“ஐ அம் சாரி அபிஷேக், உங்களைப் புரிஞ்சுக்காம நான் நிறைய தடவை உங்களை அவமானப் படுத்திருக்கேன். எனக்கு இந்த உலகத்துல என் அம்மாவைத் தவிர வேறு யாருமே கிடையாது. முறையில்லாத அப்பா, தம்பி யாருமே எனக்கு பிடிக்கல. தனியா அனாதையாவே வாழ்றதுக்கு சாகலாம்னு நினைக்கும் போது தான் வம்சி என்னை காப்பாத்துனாரு…”
“எனக்கு மறுவாழ்க்கை கொடுத்தார்னு கூட நான் சொல்லுவேன். ஆனா நான் அவர் என் மேல வைச்ச மரியாதையை புரிஞ்சுக்காம எனக்குள்ள அவர் மேல் காதல் ஆசையை வளர்த்தேன். ஆனா உங்க மேல நான் வைச்சு இருப்பது தான் காதல்ன்றதை நான் இப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று அழுதுக் கொண்டே கேட்டாள் அனிதா.
தன்னிலைக்கு வந்த அபிஷேக்கோ, “இப்போவே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவளை இறுக்கமாக அணைத்தான். இதை பார்த்ததும் அந்த இடத்தில் இனி நிற்க அந்தப் பெண்ணிற்கு தைரியம் இல்லாமல் நகர்ந்து விட்டாள்.
“ஐயையோ அபிஷேக், நான் ராதையை மறந்தே போயிட்டேன். வம்சிக்கு நான் அவளை இன்னும் பார்க்கலனு தெரிஞ்சாலே அவ்வளவு தான்… கடுப்பாகிடுவாரு” என்று அவள் கூறுவதை ஒன்றும் புரியாமல் கேட்ட அபிஷேக்குக்கு வம்சி ராதையைப் பற்றி அனைத்தையும் கூறினாள் அனிதா.
தன் அறையில் தன்னை நிதானப்படுத்த வம்சிக்கு ஐந்து நிமிடங்கள் தேவைப்பட்டது. பின் மழையில் நனைந்த தன் உடைகளை மாற்றி குளித்துவிட்டு வந்தவனின் மனது ஏதோ படபடப்பாகவே இருந்தது. மனதை ஒரு நிலைப் படுத்த முயற்சி செய்தாலும் என்னவோ ஒன்று வம்சியை அமைதி கொள்ளவிடவில்லை.
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன் தன் அறையில் இருந்து வெளியே வந்து ராதையின் அறைக்கு வந்தான். கதவு மூடி இருப்பதைக் கண்டு, “அனிதா…” என்று தட்டினான். கதவு திறக்கப்படவில்லை என்றவுடன் அனிதாவிற்கு கால் செய்தாவது ராதையின் நிலையை அறிய வேண்டுமென நினைத்தான்.
அனிதாவிற்கு கால் போய்க்கொண்டிருந்த சமயத்தில் தான் அனிதா மற்றும் அபிஷேக் அவசர அவசரமாக அவளின் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட வம்சிக்கு அனிதாவின் மேல் கொலைவெறியே வந்தது.
“வம்சி சாரி, அது வந்து வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ராதையை பாத்தீங்களா?” என்று கேட்கும் போதே வம்சி அனிதாவின் கன்னத்தில் அறைந்தான்.
“உன்கிட்ட நானா இது வரைக்கும் ஒரு உதவி கேட்டது இல்ல. நான் உன்கிட்ட சொல்லி அரை மணி நேரத்துக்கு மேல ஆகுது டாம் இட். ஷி இஸ் நாட் ஓப்பனிங் த டோர் கால் ராதைஸ் நம்பர்” என்று அவன் கத்திய விதம் அபிஷேக்கிற்கே கதி கலங்கியது.
