அவனின் குரலில் இருந்த கம்பீரம் அவளுக்கு வசீகரம் தாண்டிய பயத்தைக் கொடுக்க அவனுக்கு பதில் கொடுக்க முடியாமல் விழித்தாள் சோனியா.
அவள் விழிப்பதை புருவம் உயர்த்தி பார்த்தவன், “இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கணு கேட்டேன்” என்றான் அதட்டலாக.
“தூ.. தூக்கம் வரல சார்” என திக்கித் திணறி சொன்னவளுக்கோ மனதில் ஒரு அழுத்தம்.. ஒருவேளை விக்னேஷ் தன்னை தவறாக நினைத்து விட்டானோ என அவளின் மனது குமுறியது..
அவளின் கண்களில் தெரிந்த சோர்வு, அழுத்தம் அவனுக்கு புரிந்தது.. அவள் மனதில் இது தான் ஓடுகிறது என்பதையும் கூட அவன் யூகித்தான்..
“நான் உன்ன தப்பா நினைக்கல சோனியா” என சொல்லத் துடித்த வார்த்தைகளை தன் கோபத்தால் கட்டுப்படுத்திக் கொண்டவன்,
“நீ பண்ணின காரியத்துக்கு எல்லாம் நான் நிறைய நாள் தூங்காம பேய் போல முழிச்ச உட்கார்ந்துருக்கேன்.. உனக்கு ஒரு நாளைக்கே வலிக்குதோ” என நக்கலாக கேட்டான்.
“நான் சரியா சந்தோஷமா தூங்கி பல மாசம் ஆச்சு சார்” என சுரம் இன்றி சொன்னவள்,
“நீங்க கொடுக்குற தண்டனைக்கு நான் தகுதியானவ தான்… ஆனா உண்மையா என் குழந்தைய நான் அழிக்க நினைக்கல” என சொல்லும் போதே அவளின் கண்களில் நீர் வந்துவிட்டது…
அவனுக்கு விவாகரத்தில் கையெழுத்து இட்டு தரும் முன்னர் வரை, எத்தனையோ தடவைகள் அவனிடம் கெஞ்சி இருக்கிறாள்…
அதை ஒரு தடவை கூட விக்னேஷ் காது கொடுத்து கேட்டது இல்லை… அதை உண்மை என்றும் அவன் நம்பியது இல்லை…
இன்றும் அவன் தன்னை நம்ப மாட்டான் என அவளுக்குத் தெரியும்… ஆனாலும் ஏன் சொல்கிறாள் என்று அவளுக்குத் தான் தெரியவில்லை…
அவளின் கண்களில் வழிந்த நீர் விக்னேஷின் மனதை எப்போதும் போல சுட்டது.. ஆனாலும் கல்லாக தான் இருந்தான்…
“இன்னிக்கு வந்தவன் யார் என்னனு எனக்கு சத்தியமா தெரியாது… நான் முன்னாடி அநியாயமான விஷயம் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன்… பட் நான் தப்பான பொம்பளை இல்ல… என் உடம்புல உயிர் இருக்குற வரை உங்களை மட்டும் தான் என் மனசையும், உடம்பையும் தொட விடுவேன் விக்னேஷ்” என கண்களில் கண்ணீர் மல்க வேகமாக சொல்லி முடித்தாள்…
அவளின் அழும் முகத்தை பார்த்து அவனால் இறங்காமல் இருக்க முடியவில்லை… ஆனாலும் அவள் செய்த தவறுகள் எல்லாமே அவனின் மூளைக்குள் ரீங்காரம் இட, “நான் உன்கிட்ட உன் கேரக்டர் செர்டிபிகேட் கேக்கலயே” என அலட்சியமாக சொன்னான்.
