அன்று கோதை கொடைக்கானல் செல்லவில்லை.அதற்குப் பின்னர் இரண்டு நாட்கள் மைதிலிக்கு உடம்பு முடியாமல் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் அவள் வீட்டில் தான் இருந்தாள்.
கோதையை வெகு நேரமாக அமைதியாக கவனித்துக் கொண்டுருந்த ராதையோ, “அக்கா நில்லுங்க, நானும் உங்களை வந்ததுல இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன். நீங்க என்கிட்ட ஏன் ஒதுங்கி போறீங்க?” என்று நேரடியாக கோதையின் வழியை மறித்துக் கேட்டாள்.
“என்னை மன்னிச்சிரு ராதை, என்னால தான் உன்னோட வாழ்க்கை சீரழிஞ்சுது. பாட்டி இறந்துட்டாங்க… இந்த தப்புக்கு எல்லாம் நான் என்ன தண்டனை அனுபவிக்க போறேன்னு கூட தெரியல? படிப்பும் ஒழுங்கா படிக்கல. நான் எல்லாம் இந்த உலகத்துல வாழவே தகுதி இல்லாதவ” என்று குமுறினாள்.
“அக்கா நடந்ததை மறந்துருங்க. நான் ஒரு விஷயத்தைச் சொல்லப் போறேன். அதை எப்படி நீங்க தாங்குவீங்கனு தான் தெரியலை” என்று இழுத்த ராதை, “நீங்க இவ்வளவு வருஷமா உருகி காதலிச்ச பிரகாஷ், இப்போ வனிதாவுக்கு சொந்தம் ஆகிட்டார். ரெண்டு பேரும் நேத்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” என்று சொல்லும் போது கோதை முகத்தில் எந்த ஒரு உணர்வும் பிரதிபலிக்கவில்லை.
“உனக்கு வருத்தமா இல்லையா ராதை?” என்று கேட்ட கோதையை அதிர்ச்சியாகப் பார்த்த ராதை, “என்னக்கா நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேட்குறீங்க?” என்றாள் தங்கை.
“இல்ல ராதை, பிரகாஷ்க்கும் உனக்கும் திருமணம் நிச்சயம் ஆகி அது வம்சியால நின்னு போச்சு. அதனால கேட்டேன்” என்று சுரத்தே இல்லாமல் பேசினாள்.
“நான் பிரகாஷை நேசிச்சது இல்லைக்கா. அவரோட தான் கட்டாயமா கல்யாணம்னு முடிவானதும், எல்லாப் பொண்ணுங்களைப் போல நானும் அவர் மேல் ஓர் ஆர்வம் காட்டுனேன். அவ்வளவு தான்” என்று பெருமூச்சுவிட்டு எழுந்தவள், “அக்கா உண்மையா சொல்லுங்க. பிரகாஷை நீங்க இன்னும் விரும்பலைனு” என்று கேட்டாள் ராதை.
“நான் காதலிச்ச பிரகாஷ் செத்துட்டான். இன்னொருத்தியின் புருஷன் மேல் ஆசை பட நான் ஈனப் பிறவி இல்லை ராதை. நீ என்னை இன்னும் நம்பல” என்றவளின் கண்களோ கலங்கியது.
“ஐயோ சாரிக்கா, உங்க மனசு திடமா இருக்கானு தெரிஞ்சுக்க தான் அப்படி கேட்டேன். எனக்கு இங்க கோயம்புத்தூர்லயே நல்ல ஐடி கம்பெனில வேலை கிடைச்சிருச்சு. மாசம் அறுபது ஆயிரம் ரூபாய் சம்பளம். நம்ம பழைய நிலைக்கு வர முடியலைனாலும் நம்மோட இந்த நிலை மாறிடும் க்கா” என்கிற நம்பிக்கையோடு பேசிய தங்கையைப் பாவமாகப் பார்த்த கோதை, “அப்போ உன் வாழ்க்கை?” என்று கேள்வியாய் பார்த்தாள்.
“என் வாழ்க்கையா… அதான் நீங்க எல்லாருமே இருக்கீங்களே, வேற என்ன வேணும் எனக்கு?” என்று ராதை முடிக்கும் போதே அவளின் குரல் கரகரத்தது.
“க்ருஷ் என் நம்பரையே பிளாக் பண்ணிட்டான் ராதை. என்னால உனக்கு உதவி செய்ய முடியாத நிலையில தான் நான் இருக்கேன்” என்று உண்மையாக வருந்தினாள்.
“எதுக்குக்கா உங்க க்ருஷ் என்னை காதலிக்குறார்னு அவங்க குடும்பம் முன்னாடியே சொன்னாங்க? நான் உண்மையை ஆராயாம தாலியை தூக்கி போட்டு வந்தது தப்பு தான். ஆனா உங்கள் கிருஷ் அதுக்குத் தகுதியானவர் தான். என் விருப்பம் இல்லாம எனக்கு தாலி கட்டி என்னோட சொந்த ஊரை விட்டே ஓட வைச்சாரு… நம்ம பாட்டி சாவைக் கூட பார்க்க முடியாத பாவி ஆகிட்டேன்.”
“வம்சி என்னை காதலிக்குறார்னா நான் அவர் காலடியில விழணுமா என்ன? எனக்கு அவர் மேல காதல் வர வேணாமா? அவர் மேல எனக்கு துளி அளவு கூட காதல் இல்லை” என்று கூறும் போது மனதில் ஒரு இனம் புரியாத வலி, வேதனை தனக்கு உண்டாவதை உணர்ந்தாள் ராதை.