அனிதா கால்லில் ராதையை அழைக்கும் போது வம்சி அறைக்கதவை தட்டிக்கொண்டே இருந்தான். அனிதாவின் காலிற்கு எந்த பதிலும் இல்லை என்றவுடன் வம்சி ரிசெப்ஷனிற்கு கால் செய்து அவர்களிடம் இருக்கும் இன்னொரு அக்ஸ்ஸெஸிங் கார்ட்டு கீயை எடுத்துக்கொண்டு வரச் சொன்னான்.
“வம்சி பயப்படாத, ராதை சேஃபா தான் இருப்பா. சாரி என் தப்பு தான்” என்று அனிதா சொல்லும் போதே தன் தலையின் பின்னால் கடுப்பில் கை வைத்துக்கொண்டு இருந்தவன் சுவற்றில் கையை மோதி, “ச்ச நான் அவளை தனியா விட்டுட்டு போயிருக்கக் கூடாது” என்று தன்னையே திட்டினான் வம்சி.
வம்சியின் கட்டளைப்படி அந்த கீ அவனை வந்தடைந்த உடனே மனதில் பதற்றம் மற்றும் பயத்தோடு கதவைத் திறந்தவன் கண்டது, உடையை மாற்றாமல் அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே மயங்கி இருந்த ராதையைத் தான்.
அவளை தன் மடியில் வைத்து ஏந்திய வம்சி, “ராதை எழுந்திரு…” என்று அவள் கன்னங்களைத் தட்டினான். அவளிடம் அசைவே இல்லை என்றபின் உடனே முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். அப்படியும் ராதையிடம் எந்த அசைவும் இல்லை. வம்சியின் இதயம் ஒரு நிமிடம் நின்றே விட்டது. அவனது மூளையும் வேலை செய்ய மறுத்தது.
அவனின் உணர்வுகளை உணர்ந்த அனிதா ராதையின் நாடியைப் பிடித்து, “வம்சி பயப்புடாதீங்க ராதைக்கு பல்ஸ் இருக்கு” என்று சொன்னவுடனே ராதையை ஏந்திய வம்சி அங்கு தன்னைச் சுற்றி இருக்கும் யாரையும் பொருட்படுத்தாமல் அவளை தன் நெஞ்சோடு அணைத்து, “உனக்கு எதுவும் ஆகாது ராதை… இந்த வம்சி இருக்குற வரை என்னோட ராதைக்கு எதுவுமே ஆகாது” என்று மடமடவென லிப்ட்டில் கீழே சென்று அவளை கார் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு தன் காரை வேகமாக எடுத்தான். அனிதா மற்றும் அபிஷேக் பின்னாடியே ஒரு டாக்ஸியைப் பிடித்து அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
வண்டியை ஓட்டிய வம்சியின் கண்களில் வந்த கண்ணீரின் வலி அவனுக்கு மட்டுமே புரிந்த ஒன்று. தன் காரை வேகமாக மருத்துவமனை நோக்கி ஓட்டியவன் ராதையைத் திரும்பிப் பார்த்தான் அவள் விழிக்குறாளா என்று.
“உனக்கு எதுவும் ஆகாது டி, என் உயிர் உள்ள வரை உன்னை நான் காப்பேன்” என்று வம்சி கூறிவிட்டு வடித்த கண்ணீர் தன் நினைவை இழந்த ராதை அறியவில்லை.
வம்சி மருத்துவமனையை அடையும் போது மணி இரவு ஒன்று. கோவாவில் உள்ள அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வந்தவன், அவனது தொழில் பலத்தை வைத்து அந்த மருத்துவமனையில் பிரச்சனை இன்றி அவளை அனுமதித்து சிகிச்சையைத் தொடரச் செய்தான்.
ராதையை முதலில் எமர்ஜென்சி வார்ட்டிற்கு அழைத்துச் சென்றனர். வெளியே நின்றிருந்த வம்சியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வந்துக் கொண்டிருந்தது. அபிஷேக் மற்றும் அனிதா அங்கு வந்த பின்னரும் அவர்களால் வம்சியை நெருங்க முடியவில்லை.
ராதையைப் பரிசோதித்த மருத்துவர், “பேஷன்ட் ராதை யாரு உங்களுக்கு?” என்று தயங்கிக் கேட்டார்.
