வீட்டிற்கு வரும் வரை வம்சி ராதையிடம் எதுவும் பேசவில்லை. அவன் மனதில் இருப்பதெல்லாம் ராதை மனதில் தான் இல்லை என்பது மட்டும் தான். ஆனால் ராதைக்கே தெரியாமல் வம்சி அவளுள் குடி கொண்டான் என்பதை ராதை அறியவில்லை.
வீட்டிற்கு வந்த பின் அங்கு வம்சியின் வருகைக்காக காத்திருந்தாள் ஷிவானி. அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தன் அறைக்குச் சென்று விட்டான் வம்சி.
இந்தமுறை வம்சியை ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்த ஷிவானியை முறைத்தாள் ராதை. தன் கணவனை இன்னொரு பெண் காதல் பார்வையோடு பார்ப்பது ராதைக்குப் பிடிக்கவில்லை.
அவளும் பின்னாடியே வம்சியின் அறைக்குச் சென்றாள். அதற்குள் வம்சி குளித்துவிட்டு தன்னுடைய டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து விட்டு தன்னுடைய தலைக்கு ஜெல் தடவிக் கொண்டிருந்தான். ராதை அங்கு வந்த பின்னும் வம்சி அவளைக் கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு அவமானமாகிப் போயிற்று.
வம்சியின் பார்வை தன் மீது விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் ராதை குளித்துவிட்டு அழகிய சிவப்பு வண்ண சீனா சில்க் அணிந்தாள். அவள் அணிந்து வெளியே வந்த போது அங்கு அவளின் கணவன் இல்லை. இன்று ஏனோ ராதைக்கு வம்சி தன்னுடன் ஆடிய பின்னர் எண்ணங்கள் அவனையே சூழ்ந்துக் கொண்டிருந்தது.
தான் பிறந்ததில் இருந்தே தன் முக அழகை கண்டுக் கொள்ளாத ராதை, இன்று கண்ணாடி முன் நின்று அழகாக தலை வாரி, கண் மை இட்டு, கல் பொட்டை அணிந்து உதட்டில் லேசாக சாயம் பூசினாள். அவன் கண்ணில் தான் பட வேண்டும் என்று கீழேச் சென்றாள்.
ஆனால் அங்கு அவள் கண்ட காட்சி, வம்சியின் கையைப் பிடித்துக்கொண்டு ஷிவானி அழுதுக் கொண்டிருந்தாள். அவர்களைச் சுற்றி அனைத்து பெரியவர்களும் இருந்தனர்.
ஷிவானியின் கையை மெல்ல உதறிய வம்சி, “ஷிவானி இந்த வம்சிக்கு தப்பு செஞ்சவங்களுக்குத் தண்டனை கொடுத்துத் தான் பழக்கம். நமக்கு கல்யாணம் முடிவானதும் நீ என்ன சொன்ன… நீங்க என்னை காதலிக்கலைனாலும் பரவாயில்லை, ஆனா கணவனா இருந்தால் போதும்னு சொன்ன.”
“ஒரு கணவன் மனைவி வாழ்க்கைல காதல் இல்லாம வாழ்றது எல்லாம் ஒரு வாழ்க்கையானு சொல்லு? கண்டிப்பா இல்லை. ஆனாலும் நான் இந்த வீட்டு பெரியங்களுக்காக ஒத்துக்குட்டேன். அதுக்கு அப்புறம் தான் என் வாழ்க்கையில் நான் ராதையை முதன் முதலா பார்த்தேன்…”
“அவளை பார்த்த உடனே என் மனசுல புகுந்துட்டாள். அவளை எப்படியாவது கல்யாணம் பண்ணனும்னு என் மனசு ஆசைப் பட்டுச்சு. அவளை நான் கல்யாணம் செஞ்ச அப்புறமும் நான் வேணும்னு தான் எனக்காக ஷிவானி காத்திருப்பாள்னு சொன்னேன்… அதுக்கும் கூட நீ நான் இன்னொருத்தியோட கணவன் ஆன அப்புறமும் என்னை அடைய நினைச்ச!”
