துருவம் 7

துருவம் 7

துருவம் 7

 

“அவசரப்படாதீங்க அஷ்வின்.. விஜய் அண்ணாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம அவர் கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டாரு. அவர் டைப்பே அப்படித் தான்” என்றாள் தயக்கத்துடன். 

 

தங்கை அவன் தான் வேண்டும் என்று தீர்மானமாக இருக்கும் பொழுது அஷ்வினாலும் இதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை. 

 

நிச்சயம் அன்று அஷ்வினிடம் ஓரிரு வார்த்தைகள் விஜய் பேசினான் தான். ஆனால் அதில் பெரிதாக பற்றோ, ஒற்றுதலோ இல்லை.

 

“சோ அனன்யா.. எனக்கு என்னோட தங்கச்சி வாழ்க்கை ரொம்ப முக்கியம்… நீ என்கிட்ட உண்மையா இருப்பனு நம்புறேன்” என்று அவன் கேள்வியாய் கேட்க, 

 

“பிராமிஸா சொல்றேன்.. அண்ணா நேச்சரே அப்படித் தான் அஷ்வின்” என அனன்யா உறுதியாக சொல்ல, 

 

அஷ்வினின் தந்திர மூளை நீண்ட நேர யோசனையுடன், “ஓகே.. பிரண்ட்ஸ்” என தன் கைகளை அனன்யாவிடம் நீட்ட, பெண்ணவளோ ஆணவனின் செய்கையில் உச்சி குளிர்ந்தாள். 

 

“பிரண்ட்ஸ் அஷ்வின்” என ஆர்வத்துடன் அவனுடன் கை குலுக்கினாள். 

 

அன்றில் இருந்து தன் தங்கைக்காக அதாவது விஜய்யை நோட்டம் விடும் கருவியாய் அனன்யாவை உபயோகப்படுத்திக் கொண்டான் அஷ்வின் கிருஷ்ணா. 

 

அனன்யாவிடம் லேசாக போட்டு வாங்கினாலே போதும்.. அஷ்வின் தனக்கு கால் செய்கிறான், அஷ்வின் தன்னை வெளியே பேச அழைக்கிறான் என்கிற சந்தோஷத்தில் அனைத்தையும் உளறிவிடுவாள்.. 

 

இதோ விஜய் மற்றும் பவித்ராவிற்கும் கல்யாணமே நடந்துவிட்டது… 

 

ராகினி அஷ்வினின் அத்தை மகள் என்பதைத் தாண்டி அனன்யாவிற்கு எதுவும் தெரியாது… 

 

அப்படித் தான் ராகினி நடந்துக்கொண்டாள். அவள் அப்படி நடக்கக் காரணம் அஷ்வினின் அன்னை. அவர் தான் அஷ்வினுக்கும் ராகினுக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் வரை யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டார் அல்லவா! 

 

வரலட்சுமி விலாஸ், ரேஸ் கோர்ஸ் காலனி கோயம்புத்தூர்.. 

 

அது ஒரு முன் இரவு பொழுது.. 

 

வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் தன் கணவனுக்கு தானே சமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புபவள் பவித்ரா. 

 

என்ன தான் அவளுக்கும் அவளின் கணவன் விஜயக்கும் பெரிதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் இன்றைய நாள் வரையில் கூட அவள் அவளின் கணவனை உயிராக நேசிக்குறாள். 

 

இன்றோடு விஜய் மற்றும் பவித்ராவிற்கு திருமணமாகி வருடம் ஒன்று முடிந்துவிட்டது.. 

 

எப்போதுமே கணவனுக்கு பார்த்து பார்த்து சமைப்பவளுக்கு இன்று முதல் வருட திருமண நாள் வேறு சொல்லவும் வேண்டுமா! 

 

காலையில் நேரத்திற்கே சென்றுவிட்டிருந்தான்.. அதனால் அவனுக்கு வகை வகையாய் சமைக்க முடியவில்லை. 

 

இப்போது அவனுக்கு பிடித்த உணவை எல்லாம் சமைத்துக் கொண்டுருந்தவளின் முன்னே வந்த அனன்யா, 

 

“என்ன அண்ணி! உங்க ஆளுக்கு மட்டும் தான் இவ்வளவு ஸ்பெஷல் சாப்பாடா.. எங்களுக்கு எல்லாம் இல்லயா” என கலாய்த்தபடி கேட்க, 

 

“வாலு வாலு.. உனக்கு இல்லாமலா.. எல்லாருக்கும் சேர்த்து தான் சமைக்குறேன்” என புன்னகை மலர பவித்ரா சொல்லிக் கொண்டு இருக்க, அவளின் ஃபோன் அடித்தது. 

 

அவளின் அன்னை சாரதா தான் கால் அடித்துருந்தாள். 