“ராதை என்னோட மனைவி டாக்டர்… அவள் எப்படி இருக்கா? கண் முழிச்சாட்டாளா?” என்று வரிசையாகக் கேள்வி கேட்டான்.
“வம்சி சார் பதறாதீங்க, உங்க வைஃப் மழையில நனைஞ்சு குளிர் காய்ச்சல் வந்து அப்படியே மயங்கிட்டாங்க. அன்ட் மோர் ஓவர் அவங்க ரொம்ப நேரமாக சாப்பிடல. ரொம்ப வீக்கா இருக்காங்க. அதனால குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. ஷி வில் பி நார்மல் அஃப்டர் டூ ஹவர்ஸ். பட் நீங்க யாரும் அவங்களை இப்போ தொந்தரவு செய்ய வேண்டாம். எல்லாரும் காலையில அவங்களைப் பார்த்தால் போதும்” என்று டாக்டர் கூறிய பின்பு தான் வம்சிக்கு உயிரே வந்தது.
“நான் தான் சொன்னேன்ல வம்சி, ராதைக்கு ஒன்னும் ஆகாதுனு இப்போவாவது நிம்மதியாய் இருங்க. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, நான் பாத்துக்குறேன்” என்ற அனிதாவை, “நீ பார்த்த லட்சணத்தைத் தான் நான் பார்த்தேனே, அபிஷேக் அனிதாவை கூட்டிட்டு நீ கிளம்பு. நான் ராதையை விட்டு எங்கயும் வரமாட்டேன். காலையில ரெண்டு பேரும் வாங்க” என்று கட்டளையிட்டவனிடம் இவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
இரவு முழுதும் தூங்காமல் இருந்த வம்சிக்கு ராதையை எப்போது பார்க்கலாம் என்றே இருந்தது.
காலை விடிந்த பின் ராதைக்கு என்று ஒதுக்கப்பட்ட செவிலியர், “சார் பேஷன்ட் முழிச்சிட்டாங்க, நீங்க இப்போ பார்க்கலாம்” என்று கூறும் போது உள்ளே வேகமாகச் சென்றான் வம்சி.
வம்சி அங்கு அமர்ந்திருந்த ராதையைப் பார்த்து, “ஏன் டி பக்கத்துல இருந்தாலும் சாகடிக்குற, பக்கத்துல இல்லைனாலும் சாகடிக்குற?” என்று அவன் அவளை நெருங்கி கத்திக் கொண்டு இருக்கும் போதே அனிதா மற்றும் அபிஷேக் வந்தடைந்தார்கள்.
“வம்சி நீங்க நைட் முழுசா துங்காம அவளுக்காக முழிச்சிட்டு…” என்று அனிதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, “போதும் நிறுத்து” என்று அனிதாவை அடக்கினான் வம்சி.
“இனி இவ என் கண்ணுலயே முழிக்கக் கூடாது. இன்னிக்கே இவளை இவளோட வீட்டுல நீ விட்டு வந்துட்டு தான் மறு வேலை பாக்கணும்” என்று அனிதாவிடம் கட்டளையிட்டு ராதையை முறைத்தான்.
“நீ என்ன ப்ரூவ் பண்ண நினைச்சு இப்படி உன் உடம்பை கெடுத்துக்குற…? அதான் நான் வேண்டாம்னு போய்ட்ட ரைட். அப்போ எதுக்குடி இப்படி என்ன சாகடிக்குற?” என்று சுவரில் தன் கைகளைக் குத்தியவனைப் பார்த்த ராதை, எதுவும் பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுகையை எரிச்சலாய்ப் பார்த்தவன், “ஒன்னு அழு இல்லனா பயப்படு. இதைத் தவிர உனக்கு வேற என்ன தான் தெரியும்?” என்று கோபமாக பேசியவன் அனிதாவிடம் ராதையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மருத்துவ செலவை முடித்துவிட்டு பெங்களூர் கிளம்பிவிட்டான்.
***
