“மைதிலி, நீ கோதையை கொஞ்சம் கண்டிச்சு வெக்கணும். அவ எப்போ பார்த்தாலும் காரை எடுத்துட்டு சுத்திட்டு இருக்கா, இதெல்லாம் பார்க்க நல்லாவா இருக்கு?”
“அவளை மாதிரி தானே ராதையும்.இவ எவ்வளவு பொறுப்பா படிச்சிட்டு இருக்கா. கோதைக்கு படிப்பு தான் வரல, ஆனா ஒழுக்கம் அது ரொம்ப முக்கியம்! இன்னிக்கு உன் புருஷன் வந்ததும் அவளை கண்டிக்க சொல்லு” என்றார் இராஜேஸ்வரி.
வீட்டிற்கு வந்த கோதையிடம், “எங்க போய் சுத்திட்டு வர கோதை? உனக்கு வர வர திமிரு அதிகம் ஆயிடுச்சு, இப்போ எங்க போன?” என்று சற்று கோபமாக விசாரித்தார் மைதிலி.
“நான் பிரகாஷ் சிவமாறன் வீட்டிற்குப் போனேன், நான் அவரை காதலிக்கிறேன் மா! அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று கோதை திமிராக கூறினாள்.
“படிச்சு உருப்பட முடியல, இருபது வயசுல காதல்னு என்கிட்டயே தைரியமா சொல்றியா?” என்று கோதையை அடிக்க கையை ஓங்கினார் மைதிலி. இதைப் பார்த்த ராதை அதிர்ந்தாள்.
“மைதிலி… வளர்ந்த பொண்ணை அடிக்காத” என்றபடி மனைவியை தடுத்தார் விஜயகுமார்.
“நீங்க கொடுக்குற செல்லத்தால தான் இவ இப்படி திமிரா பேசுறா, என்கிட்டயே காதலிக்குறேன்னு சொல்றா!”
“நான் அவ பேசினது எல்லாமே கேட்டுட்டு தான் வந்தேன்” என்றவரோ, “கோதை, பிரகாஷ் சிவமாறனுக்கும் உன்னை பிடிச்சிருக்கா?” என யோசனையாக கேட்டார்.
“நல்ல தகப்பன் டா நீ. அவ ஏற்கனவே ஆடுறா.. நீ அவளுக்கு மத்தளம் தட்டுனா அவ இன்னும் தான் ஆடுவா” என்றார் இராஜேஸ்வரி கடுப்பாக.
“அம்மா ப்ளிஸ் கொஞ்சம் நிறுத்துங்க… நான் அவகிட்ட பேசுறேன்.. நீ சொல்லு கோதை.. பிரகாஷ் சிவமாறனும் உன்னை விரும்புறாரா?” எனக் கேட்டார்.
பிரகாஷ் நடவடிக்கையை கவனித்த கோதையோ, வனிதா அவன் மனதில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டாள். எனவே, “அப்பா… அவரை பொறுத்தவரை நான் இப்போ அவருக்கு ஃப்ரெண்ட். ஆனா இனி அவர் என்னை கண்டிப்பா விரும்புவார், எனக்கு தெரியும்” என்றாள் நம்பிக்கையாக.
“கோதை, ஆறுமுகம் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும். நானே அவர்கிட்ட உங்க கல்யாணம் பத்தி பேசுறேன்” என நம்பிக்கை கொடுத்தவரை, “தாங்க் யூ சோ மச் பா” என்று கட்டி அணைத்துக் கொண்டாள் கோதை.
ராதைக்கு அழைப்பு விடுத்த வனிதா, கோதை அங்கு வந்து செய்த அனைத்தையும் கூறினாள்.
“அப்போ நீங்க ரெண்டு பேரும் ஒரே ஆளை தான் காதலிக்குறீங்களா?” என அதிர்ச்சியாகக் கேட்டாள் ராதை.
யாரிடம் நியாயம் இருக்கிறது? யாரை யார் காதலிக்கிறார்? என்பதை ஆராய ராதைக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவளுக்கு ஏனோ பிரகாஷ் சிவமாறன் மேல் நல்ல அபிப்பிராயம் வரவில்லை.தன் அக்கா மற்றும் தோழி இருவரும் ஒருவனையே காதலிக்க இறுதியில் இரு பெண்களில் ஒருத்திக்கு ஏமாற்றம் வரும் நிலை என்பதால் அந்நிலைக்கு காரணமாக போகும் பிரகாஷ் மீது அவளுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை.