 

சமையலுடன் இருந்ததால் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டபடியே, “சொல்லுங்க ம்மா!” என அவள் பேச ஆரம்பிக்க மறுப்பக்கம் அவரோ, 

 

“இன்னிக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்தோம் பவாம்மா.. இன்னியோட வருஷம் ஒன்னு ஆகுது.. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் இன்னும் விஷேஷம் இல்லயான்னு கேட்குறாங்க.. உனக்கும் மாப்பிள்ளைக்கும் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கணும்னு நம்ம குலதெய்வம் பேச்சியம்மனை வேண்டிட்டு வந்தோம் டி” என வருத்தப்பட்டு சொன்ன அன்னையிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்த பவித்ராவின் முகத்திலும் சோகம் தெரிய, அதை கவனிக்கத் தவறவில்லை அனன்யா.

 

தன் அன்னையிடம் எப்போதும் போல சமாளித்து வைத்தவள் தன் வேலையைப் பார்க்க,

 

“அண்ணி.. நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நீங்க அண்ணாவோட சந்தோஷமா தானே இருக்கீங்க” என தவிப்புடன் கேட்டாள் அனன்யா. 

 

“அடியேய்.. இந்த ஒரு வருஷத்துல கண்டிப்பா நூறு தடவையாவது இந்தக் கேள்விய கேட்டுருப்ப அனன்யா” என புன்னகைத்தபடியே சொன்னாலும் அவள் முகத்தில் இருந்த சோகம் அனன்யாவை விடாது, “என் கிட்டயும் உங்க அம்மா கிட்ட சமாளிச்சது போல சமாளிக்காதீங்க அண்ணி” என்றாள். 

 

“உன் அண்ணா நேச்சர் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணினேன் அனன்யா. அவருக்காக என்னோட வேலையை எல்லாம் விட்டேன். இந்த ஒரு வருஷம் எனக்கும் உன் அண்ணனுக்கும் பெருசா சண்டைனு எதுவும் வந்தது இல்ல.. ஏன்னு தெரியுமா! அவர் இப்படித் தான், அவருக்கு இது பிடிக்காது அது பிடிக்காதுனு அவருக்கு ஏத்த மனைவியா பெர்ஃபெக்ட்டா இருந்தேன்..”

 

“இது எல்லாமே முதல்ல நான் பண்ணும் போது ஆசையா ஆர்வமா இருந்துச்சு.. ஆனா இப்போ லாம் நம்ம இப்படி இருந்தும் என்ன ப்ரோயஜனம்னு தோணுது” என்றாள் கலங்கிய விழிகளுடன். 

 

“அண்ணி..” என்றபடி பவித்ராவின் தோளில் ஆறுதலாக கைவைத்த அனன்யா, 

 

“என்ன பிரச்சனைனு சொல்லுங்க?” என கேட்டாள் பதற்றமாக. 

 

“எங்களுக்குள்ள பிரச்சனைன்னு எதுவுமே இல்ல அனன்யா.. அவருக்கு தகுந்த போல அவர் கிட்ட அளவா பேசுறேன்.. அளந்து பேசுறேன்.. யோசிச்சு யோசிச்சு இதெல்லாம் பேசுனா அவர் கோபப் படுவாரா இல்ல கோபப்படமாட்டாரான்னு பத்து தடவை மேல யோசிச்சு பயந்து தான் பேசுறேன்” என்று சொல்லும் போதே பவித்ராவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க, அனன்யாவிற்கு தான் மிகவும் சங்கடமாகிப் போனது.

 

விஜய் இப்படித் தான் என அனன்யாவும் அறிந்தது தானே! அவனின் கல்யாண சமயத்தில் பவித்ராவிற்காக விஜய்யிடம் பேசவே அனன்யாவிற்கு பயம் இருக்கத் தான் செய்யும்.. 

 

ஆனாலும் இந்திரஜித்தின் கட்டளைப்படி விஜய் இப்போதெல்லாம் அனன்யா மற்றும் அமிர்தாவிடம் சற்று பொறுப்பான, அன்பான அண்ணனாக தான் இருக்க முயற்சிக்குறான்.. 

 

முயற்சி மட்டுமே.. அவனின் இயல்பான ஒட்டுதல் இல்லாத குணம் சில நொடிகளில் வெளிவந்து விடும். 

 

இப்போது மனைவியிடமும் அவன் இவ்வாறு இருப்பது அனன்யாவிற்கு எரிச்சலாக இருந்தது.. 

 

“அண்ணி.. அது வந்து.. அண்ணா இதெல்லாம் தாண்டி உங்க கிட்ட பாசமா தானே இருக்காரு.. இல்ல இப்போ அத்தை குழந்தைக்காக சொன்னாங்கல அதை கேட்டேன்” என தட்டுத் தடுமாறி கேட்டாள் அனன்யா. 

 

“அவரை நான் ரொம்பவே காதலிக்குறேன் அனன்யா.. ஆனா அவர் என்னை காமத்தோட மட்டுமே நெருங்குற போது எனக்கு ஏதோ பிடிக்கல” என்று அவள் முடிக்க, 

 

“அண்ணி” என புரியாமல் விழித்தாள் அனன்யா. 

