தன் பாட்டிக்கு மாத்திரை கொடுத்து விட்டு அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள் ராதை. அனைவரிடமும் விடைபெற்ற பிரகாஷ், ராதையை தான் தேடினான், அவள் அங்கு இல்லை என்பதை உணர்ந்தவன் ஏமாற்றம் அடைந்தான்.
வீட்டிற்கு வந்த பிரகாஷிற்கு ராதையின் நினைப்பாகவே இருந்தது. ‘எவ்வளவு அழகான கண்கள்… அவளோட பால் வண்ண முகம்… அந்த அழகுக்கு அழகு சேர்க்குறது போல அவளுடைய அடக்கம், பணிவு, அமைதி…’ என அவளைப் பற்றிய நினைப்பு அவனைத் தூங்க விடாமல் செய்தது.
‘நான் ராதையை காதலிக்குறேன்! அவளை கண்டிப்பா என்னுடையவள் ஆக்குவேன்!’ என்று முடிவு செய்தவன், தன் காதல் விஷயம் முதலில் ராதைக்கு தெரிய வேண்டும் என்றே நினைத்தான்.
அடுத்த நாள் காலை பிரகாஷ் ராதையை பற்றிய விஷயங்களைச் சேகரிக்க ஒரு ஆளை நியமித்தான். வனிதாவின் தோழி என்ற வரை அவனுக்குத் தெரிந்து கொண்ட விஷயமே என்றாலும், ராதையின் அன்றாட வாழ்வியல், சென்னையில் கல்லூரியைத் தவிர வேறு எங்காவது செல்வாளா? என்று அனைத்தையும் அறிந்தான்.
அவன் அலுவலகத்தில் இருக்கும்போது தான் கோதையிடமிருந்து அவனுக்குக் அழைப்பு வந்தது. “ஹாய் பிரகாஷ், இப்போ நான் விபி குரூப்ஸ்ஸோட நியூ எம்டி கோதை விஜயகுமார்…” என்றபடி பெருமிதமாக சிரித்தாள்.
“ஹேய்! வாழ்த்துக்கள், அப்புறம் இன்னிக்கு சாயந்தரம் நான் உங்க வீட்டுக்கு வரேன். டாக்குமெண்டேஷன் முடிச்சிடலாம்” என்றான்.
“யூ ஆர் மோஸ்ட் வெல்கம் பிரகாஷ்” என்று அழைப்பை துண்டித்தாள்.
அன்று மாலை பிரகாஷ் வருவான் என்று எதிர்பார்க்காத ராதை, கோதையோடு பேசிக்கொண்டிருந்தாள். “ஏய் என் ஆளு எப்படி இருந்தாரு?” என்று கேட்டாள் கோதை.
வனிதாவின் உணர்வுக்கும் கோதையின் உணர்வுக்கும் சமஸ்தானமாய் பிரகாஷ் இருந்ததால், அவள் கோதையிடமே அவனைப் பற்றிப் பேசுவதை தவிர்த்தாள்.
“உனக்குப் பொருத்தமா இருக்காருக்கா” என்று கூறிவிட்டு அவள் உள்ளேச் செல்லும் போது, மைதிலி ஒரு பாவாடை தாவணியை கையில் எடுத்துக் கொண்டு ராதையிடம் வந்தார்.
“ராதை, இந்தப் பாவாடை தாவணி எவ்வளவு அழகா இருக்கு பாரு, இதை கோதை போட மாட்டாளாம், நீயாவது இதை போடு” என்று அவளைப் போடச் சொல்லி உள்ளே அனுப்பினார்.
அப்போது தான் அவர்கள் வீட்டினுள் நுழைந்தான் பிரகாஷ். ராதையோ அவள் அறையினுள் சென்று அந்த அழகிய பாவாடை தாவணியை அணிந்து, மைதிலி கொடுத்த மல்லிகை பூவையும் சூட்டிக் கொண்டு அழகிய பதுமை போல் வந்தாள்.
பிரகாஷைக் கண்ட கோதை அவனைச் சந்தோஷமாக வரவேற்று பேசிக்கொண்டிருந்தாள். அப்போதும் அவனுடைய கண்கள் ராதையை தான் தேடிக்கொண்டு இருந்தது.