நாளடைவில் கோதையும் பிரகாஷ் சிவமாறனும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். பிரகாஷ் சிவமாறனுக்கு ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் அதிகம். ஆனால் அளவோடு தான் இருப்பான். கோதையிடமும் அவ்வாறே பழகினான்.
வனிதாவாக பிரகாஷிடம் பேசினால் மட்டும் தான் பிரகாஷ் அவளுக்கு பதில் கொடுப்பான். ஏனெனில் வனிதாவின் மனதில் அவன் மீது திருமணத்திற்கே அபிப்ராயம் வந்தமையால் முடிந்தவரை அவளை தவிர்த்தான். கோதையிடம் நன்றாக பேசினான். ஏனென்றால் கோதை தோழி என்ற துருப்புச்சீட்டை எடுத்தே பிரகாஷிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள் அல்லவா.
அன்று இரவு கோதை, பிரகாஷை டின்னருக்கு அழைத்திருந்தாள். இந்த விஷயத்தில் விஜயகுமாரின் ஆதரவு இருந்ததால் மைதிலியால் அதன் பின்னர் ஒன்றும் பேச முடியவில்லை. அடுத்த வாரம் சென்னை கிளம்ப இருக்கும் ராதை, தன்னுடைய ப்ராஜெக்ட் வேலைக்காக ஏதோ படித்துக் கொண்டிருந்தாள்.
“பொண்ணை வளர்க்கிற லட்சணத்தைப் பாரு, அந்த பிரகாஷ் பையன் ராத்திரிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வரானாம், அதனால இவ ஒரு மணி நேரமா உள்ள உட்கார்ந்து மேக்அப் பண்ணிட்டு இருக்கா, இதுல இவ அப்பா, அம்மாவும் இவ ஆடுற ஆட்டத்தை எல்லாம் ஆதரிக்குறாங்க” என்றபடி ராதையிடம் கொந்தளித்தார் ராஜேஸ்வரி பாட்டி.
“பாட்டி.. சில நேரம் சில விஷயங்கள் நமக்கு தப்பா தான் தெரியும் அப்புறம் நம்ம அன்னிக்கு நினைச்ச போல இல்லணு மனசு ஏத்துக்க ஆரம்பிச்சிடும். உங்களுக்கே நான் பொறந்தப்போ என்னை பிடிக்கல தானே பாட்டி, ஆனா இப்போ அப்படி இல்லைல. அதே போல இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வரப் போற பிரகாஷ் கோதை அக்காவை கல்யாணம் பண்ண போகிறார்னு சொல்றாங்க.அவரை உங்களுக்கும் சீக்கிரமே பிடிக்கலாம் அதனால அவங்களுக்கு இதுல தப்பா தெரியல, உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க அவங்களை கண்டுக்காம டிவி பாருங்க, கதைகள் படிங்க பாட்டி.. ” என்று பொறுமையாக விளக்கம் கொடுத்தாள் ராதை.
“உனக்காக மட்டும் தான் நான் அமைதியா இருக்கேன் ராதைமா, நீ வேற அடுத்த வாரம் கிளம்புற. அதான் எனக்கு மனசே கஷ்டமா இருக்கு” என்ற பாட்டியை கண்களில் கண்ணீருடன் கட்டி அணைத்த பேத்தி, “இன்னும் ரெண்டு வருஷம் பாட்டி, அதுக்கு அப்புறம் கண்டிப்பா நான் கண்டிப்பா நம்ம ஊரு கோயம்புத்தூர்ல மட்டும் தான் ஏதாவது ஐடி கம்பெனியில் தான் வேலை பார்ப்பேன் உங்களுக்காக.. சென்னை கிடச்சா கூட நோ தான் சொல்லுவேன்” என்றாள் தீர்மானமாக.
அன்று இரவு ஏழு மணி சமயத்தில் விஜயகுமாரின் வீட்டிற்கு வந்தான் பிரகாஷ் சிவமாறன். அவனை வாசல் வரை வந்து வரவேற்றார் விஜயகுமார்.
“டி ராதை நான் எப்படி இருக்கேன்?” என ஆர்வமாக கெட்ட கோதையிடம், “எப்பயும் போல இப்பவும் ரொம்ப அழகா இருக்க க்கா, உன் அவர் உன் அழகுல மயங்கி விழப்போறாரு” என்றாள் புன்னகையுடன்.
