“ஏய் ராதை, உன் மனசுல அப்படி என்ன தான் ஓடிட்டு இருக்கு, ஏன் நான் எப்போ பிரகாஷ் அத்தான் பத்தி பேசுனாலும் பேச்சை மாத்துற?” என ராதையிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டு விட்டாள் வனிதா.
“அப்படி எல்லாம் இல்லடி, அவரைப் பத்தி பேச எனக்கு எதுவும் இல்ல அன்ட் அவரைப் பத்தி நான் எதுக்கு டி பேசணும்.. அதான்” என முடித்தாள் ராதை.
“ஏன் ராதை, உன் அக்கா எப்போ எனக்கு போட்டிக்கு வந்தாளோ அப்போ இருந்து நீ இப்படி தான் அத்தானை பத்தி பேசினாலே பட்டும் படாம பேசுற, ஏன் உன் அக்காக்கு தான் பிரகாஷ் அத்தான் கிடைக்கணும்னு நீ நினைக்குறியா?” என கோபமாகக் கேட்டாள் வனிதா.
இதைக் கேட்ட ராதைக்கோ கோபம் வந்துவிட்டது. “இங்க பாரு வனிதா, நீயும் நானும் ஆல்மோஸ்ட் எட்டு வருஷமா ஃபிரண்ட்ஸா இருக்கோம்.”
“ஆனா நீ என்னை பத்தி சரியாவே புரிஞ்சிக்கலல, நீ கல்யாணம் பண்ண போறவரை என் அக்கா காதலிக்குறாளா? இல்லை என் அக்கா காதலிக்குறவரை நீ கல்யாணம் பண்ணிக்க போறீயானு கூட எனக்கு தெரியலை.”
“எனக்கு நீயும் முக்கியம், என் அக்காவும் முக்கியம். ரெண்டு பேரும் ஒருத்தரையே காதலிக்கும் போது நான் எப்படி பழைய மாதிரி உங்களை சகஜமா கிண்டல் பண்ணி பேச முடியும்?”
“இப்போலாம் என் அக்காகிட்டயும் நான் சரியா பேசுறது இல்ல. அவ எப்போ பார்த்தாலும் பிரகாஷ் சிவமாறன் பத்தித் தான் பேசிட்டு இருக்கா… சோ என்னால அவ கிட்டயே முன்ன மாதிரி இப்போலாம் பேச முடியல. எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஹர்ட் ஆக கூடாது.. அதான் எனக்கு வேணும்” என்றாள் ராதை கவலையாக.
“என்னை மன்னிச்சிடு ராதை, நான் ஏதோ ஆதங்கத்துல அப்படி பேசிட்டேன். இப்போலாம் பிரகாஷ் கோதைகிட்ட நெருக்கமாக இருக்காரு, அது எனக்கே தெரியுது. அன்னிக்கு டைனிங் டேபிள்ல கூட சாப்பிட்டு இருக்கும் போது உன் அக்கா கால் பண்ணிருக்கா, இவரும் சிரிச்சு சிரிச்சு பேசுறாரு. எப்போ உன் அக்கா எங்க வீட்டூக்கு வந்தாளோ, அன்னில இருந்து தான் ரெண்டு பேரும் நெருக்கம் ஆனாங்க” என்றாள் வனிதா சோர்வு கலந்த கவலையுடன்.
“என் அக்கா உங்க வீட்டுக்கு எப்போ வந்தா? ஓ ஆமாடி! அன்னிக்கு கூட பெரியம்மா கேட்டாங்க, அப்போ அக்கா உங்க வீட்டுக்கு தான் வந்தால்ல மறந்தே போயிட்டேன்” என்றாள் ராதை.
ராதையிடம் கோதை அன்று செய்த வேலை அனைத்தையும் கூறினாள் வனிதா. இதைக் கேட்ட ராதைக்கு தன் அக்கா எல்லை மீறி போகிறாளோ என்கிற பயம் வந்தது.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் வனிதாவிடம், “நாளைக்கு நம்ம சென்னை கிளம்பணும்டி அதை மறந்துடாத நம்ம சீக்கிரம் தூங்கணும், சரி நான் காலை கட் பண்றேன்” என்றபடி உறங்கச் சென்றாள் ராதை.
அடுத்த நாள் காலை தன் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, தன் பெரியம்மா மற்றும் கோதையிடம் விடைபெற்று விட்டு, தன் பெரியப்பாவுடன் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்குச் புறப்பட்டாள் ராதை.
ராதையை ரயில் நிலையத்தில் விட்ட விஜயகுமாரிற்கு திடீரென்று ஒரு அவசர கால்.. உடனே அவர் வேலை விஷயமாக கிளம்ப வேண்டிய கட்டாயம் வந்துருந்ததால் வேறு வழியின்றி ராதையிடம், வனிதா வரும் வரை பத்திரமாய் இருக்குமாறு சொல்லிவிட்டு அதை உறுதிப்படுத்திக்கொண்டு கிளம்பினார்.
அன்று வனிதா ராதையுடன் தான் ஊருக்கு கிளம்புகிறாள் என்பது பிரகாஷிற்கு தெரியும். ராதையை காணப்போவதால் காலையிலேயே எழுந்து குளித்தவன், அவனுக்கு மிகப் பிடித்த நீல நிற முழுக்கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து தயாரானான்.