“எனக்கு சொல்லணும்னு தோணுச்சு” என கரகரத்த குரலில் சொன்னவள், வேகமாக அவளின் அறை நோக்கி ஓடினாள்…
****
அமிர்தா விழிக்கும் வரை ஆத்மனால் அங்கு இருக்க முடியவில்லை… அவனுக்கு தான் இசை வெளியீட்டு விழாவிற்கான வேலைகள் பல இருந்ததே…
ஜீவனை இந்த சமுதாயம் முன்னாடி நிற்க வைத்து அவனின் கிழ்த்தரமான புத்தியை வெளிக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு நிறையவே இருக்கிறது தான்…
ஆனாலும் தன் மனைவியைப் பற்றி எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதை வெளியில் வெளியிட அவன் விரும்பவில்லை…
அவனின் வேலை அவனை அழைக்க, தன் தங்கை ஸ்வாதியை அழைத்தவன், “நான் இப்போ அவசரமா வெளியே கிளம்பணும் ஸ்வாதி… நீ அமிர்தா முழிச்ச உடனே எனக்கு கால் பண்ணு” என்று சொன்னவன் கிளம்பி யிருக்க, தன் அண்ணன் சொன்னது போல அமிர்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டாள் ஸ்வாதி.
அஜய்க்கோ இத்தனை நாள் வராத சந்தேகம் இன்று வந்தது…
ஒருவேளை தங்கள் தங்கை அமிர்தா இங்கு ஆத்மனுடன் சந்தோஷமாக வாழவில்லையோ என்கிற பயம்…
அவள் மயங்கி விழுந்தது உண்மையாக ஆத்மன் சொன்ன காரணமாக கூட இருக்கலாம்…
ஆனாலும் தன் முன்னமே தங்கையை வந்து பார்த்து அவளின் நலனை விசாரித்து இருக்க வேண்டுமோ என ஒரு அண்ணனாக ரொம்ப குற்ற உணர்வில் வருந்தினான் அஜய்…
தங்கை எழுந்த பின்னர் அவளிடம் கேட்டு விடலாம் என்று அஜய் இருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் விழித்தாள் அமிர்தா..
அமிர்தா விழித்தவுடன் தன் அண்ணனின் கட்டளைப்படி அவனுக்கு கால் செய்து அமிர்தாவிடம் கொடுத்தாள் ஸ்வாதி.
தன்னை மன்னவன் காப்பாற்றிவிட்டான் என கண்களை விழிக்கும் போதே அவளின் மூளை மெல்ல மெல்ல எடுத்துரைக்கும் போது ஸ்வாதி ஃபோனை கொடுக்க, ஆத்மனிடம் பேசவே அவளுக்கு பயமாக இருந்தது…
தன்னை அவன் கண்டிப்பாக தவறாக நினைத்துருப்பானே.. அத்தகைய செயலைத் தானே தான் செய்துருக்குறோம் என அவளின் மனது குற்ற உணர்ச்சியில் அடித்துக் கொண்டது.
ஃபோனை கையில் பிடித்தபடி அமிர்தா அசையாது இருக்க, “அண்ணி பேசுங்க.. நான் வெளியே இருக்கேன்” என மென் புன்னகையுடன் எழுந்து வெளியே சென்றாள் ஸ்வாதி..
அஜய்யோ தங்கையை யோசனையுடன் பார்த்தபடி வெளியே செல்ல, தன் காதில் ஃபோனை வைத்தவள், “ஹ… ஹ.. லோ” என தட்டுத் தடுமாறி சொல்ல,
“இப்போ நீ ஓகே தானே” என கேட்டான் ஆத்மன்.