நைட்டியை அணிந்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த ராதையைப் பார்த்து, “தாங்க்ஸ் ராதை.. சரி, நீ என்ன நைட்டி போட்டிருக்க, சுடிதார் போடலையா? டின்னர் சாப்பிட நைட்டி போட்டா வருவ லூசு” என கேட்டாள் கோதை.
“ம்ம்… எனக்கு கொஞ்சம் படிக்க நிறைய இருக்குக்கா, அவர் போனதுக்கு அப்பறம் நான் வந்து சாப்பிட்டுக்குறேன்” என்றதும், “சரி உன் இஷ்டம்” என ஹாலுக்குச் சென்று விட்டாள்.
உண்மையில் ராதைக்கு பிரகாஷ் சிவமாறனை பார்க்க பிடிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை கோதையும் முக்கியம், வனிதாவும் முக்கியம். இவர்களுள் ஒருவருக்கு எப்படியோ மனக்கசப்பு ஏற்படுவதற்கு அவன் காரணமாய் இருக்கிறான். அதனால் அவனை பார்க்க விருப்பம் இல்லாமல் தான் அப்படிக் கூறினாள்.
பிரகாஷ் சிவமாறனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார் விஜயகுமார். அவனைக் கண்ட மைதிலி இன்முகத்தோடு, “வாங்க தம்பி, உட்காருங்க” என்றவரோ அவனுக்கு பருக முதலில் காஃபி கொடுத்தார். கோதையும் கிட்சனிற்கு சென்று பிரகாஷிற்கு ஸ்நாக்ஸ் கொண்டு வர உதவினாள்.
“இங்க பாரு பிரகாஷ், அம்மா உனக்கு சுடச் சுட பஜ்ஜி, போண்டா, சமோசா எல்லாம் பண்ணிருக்காங்க சாப்பிடு” என்றாள் கோதை.
“அய்யோ ஆன்ட்டி, நான் இவ்வளவு சாப்பிட மாட்டேன்” என்றவன் கொஞ்சமாக மட்டுமே எடுத்து சாப்பிட்டான்.
“ஸ்நாக்ஸ் எல்லாம் சூப்பர் ஆன்ட்டி, செம டேஸ்டா இருக்கு. அதான் கோதை இவ்வளவு குண்டா இருக்காளா?” என கிண்டலடித்தான்.
“ஹே நான் ஒன்னும் குண்டுலாம் இல்ல. பிஎம்ஐக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான்” என்றவள், “சரி நீ சாப்பிட்டது போதும் வா, எங்க வீட்டை சுத்தி காட்டுறேன்” என அவன் கையைப் பிடித்தாள்.
“கோதை, தம்பி சாப்பிடட்டும் வெயிட் பண்ணு” என்றார் விஜயகுமார்.
“போதும் அங்கிள், நான் சாப்பிட்டேன்” என்றவனோ கோதையின் பின்னே செல்ல எழுந்திருக்கும் போது, “கோதை, ராதை எங்கே?” என்று கேட்டார் விஜயகுமார்.
“அவ எப்போவும் போல படிச்சிட்டு இருக்காப்பா” என்றவளிடம், “யார் ராதை?” எனப் புரியாமல் கேட்டான் பிரகாஷ்.
“என்னோட சித்தப்பாவோட பொண்ணு அவ முழு பேரு கோமகள் ராதை…” என்றவளோ அவளின் கதையைக் கூறி முடித்தாள்.
“நீயே இவ்வளவு வாயடிக்கிறியே, அப்போ அந்த கோமகள் ராதை உன்னை விட வாயாடியா இருப்பாளே” என்றான்.
“அவ சின்ன வயசுல வாயாடியா தான் இருந்தா, ஆனா இப்போ ரொம்ப சைலண்ட் ஆயிட்டா. அவ உண்டு அவளுடைய படிப்பு உண்டுனு இருப்பா” என்றவள் வீட்டை சுற்றிக் காட்டியவள். பின் அவனை அழைத்துச் சென்று தன்னுடைய சிறிய வயது புகைப்படங்களைக் காட்டினாள்.