ராதை அலங்காரம் செய்து விட்டுத் தன் பாட்டியைத் தேடினாள். ஏனெனில் இராஜேஸ்வரி ராதையை இவ்வாறு அலங்காரத்தோடு பார்த்தால் ரொம்பவே சந்தோஷப்படுவார். ராதையின் உடை மற்றும் ஒப்பனைகளைப் பார்த்த பாட்டி சந்தோஷத்துடன் திருஷ்டி சுற்றி போட்டார்.
“இப்போ பார்க்க அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க, இனிமே தினமும் இப்படி தான் அழகா அலங்காரம் பண்ணுவேன்னு சத்தியம் பண்ணு” என்ற பாட்டியிடம், “ஐய்யோ பாட்டி, இன்னிக்கு பெரியம்மா இதை போட சொல்லி மல்லிப் பூவும் கொடுத்தாங்க. அதான் இந்த மேக்கப் எல்லாம்” என்று அவள் சொல்லும் போது இராஜேஸ்வரி பாட்டி முகத்தைத் திருப்பினார்.
“நான் சொல்றதை நீ தான் கேட்க மாட்டியே, என்கிட்ட பேசாத” என்றார் கோபத்துடன்.
“பாட்டி பாட்டி… இனிமேல் தினமும் இந்த மாதிரி இல்லைனாலும் நார்மலா அலங்காரம் பண்றேன், ப்ளீஸ் இப்போ சிரிங்களேன்” என்று கெஞ்சினாள்.
“அப்படி சொல்லு என் அழகு ராதை” என்றார் சந்தோஷத்துடன்.
அடுத்து மைதிலியிடம் காட்டுவதற்காக சமையலறைக்குச் சென்றாள். சமையல் அறையை ஒட்டி தான் அவர்கள் வீட்டு ஹால் இருக்கும் என்பதால் அதைத் தாண்டித்தான் ராதை செல்ல வேண்டும்.
ரொம்ப நேரமாக ராதையைத் தேடிய பிரகாஷ், கோதையிடம் டாக்குமெண்ட்ஸ்ஸை நீட்ட அதை வாங்கி கையெழுத்து எல்லாம் முடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தாள். ராதை ஹாலில் இருக்கும் பிரகாஷை கண்டுக் கொள்ளாமல் மைதிலியிடம் தன் அலங்காரத்தைக் காட்டினாள்.
பிரகாஷிற்கு மிகவும் அவமானமாகப் போனது. தன்னை ஒரு பெண் கண்டுக் கொள்ளாமல் செல்கிறாள், அதுவும் அந்த பெண் அவன் மனதில் குடி புகுந்தவள் எனும் போது அவனுக்கு எரிச்சல், கோபம் நன்றாகவே வந்தது.
ராதையைக் கையோடு ஹாலிற்கு அழைத்துக் கொண்டு வந்த மைதிலி, “ஹேய் கோதை, அம்மு எவ்வளவு அழகா இருக்கா பாரு” என்று ஆசையாகக் காட்டினார். ஆனால் கோதையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தான் விரும்பும் பிரகாஷ் முன் தன் தங்கையின் அழகு புகழப்படுவது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
ராதை தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பிரகாஷ் வேண்டும் என்றே, “உன் அளவுக்கு எல்லாம் அழகு இல்லை கோதை” என்றான். அப்போதாவது ராதை தன்னை பார்ப்பாளா? என்று நினைத்தான். ஆனால் அவனுக்குக் கிடைத்தது ஏமாற்றமே.
“ஐய்யோ தம்பி, சாரி நீங்க இருக்குறதை தெரியாம நாங்கள் அழகு இதுனு காமெடி பண்ணிட்டோம், இருங்க காபி கொண்டு வரேன்” என்றபடி சமையலறைக்குச் சென்றார் மைதிலி.
தன்னை பிரகாஷ் இவ்வாறு புகழ்ந்தது கோதைக்கு உச்சி குளிர்ந்தது. பிரகாஷ் சொன்ன வாக்கியத்தைக் கண்டு கொள்ளாத ராதை, கோதையிடம் வந்து அவளின் கன்னத்தைக் கிள்ளி, “நீ தான் கா ரொம்ப அழகு” என்று கொஞ்சி விட்டு உள்ளேச் சென்றாள்.
பிரகாஷ் ராதை மீது வைத்திருக்கும் காதல் அது கண்டதும் காதல் வகையானது. ஆனால் ராதையின் மனதில் என்ன இருக்கும் என்பதை உணர அவன் முயற்சிக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை ராதை அவனுக்கு கிடைக்க வேண்டும்… ஆனால் ராதை மனதில் என்ன இருக்கிறதோ?
***