“ம்ம்” என குரல் இறங்கி அவள் சொல்ல,
“வீட்ல எதுவும் தெரிய வேண்டாம்… சரியா சாப்பிடாம மயங்கி விழுந்துட்டன்னு சொல்லிடு” என்றவனோ,
“அன்ட் சர்வா இஸ் ஒகே நௌ…” என்று சொல்லிவிட்டு அவன் கால்லை அணைத்து விட, அமிர்தாவிற்கு தான் ஒரு மாதிரி இருந்தது…
‘சர்வா க்கு என்ன ஆச்சு’ என மெல்லிய பதற்றம் வர அவனின் எண்ணிற்கு கால் செய்தாள்…
“அம்மு” என அழுகையுடன் எடுத்தவன் முதலில் நன்றாக அழுது தீர்த்தான்…
“சாரி அம்மு… சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் நினைச்சே பாக்கல… ஆத்மன் சார் நல்லவேளை உன்னை காப்பாத்திட்டாரு” என்றவன் ஜீவன் மற்றும் வெங்கட் எவ்வளவு கெட்டவர்கள் என்பதையும், அமிர்தா வுக்கு வந்த வாய்ப்புகளை ஏன் ஆத்மன் தத்திக் கழித்தான் என்பதற்கான நியாயமான காரணங்களையும் அவன் எடுத்துரைக்க அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள் அமிர்தா.
***
அடுத்த நாள் காலை விக்னேஷிற்கும் சோனியாவிற்கும் திருமணம்…
இதை நினைக்கும் போதெல்லாம் சோனியாவிற்கு நெஞ்சே அடைத்தது…
இத்தனை நாட்கள் எப்படியோ அவளுக்கு கொடுக்கப்பட்ட வேலையை, தன் கடமைகளை சரியாக செய்து விட்டாள்…
ஆனால் நாளை அதை அவள் எப்படி எதிர்க்கொள்வாள்… அதை எதிர்க்கொள்ளும் தைரியமும், மன திட்டமும் அவளுக்கு சத்தியமாக இல்லை…
அவ்வப்போது அவளின் நலனை அவளின் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் கால் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்…
அவர்களிடம் நான் நன்றாக இருக்கிறேன், திடமாக இருக்கிறேன் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவள் சொன்னாலும் அவளின் ஆழ்மனதிற்குத் தெரியும் அவளின் நிலை என்ன என்பது…
கண்களை அழுத்தித் துடைத்தவள் நேராக சென்றது பிரனவ்விடம் அறைக்குத் தான்…
“பிரனவ்.. எனக்கு உடம்பு முடியல…என்னமோ தெரில சோர்வா இருக்கு… இன்னும் ரெண்டு நாள் வேலை இருக்கு… ஆனா என்னால அத் பண்ண முடியும்னு தோணல” என்றாள் முடிவாக.
“உடம்பு முடியலயா இல்ல மனசு முடியலயா சோனியா” என பாயின்ட்டாக கேட்டான் பிரனவ்.
அவனுக்கு சோனியா மற்றும் விக்னேஷை பற்றி எல்லாமே தெரியும்…
“பிரனவ்” என சோனியா சோர்வாக இழுக்க,
“நீ கிளம்புறது தான் சரி… ஆனா அடுத்த ஈவண்ட்க்கு வருவ தானே” என்று அவன் சந்தேகமாக கேட்க,
“கண்டிப்பா வருவேன்… அதுக்குள்ள மைன்ட்டை சரி பண்ணிடுவேன்” என்றாள் அவனுக்கு நம்பிக்கை கொடுக்கும் குரலில்…
உள்ளே உடைந்து இருந்தாலும் வெளியே முடிந்த வரை தன்னை இரும்பு போல காட்டிக் கொள்கிறாள் பெண்ணவள்….
***
ஆத்மன் சொன்னது போல வீட்டினரிடம் பொய் சொன்ன அமிர்தாவிடம் அஜய் இரண்டு மூன்று தடவை பேசிவிட்டான்.
“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அண்ணா… ப்ளிஸ் நம்புங்க” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆத்மனின் வீட்டின் லேன்ட்லைன் அடித்தது…
எடுத்தது கவிதா தான்…
எடுத்தவரோ மறுப்பக்கம் சொன்ன விஷயத்தை கேட்டு, “ஆத்மா” என கத்தியபடி நெஞ்சில் கைவைக்க, அண்ணனிடம் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த அமிர்தாவோ அவளின் மாமியாரின் அலறலைக் கேட்டு உறைநிலையில் நின்றாள்.