 

“கல்யாணமாகி முதல் மூனு மாசம் உன் அண்ணன் என்கிட்ட பேசவே இல்ல ஏன்னு தெரியுமா! அவர் என்ன காதலிக்கவே இல்ல.. அதுக்காக எல்லா புருஷனும் அரேன்ஜ்ட் மேரேஜ்ல பொண்டாட்டியை உடனே காதலிக்கணும்னு நான் நினைக்கல.. ஒருத்தர் நாள் முழுக்க நமக்கு ஹிட்லர் பீல் கொடுத்து பயப்பட வெச்சிட்டு அவர் நம்மளை தொட வரும் போது நமக்கு என்ன தோணும்” என பவித்ரா பட்டென்று கேட்க, அனன்யாவோ சொல்வதியாது திகைத்து விழித்தாள்.

 

“அப்போ உங்களுக்குள்ள..” என அனன்யா திணற, 

 

“உன் அண்ணன் ரொம்ப ரோசக்காரர், ஈகோ பிடிச்சவர்.. அனன்யா. நம்ம நல்லா புரிஞ்சுக்கிட்டு இதெல்லாம் ஸ்டார்ட் பண்ணலாமேன்னு நான் பயந்து பயந்து தான் சொன்னேன் அதுக்கே கடுப்பாகி அவர் என் கிட்ட மூனு மாசம் பேசல.. அது வீட்ல தெரியாம இருக்க நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். மூனு மாசம் கழிச்சு மறுபடியும் அவர் என்னைத் தொட வர, எப்படித் தான் எனக்கு அவர் கிட்ட பேச அப்படி தைரியம் வந்துச்சோ! நீங்க என்கிட்ட சராசரி புருஷனா நடந்துக்காம இதெல்லாம் பண்ண வரும் போது எனக்கு இதெல்லாம் பிடிக்கலன்னு சொல்லிட்டேன்.. அதுல இருந்து ஹிட்லரா இருந்தவரு இப்போ ரொம்ப டெரர் ஹிட்லர் ஆயிட்டாரு” என வறண்ட புன்னகையுடன் சொன்னாள். 

 

அதைக் கேட்ட அனன்யாவோ அவசரமாக, “நீங்க தான் அண்ணாவை காதலிக்குறீங்களே அண்ணி.. அப்புறம் ஏன்!” என கேள்வியாக கேட்க, 

 

“என்னோட காதல் உண்மைன்றதுக்காக, என்னோட தன்மானத்தை என்னால இழக்க முடியாது அனன்யா” என பட்டென்று சொன்ன பவித்ராவை அதிருப்தியாக தான் பார்த்தாள் அனன்யா. 

 

ஏனோ அனன்யாவிற்கு இதில் முரண்பாடு இருந்தது. இத்தனை நேரம் பவித்ராவின் மீது இருந்த இரக்கம், பரிதாபம் எல்லாம் மட்டுப்போனது.. 

 

அது அவளின் முகத்திலேயே தென்பட, “இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது அனன்யா.. விடு! என்ன இருந்தாலும் நீ இந்த வீட்டுப் பொண்ணு.. உன் அண்ணனுக்காக தான் சப்போர்ட் பண்ணுவ” என்று சலிப்பாக முடித்துவிட்டாள் பவித்ரா. 

 

“இல்ல அண்ணி.. நான் அப்படி யாருக்குமே சப்போர்ட் பண்ணல.. உங்க சிச்சுவேஷன் எனக்கு இருந்தா கண்டிப்பா என் காதலால என் ஆளை கரெக்ட் பண்ணிடுவேன்.. அதுக்கு மேட்டர் எனக்கு ஹெல்ப் பண்ணும்ன்னா இந்த முந்தானையில புருஷன முடிச்சு வைச்சு, தலையணை மந்திரம் இதெல்லாம் சொல்வாங்களே.. அதை எல்லாம் வொர்க் அவுட் பண்ணி என் ஆளை என் பின்னாடியே அலைய வைப்பேன்” என்றவளிடம் எதுவும் பதில் சொல்லாத பவித்ரா, 

 

“உன் அண்ணன் வர நேரமாகுது.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்.. இந்த சிக்கன் கிரேவியை அஞ்சு நிமிஷத்துல ஆஃப் பண்ணிடு” என சொல்லிவிட்டு சென்றவளை, வேடிக்கையாக பார்த்த அனன்யா, 

 

“புருஷனை தொட விட்டாங்களாம்.. ஆனா புருஷன் வர டைம்ல டான்னு ஃபிரெஷ்ஷாக போயிடுறாங்க.. சோ ஃபன்னி” என நினைத்த அனன்யாவிற்கு தெரியவில்லை.. அது தன் வாழ்க்கையில் நடக்கும் போது தான் அதனின் வலி, வேதனை புரியும் என்று.. 

 

தனக்கும் இந்நிலை நேரும் என்று கனவிலும் நினைத்திடாத அனன்யாவிற்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்? அவளின் நிலைபாடு என்னவாக இருக்கும்? 

 

தன் கணவனை உண்மையாக காதலிக்கும் பவித்ராவிற்கு காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி என்னவோ! 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
3 Comments
error: Content copy warning!!