ராதையை காண வேண்டும் தன் காதலை அவளிடம் இன்று கண்டிப்பாக சொல்ல வேண்டும் என உறுதியாக இருந்தான் பிரகாஷ். அதனால் வனிதாவை தானே ரயில் நிலையத்தில் விடுவதாய் வீட்டில் சொல்லிவிட்டு அவளைத் தன்னோடு காரில் ஏறச் சொன்னான்.
விஜயாவிற்கு இது ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. பிரகாஷிற்கு வனிதா மீது காதல் வந்துவிட்டது என்றே விஜயா முடிவு செய்துவிட்டார். அதே போல தான் வனிதாவும் நினைத்தாள். காரில் பிரகாஷோடு சந்தோஷமாகச் சென்றாள் வனிதா.
“ம்ம் வனிதா, உன்னோட பிரண்ட் ராதை இருக்கா இல்லையா, அவளோட ஃபோன் நம்பர் கொடு. சப்போஸ் உன்ன கான்ட்க்ட் பண்ண முடியலன்னா உன் பிரண்ட் க்கு கால் பண்ணி உன் கிட்ட பேசுலாம்ல” என்றான்… எப்படி கேட்டால் ராதையின் நம்பர் தனக்கு கிடைக்கும் என்று அவனுக்கு தெரியும்.
இதை கேட்ட வனிதாவிற்கு வெட்கம் வந்தது. தன்னுடைய அத்தானிற்கு தன் மீது காதல் வந்து விட்டது என்று முட்டாள்தனமாக நினைத்த வனிதா, ராதை நம்பரை கொடுக்க தன்னுடைய செல்லை எடுத்தாள். ஆனால் அவளின் செல்லோ சார்ஜ் இல்லாமல் அணைக்கப்பட்டு இருந்தது.
“அய்யோ அத்தான், சாரி மொபைல் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியிருக்கு. நான் உங்களுக்கு ராதை கிட்ட இருந்தே மொபைல் நம்பர் வாங்கித் தரேன், அவ இந்நேரம் ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்திருப்பா” என்றாள்.
தன் காரை பார்க் செய்து விட்டு பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிவிட்டு வனிதாவுடன் உள்ளே வந்தான் பிரகாஷ் சிவமாறன்.
ரயில் நிலையத்தில், பயணிகள் உட்கார்ந்திருக்கும் சிமெண்ட் மேடையில், தன் டிராலியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ராதை.
அந்த விடிகாலைப் பொழுதில், அவள் அணிந்திருந்த மெரூன் நிற சல்வார், அவளின் எலுமிச்சை பழ நிறத்திற்கும் சீரான உடலுக்கும் பொருத்தமாக இருந்தது. தலை முடியை மொத்தமாக எடுத்து கிளிப் போட்டிருக்க, காதின் இரு பக்கமும் கிடந்த முடி கற்றை வேறு அவளை இன்னுமே பேரழகியாக காட்டியது.. மொத்தத்தில் ஆடவரை கவரும் பேரழகிய மங்கை போல இருந்தாள்.
அவளைக் கண்ட பிரகாஷ் சிவமாறனோ தன்னை மீறி அவளின் அழகில் தான் அணிந்திருந்த கூலர்ஸை எடுத்தான்.
“ஹாய் ராதை… இதோ இங்க இருக்கேன்” என்று கத்தி ராதையின் கவனத்தை தன் பக்கம் கொண்டு வந்தாள் வனிதா.
“ஹாய் டி வந்துட்டியா..?” என்றவள் அவளின் பின்னால் வந்த சிவமாறனைக் கண்டும், வனிதாவிடம் மட்டுமே தன் கவனத்தைத் திருப்பினாள்.
“எங்கடி அங்கிள்? நீ மட்டும் தனியா இருக்க?” என்று கேட்டாள் வனிதா.
“பெரியப்பாக்கு ரொம்ப முக்கியமான வேலை வந்திருச்சுடி. அதான் போயிட்டாங்க. நம்ம போக வேண்டிய கோவை சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வந்திருச்சுடி, ஆனா இன்னும் சார்ட் ஒட்டல” என்றாள் ராதை.
“சரிடி, பிரகாஷ் அத்தான் என் மொபைல் சப்போஸ் ரீச் ஆகலைனா உனக்கு கால் பண்ணி என்கிட்ட பேசுவாங்களாம், அதனால உன் மொபைல் நம்பர் அத்தான் கேட்கிறாங்க” என்று வனிதா சொல்லும் போது அவளின் பக்கத்தில் கம்பீரமாய் வந்து நின்றான் பிரகாஷ் சிவமாறன்.
“வனிதா, நான் தெரியாதவங்க யாருக்கும் என்னோட ஃபோன் நம்பர் தர மாட்டேன்னு உனக்கு தெரிஞ்சும் இப்படி கேட்குற, வேணும்னா நம்ம ரூம் மேட் வினிதாவோட நம்பர் கொடு. அதுவும் அவகிட்ட பெர்மிஷன் கேட்ட அப்பறம் கொடு” என்றவளோ பிரகாஷை பார்க்கப் பிடிக்காமல் ரயிலில் டிடிஆர் சார்ட் ஒட்டுவதைப் பார்ப்பது போல் அந்தப் பக்கம் சென்றாள்.
பிரகாஷிற்கு இரண்டாவது முறை ராதையிடம் இருந்து மூக்கு உடைந்தது. அவனுக்கோ ராதையின் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது.
***