“உன்னோட தங்கச்சி சின்ன வயசுல இருந்து உன் கூட தான் இருக்கா, ஆனா அவளோட ஒரு போட்டோ கூட நீ எடுக்கலயா?” என புரியாமல் கேட்டவனிடம், “அது… அவ கூட இருக்குற போட்டோஸ் எல்லாம் உள்ளே இருக்கு” என பேச்சை மாற்றினாள் கோதை.
உண்மையில் கோதைக்கு ராதையுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவே பிடிக்காது. ஏனெனில் அவளுடன் சேர்ந்து ராதை நின்றால் தான் ராதையை விட அழகில் குறைவாக தெரிவாள் என்கிற காரணத்தால் பெரும்பாலும் ராதையுடன் புகைப்படம் எடுக்க மாட்டாள் கோதை. ஆனால் ராதை இதையெல்லாம் கண்டுக் கொள்ள மாட்டாள்.
ராதையின் அறைக்குச் சென்ற விஜயகுமார், “அம்மாடி ராதை, வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தா இப்படி உள்ள இருக்கக் கூடாது. அதனால ஒழுங்கா சுடிதார் போட்டு ரெடி ஆகி கீழே வா” என்றவரிடம், “பெரியப்பா படிக்க நிறைய இருக்கு” எனத் தயங்கினாள்.
“சரி மா, ஆனால் அடுத்த முறை இப்படி பண்ணாத, சுடிதார் மட்டும் மாத்திக்கோ இப்போ” என்றுவிட்டு கிளம்பினார்.
‘நாம எதுக்கும் சும்மாவாவது சுடிதார் போட்டு உட்காருவோம், இல்லனா அதுக்கும் பெரியப்பா அடுத்து பாத்துட்டு ஏதாவது சொல்லிட போறாங்க’ என்று மடமடவென ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள் .
வீட்டை சுற்றி விட்டு வந்த பிரகாஷ் சிவமாறனை சாப்பிட அழைத்தார் மைதிலி. அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். அப்போது இராஜேஸ்வரி பாட்டியும் வந்தார். அவர் வந்தவுடன் அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் பிரகாஷ் சிவமாறன். “நல்லாருப்பா…” என்று அவனை வாழ்த்தியவருக்கு அவனை கண்டதும் பிடித்து விட்டது.
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். “அத்தை ராதை எங்கே?” என்று கேட்டார் மைதிலி.
“அவள் படிக்கிறதா சொன்னா… சாப்பிட்டு படிக்க வேண்டியது தானே, நீ போய் அவளை கையோட கூட்டிட்டு வா” என்றார் கட்டளையாக.
“அப்புறம் பிரகாஷ், எங்களோட விபி குரூப்ஸ்ல் நீங்க ஷேர்ஸ் இன்வெஸ்ட் பண்ணீங்கனா, நம்ம அபிஸியலாவும் ஃபிரண்ட்ஸ் ஆயிடலாமே” என்றாள் கோதை.
பிரகாஷூமே ஏதாவது கம்பெனியில் ஷேர் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்கிற யோசனையில் தான் இருந்தான். விஜயகுமாருடையது துணிக்கடை தொழில் என்பதால் கோதையிடம், “ஒகே கோதை, பட் நான் ஒரு கம்பெனியில ஷேர்ஸ் இன்வெஸ்ட் பண்ணா அதோட மேக்ஸிமம் பிராஃபிட் எனக்கு வர மாதிரி தான் எடுத்துப்பேன்.. அந்த மாதிரி இன்வெஸ்ட் பண்ண மாடல் தான் எனக்கு செட் ஆகும்” என்றான் தீர்மானமாக.
விஜயகுமாருக்கும் வயதாகிவிட்டதால் கம்பெனி பொறுப்பை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதிக ஷேர்ஸ் எடுத்தால் அவரின் கம்பெனி கிட்டத்தட்ட பிரகாஷ் சிவமாறனுடையது ஆகவே மாறிவிடும் அல்லவா. தன் மகள் மேல் உள்ள பாசத்தால் கண்மூடித்தனமாக பிரகாஷ் சிவமாறன் சொன்னதை ஒப்புக் கொண்டார்.
“அப்பா இனிமே நான் தான் விபி குரூப்ஸ் க்கு சிஇஓ. உங்களுக்கு ஓகே தானே?” என செல்ல கட்டளையுடன் கேட்டாள் கோதை.