“இதெல்லாம் நல்ல குடும்பத்துல வளர்ந்த பொண்ணுங்க செய்யுற காரியங்களா சொல்லு? இப்போ கூட உன்கிட்ட நான் இதெல்லாம் சொல்றதுக்குக் காரணம் இனியாவது திருந்தி ஒரு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணுனு சொல்றதுக்காக தான்” என்று முடித்தான்.
“ஓ அதனால தான் நீ கோதைக்கும் தண்டனை கொடுத்தியா வேதந்த்?” என்று இம்முறை கடுப்பில் கேட்டார் லட்சுமி.
“ஆமா, கோதை ஒரு முட்டாள், சுயநலவாதி. தன்னோட சுயநலத்துக்காக யாரை வேணும்னாலும் பகடைக்காய் ஆக்குவா. அவளுக்கு நான் கொடுத்த தண்டனைக்குக் காரணமே அவளை மதிக்காத ஒருத்தனை வலுக்கட்டாயம லவ் பண்ணி பைத்தியகாரி மாதிரி சுத்திக்கிட்டுருந்தா, காதல்ன்றது வலுக்கட்டாயமா வரக் கூடாது. அது அவங்களுக்குள்ளயே வரணும், எனக்கு ராதை மேல வந்தது போல்” என்றான்.
அங்கே இருந்த ராதையின் கையைப் பிடித்து வம்சியின் முன் நிறுத்திய அவனுடைய தாய், “இவளுக்குத் தான் உன் மேல காதல் இல்லையே, அப்போ ஏன் நீயும் அவளைக் கட்டாயப்படுத்துற?” என்று ஊசி குத்துவது போல் கேட்டார். லட்சுமிக்கு ராதையை இந்த வீட்டில் இருந்து எப்படியாவது துரத்த வேண்டும்.
“ராதை என்னை விரும்புறா… அவ மனசுல நான் தான் இருக்கேன்” என்று அவளின் கண்களைப் பார்த்து அழுத்தமாகச் சொன்னான் வம்சி.
அந்த நொடி ராதைக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. தன் மேல் அவன் வைத்திருக்கும் காதல் எத்தகைய ஆழமானது என்று அவள் தன் மனதில் சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கும் போதே, “எப்படி ராதை உன்னை காதலிப்பானு இவ்வளவு நம்பிக்கையா இருக்க வம்சி! பணத்திமிரா…?” என்றபடி உள்ளே வந்தான் பிரகாஷ் சிவமாறன். அவனோடு பின்னே வந்தாள் வனிதா. இவர்களைப் பார்த்த ராதையோ அதிர்ச்சி அடைந்தாள்.
“ராதை உன் பாட்டி இறந்துட்டாங்க… அதைச் சொல்ல நான் உன் ஹஸ்பண்ட் கிட்ட கேட்ட போது என்னைத் துரத்தி விட்டுட்டார்” என்று தேம்பித் தேம்பி அழுதாள் வனிதா.
இதைக் கேட்ட ராதையின் நெஞ்சம் துடிப்பதையே நிறுத்தியது போல் தோன்றியது. வம்சியின் முகமோ இறுகியது.
வனிதாவை உலுக்கிய ராதை, “என்ன டி சொல்ற? என் பாட்டி…” என்று கதறி அழுதாள்.
பிரகாஷ், “உன் பாட்டி இறந்துட்டாங்க ராதை, இவங்க எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும். இந்த வம்சி உன்னை வலுக்கட்டாயமா இங்கே வைச்சு, உன்கிட்ட உன் பாட்டி இறந்ததை கூட சொல்லாம மறைச்சுருக்கான். எவ்வளவு மோசமானவன் இவன்” என்று அழுத்தமாகக் கூறினான்.
