ததை மட்டும் கூறாமல் சென்று விட்டார் விஜயா. 

 

***

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!