“அப்போ இனிமேல் அப்பா வீட்டுல தினமும் நிம்மதியா இருக்கலாம்” என்ற விஜயகுமாரோ சிரித்தார்.
‘இவளுக்கு படிப்பே ஏறாது இதுல கம்பெனியை நடத்த போறாளாம்’ என மனதில் குமுறினார் இராஜேஸ்வரி. ஆனால் மகனிடம் பொறுப்பை கொடுத்து விட்ட பின் அவர் கம்பெனி விஷயத்தில் தலையிடுவதில்லை. அதனால் அமைதியாக இருந்தார்.
“ராதை! இங்க பாரு, இப்படி தனியா இருக்காத, இங்க ரூமுக்குள்ளயே இருந்து சாப்பாடு சாப்பிட்டா வீட்டுக்கு வந்தவங்களை நம்ம அவமானப் படுத்துற மாதிரி இருக்கும். அதனால ஹாலுக்கு வா. அப்புறம் நீ மேக்கப் பண்ணமாட்டனு தெரியும். ஆனா கெஸ்ட் முன்னாடி அந்த மாறி இருந்தா நல்லா இருக்காது” என்றபடி அவளின் தலையை அழகாக பின்னி விட்டு, மல்லிகைப் பூவை வெக்க சொன்னார் மைதிலி.
“கோதை தான் பூ எல்லாம் வெக்க மாட்டா, நீயாவது என் சொல் பேச்சு கேளுடா” என்றவரோ அவள் பின்னிய தலையில் மல்லிகை பூவை சூட்டினார்.தன் பிறை நெற்றியில் ஒரு குட்டி கல் ஸ்டிக்கர் பொட்டும் ஒரு சிறிய கம்மலும் அணிந்து மைதிலியுடன் ஹாலிற்கு வந்தாள் ராதை.
அவளை முதலில் பார்த்த விஜயகுமாரோ, “ராதை குட்டி வந்துட்டியா..? இதோ இவர் தான் பிரகாஷ் சிவமாறன்” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை அறிமுகப்படுத்தினார் விஜயகுமார்.
ராதை என்ற பெயர் கேட்டதுமே அவளை பார்த்த பிரகாஷ் சிவமாறன், அவளின் அழகில் மெய்மறந்து அவளை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து மெலிதான புன்முறுவலுடன், “வாங்க” என்று மட்டும் அழைத்துவிட்டு, பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து அமைதியாக சாப்பிடத் தொங்கினாள் ராதை.
பிரகாஷோ வைத்த கண் வாங்காமல் ராதையையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் ராதை அவனை யாரோ என்பது போல் கண்டுகொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“சோ பிரகாஷ், இனிமே நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு. நான் நாளைக்கே உன் ஆபிஸீக்கு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன். நீ சைன் பண்ணிடு” என்றாள் கோதை உற்சாகமாக.
“நானே இனிமே இங்க அடிக்கடி வரவேண்டியது இருக்கும் கோதை… நாளைக்கு நானே இங்க வந்து டாக்குமெண்டேஷன் முடிக்கிறேன்” என்றவனோ ராதையை பார்த்துக்கொண்டே கூறினான்.
“நாளைக்கு காலைல நம்ம கம்பெனி ஓனர்ஷிப்பை உனக்கு மாத்துறேன் கோதை. ராதை படிக்கிற பொண்ணு, இல்லனா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இதைப் பார்க்கலாம்” என்றார் விஜயகுமார்.
இதைக் கேட்டு கோதை கடுப்படைந்தாள் என்றால், ராதையின் குரலைக் கேட்க ஆவலாக இருந்தான் பிரகாஷ் சிவமாறன்.
“பெரியப்பா எனக்கு இதுலலாம் இன்ட்ரெஸ்ட் இல்ல, அக்காவே இதெல்லாம் பார்க்கட்டும்” என்றவள் சாப்பிட்டு முடித்து தன் தட்டை எடுத்து கழுவி விட்டு, பாட்டிக்கு மாத்திரை எடுக்கச் சென்று விட்டாள்.
‘கோமகள் ராதை… அவளோட பெயரைப் போல அவளும் ரொம்ப அழகு, அவளோட குரலும் இனிமை!’ என மனதில் நினைத்த பிரகாஷோ தன்னை மீறி அந்த அமைதியான மின்மினியை ரசித்துக் கொண்டிருந்தான்.
***