தன் கை முஷ்டியை இறுக்கிய வம்சி வேண்டும் என்றே அமைதியானான். வம்சிக்குத் தெரியும் பாட்டி இறந்ததற்குக் காரணம் பிரகாஷ் விஜயகுமாரை நடு ரோட்டில் நிறுத்தியதற்காக என்று. ஆனால் இதை அவன் ராதைக்கு நிரூபித்து காதலைப் பெற வேண்டும் என்று நினைக்கவில்லை.
உண்மை என்று ஒன்று இருக்கிறது அதை ராதை உணர்ந்தாலே அவளின் நலனுக்காகத்தான் தான் மறைத்தேன் என்று புரிந்துக் கொள்வாள் என்று நினைத்தான்.
அவன் முன் வந்த ராதை கோபத்தில் அவனின் சட்டையைப் பிடித்து, “ஏன் இப்படிப் பண்ணீங்க? எனக்குனு இந்த உலகத்துல இருந்த என் பாட்டி… நான் காணாம போனேன்னு தெரிஞ்ச கவலையில என்னை விட்டுட்டு நிரந்தரமா போயிட்டாங்க…” என்று அவள் கதறி கதறி அழுதாள்.
“நீ நினைக்குற மாதிரி என் பையன்…” என்று லட்சுமி வாயெடுக்கும் முன், “அம்மா நிறுத்துங்க… நான் யாருக்கும் எதுவும் நிரூபிக்கணும்னு எனக்கு எந்த அவசியம் இல்லை. என்கிட்ட தப்பு இல்லைனு எனக்குத் தெரியும்.”
“உன் பாட்டி இறந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சால் நீ துடிச்சுப்போயிடுவேனு தான் டி நான் உன்கிட்ட இருந்து மறைச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு உன் மனநிலை சரியானதும் சொல்லலாம்னு நினைச்சேன்.”
“ஒரு விஷயத்தை ஆராயாம என்கிட்ட வந்து நியாயம் கேட்குறதை நிறுத்து” என்று இம்முறை கடுப்பான வம்சி தன் சட்டை மேல் இருந்த ராதையின் கையை உதறி விட்டான்.
“என் பாட்டி இந்த உலகத்துல இல்லை, எல்லாத்துக்கும் காரணம் நீங்க மட்டும் தான்… என் வாழ்க்கையில் நீங்க எப்போ வந்தீங்களோ அப்போவே என் நிம்மதி போச்சு. எல்லாத்துக்கும் தண்டனை கொடுக்குற உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பா? எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கல. என் பாட்டியைக் கொன்னவன் கூட என்னால வாழ முடியாது” என்று கதறி அழுதவள் தன் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி எறிந்தாள்.
வம்சியின் முகம் உஷ்ணமாய் இறுகியது. தன்னைப் புரிந்துக் கொள்ளாதவளிடம் தன்னை நிரூபிக்க வம்சிக்கு பிடிக்கவில்லை.
“இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…” என்று அவள் ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, “உங்க குடும்பத்துல நீ மட்டும் தான் அறிவாளினு நினைச்சேன். ஆனால் நீ ஒரு அடி முட்டாள்” என்று மேலே இருக்கும் தன் அறைக்கு விரைந்துச் சென்று விட்டான் வம்சி.
“ராதைம்மா, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க, உன் பாட்டி இறந்த துக்கு காரணம் இதோ நிக்குறானே…” என்று காந்திமதி சொல்ல வரும் போது,
“பாட்டி… யாரும் இனி அவக்கிட்ட ஒரு வார்த்தை பேசக் கூடாது. நான் கட்டுன தாலியை நான் உயிரோடு இருக்குற போதே தூக்கி எறிஞ்சவளுக்கு நீங்க எதையும் சொல்லி நிரூபிக்க வேண்டாம். இனி இவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று மேலே இருந்து கத்தினான் வம்சி.
“ராதை நீ வா நம்ம போலாம்” என்று அவளைத் தன்னோடு அழைத்துக் கொண்டனர் வனிதா மற்றும் பிரகாஷ்.
வனிதாவிற்கு பாட்டி இறந்தது மட்டுமே ரமாவின் மூலமாகத் தெரியும். அதற்குக் காரணம் பிரகாஷ் தான் என்று தெரியாது. அதுவும் இல்லாமல் கோதையின் குடும்பம் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்கிற விஷயத்தை ரமா வனிதாவிடம் கூறவில்லை.
அன்று காலை வம்சியிடம் பேசியவள் அவன் பதிலில் எரிச்சல் கொண்டு உடனே பிரகாஷிற்கு கால் செய்து விஷயத்தைக் கூறினாள். பிரகாஷ் தன் பண பலத்தால் வம்சியின் வீட்டு முகவரியைக் கண்டு அறிந்து வந்தவன் வனிதாவிடம், “நான் ராதையை உண்மையாகக் காதலிக்குறேன் வனிதா. அவளுக்கும் என்னை பிடிக்கும் அதனால தான் அவளோட பிறந்தநாள் அன்னிக்கு நான் வாங்கிக் கொடுத்த சேலையை போட்டாள்” என்றான்.
வனிதாவிற்கு ஏனோ ராதை சந்தோஷமாக இருக்க வேண்டும் அது பிரகாஷுடன் இருந்தால் மட்டுமே நடக்கும் என்று நினைத்து, அவளும் இதற்கு துணை போனாள்.
வனிதாவும் ராதையும் பிரகாஷின் காரில் பின்னாடி ஏறிய பின், பிரகாஷ் காரை எடுத்தான்.
***
மாலை மணி நான்கை நெருங்கும் போது கோதை தன்னுடைய பொருள்களை எடுத்து பேக் செய்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் வனிதாவின் எண்ணில் இருந்து இவளுக்கு கால் வந்தது.
வனிதாவுக்கு தன்னைப் பிடிக்காது அவள் ஏன் தனக்கு கால் செய்கிறாள் என்று யோசித்தவள் அந்த காலை எடுத்து, “சொல்லு வனிதா” என்றாள்.
மறுமுனையில், “அக்கா நான் ராதை பேசுறேன், பாட்டி ஏன் கா நம்மளை விட்டு போயிட்டாங்க…” என்று அலறிக் கொண்டிருந்தவளின் குரலைக் கேட்டு கோதையும் அழத் தொடங்கினாள்.
“அம்மா ராதை பேசுறா…” என்று தன் அன்னையைக் கத்தி அழைத்தவள் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டாள்.
ராதையால் பேசவே முடியவில்லை. அவள் தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருந்ததைப் பார்த்து ஃபோனை வாங்கிய வனிதா, “கோதைக்கா, நாங்கள் இப்போ கோயம்புத்தூர் தான் வந்துட்டு இருக்கோம்” என்றாள்.
“வனிதா நாங்க இப்போ அந்த வீட்டில் இல்லை. நான் உன் வாட்ஸ்அப்க்கு அட்ரஸ் அனுப்புறேன்” என்று காலை கட் செய்தவள், உடனடியாக தாங்கள் இருக்கும் வீட்டின் முகவரியை அனுப்பினாள்.
ஹரீஷின் அலுவலக நம்பருக்கு கால் செய்த வனிதா, “சார் அது வந்து நான் இன்னிக்கு வரல. என்னுடைய தங்கச்சி வீட்டுக்கு வர்றா, வீட்டுல மிகவும் முக்கியமான விஷயம் சார் என்னை மன்னிச்சுடுங்க” என்றாள்.
இதைக் கேட்ட ஹரிஷ் மிகவும் கடுப்பானான் அதை காட்டிக் கொள்ளாமல், அவளிடம் பதில் கூறாமலே கால்லை கட் செய்து விட்டான்.
***