“போதும் க்கா, இனி அவரைப் பத்தின பேச்சு வேண்டாம்… நீங்க வேலைக்குப் போக வேண்டாம் க்கா. அதான் நான் போறேன் இல்லையா, நீங்க வீட்டைப் பார்த்துக்கோங்க. பெரியப்பா, பெரியம்மா உடைஞ்சு போயிருக்காங்க. அவங்களுக்கு ஒரு துணை வேணும்” என்றாள் ராதை.
“ராதை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா…?” என்று இடைவெளி விட்டு தொடர்ந்து கோதை, “நான் எம்பிஏ படிக்கணும்னு ஆசைப்படுறேன். கண்டிப்பாக நல்லா படிப்பேன். அதுக்கு செலவு மட்டும் நீ கடனா பண்ணு, அப்புறம் நான் வேலைக்குப் போனதும் அதை உன்கிட்ட கொடுத்துடுறேன்” என்று கெஞ்சுதலாகக் கேட்ட அக்காவை சந்தோஷமாகப் பார்த்தாள் ராதை.
“நீங்க புது கோதை அக்கா ஆயிட்டீங்க க்கா… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு என்னக்கா கடன், இது என்னோட கடமை” என்றாள் தங்கை சந்தோஷமாக.
“இல்லம்மா எனக்கு கடன் தான் வேணும். இது என் மேல சத்தியம்” என்றவள், “நீயும் தான் புது ராதை ஆயிட்ட” என்று வியந்தாள்.
அவளை கேள்வியாய் பார்த்தவளை, “ஆமா ராதை, நீ இப்போ ரொம்ப தைரியசாலியா மாறிட்ட. பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் கோதை மகிழ்வாக.
இதைக் கேட்டதும் ராதையின் மன ஓட்டத்தில் வம்சி ஓடிக்கொண்டிருந்தான். அன்று அவளிடம் அவன் தைரியமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது நினைவில் வந்து போனது.
“என்ன அக்கா, தங்கச்சி ரெண்டு பேருக்கும் சாப்பிடணும்னு தோணலையா? வாங்க போலாம்” என்று அழைத்துச் சென்றார் விஜயகுமார்.
கோதை படிக்க ஆசைப்படும் விஷயத்தைக் கேட்டு முதலில் மறுத்தார் விஜயகுமார்.ஏனெனில் இப்போது ராதை மட்டும் தான் சம்பாதிக்கப் போகிறாள் அல்லவா.அவளுக்கு மேலும் சுமை தரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் விஜயகுமார்.
ஆனால் ராதையோ, கோதை படிக்கட்டும், தான் எப்படியோ வேலைக்குத் தான் போகப் போகிறோம் அதனால் விஜயகுமாரிடம் பேசி கோதையை படிக்க வைக்க ஒருவாறு சம்மதத்தை வாங்கினாள்.
கொடைக்கானல் வரவில்லை என்று கூறிய பின்னர் கோதையோ பார்லரிற்குச் செல்லவில்லை. அதனால் தன்னுடன் பார்லரில் வேலைப் பார்த்த ரீதாவிற்குக் கால் செய்து தான் இனி வேலைக்கு வர மாட்டேன் என்று கூறி விட்டு கால்லை அணைத்து விட்டாள்.
இப்படியே இரண்டு வாரங்கள் ஓடியது.
அப்போது தான் சேதுராமனிடம் இருந்து மைதிலிக்கு அழைப்பு வந்தது. “மைதிலிம்மா, யசோதாக்குக் கல்யாணம் முடிவாயிருக்கு. வர வெள்ளிக்கிழமை நிச்சயம், கண்டிப்பா குடும்பத்தோடு வாம்மா… ராதையும், வம்சியும் சேரணும்னு தான் நாங்க நினைக்குறோம்” என்றுவிட்டு லட்சுமியிடம் மொபைலைக் கொடுத்தார்.
லட்சுமி மைதிலியிடம் பெரிய ஒட்டுதல் இல்லாமல் பேசி வைத்துவிட, அவர் முன்னாடி போல் நெருக்கமாக பேசாததை உணர்ந்த மைதிலி, தன் அண்ணனுக்காக நன்றாகப் பேசினார். தன் கணவர் பக்கத்தில் இருப்பதால் லட்சுமியால் வேறு எதுவும் பேச முடியவில்லை என்று கடமைக்கே பேசியவர் அழைப்பை அணைத்தார்.
“யசோதாக்கு இந்த வெள்ளி நிச்சயமாம், குடும்பத்தோடு கூப்பிட்டாங்க. உங்கக்கிட்ட பேசக் கேட்டாங்க, நீங்க வெளியே போயிருந்தீங்க. இப்போ கால் பண்ண சொல்லவா?” என்று மைதிலி கேட்ட போது விஜயகுமாருக்கு முகமெல்லாம் சிவந்தது.
கோதை மற்றும் ராதை துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாலும், மைதிலி சொன்னதைக் கேட்டு ராதையின் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது.
“என் பொண்ணு ராதையை இந்த நிலைமை ஆக்கிட்டு, அவங்க வீட்டுல விசேஷம், நீயும் அதுக்கு போகத் துடிக்குற? கொஞ்சமாவது இவளைப் பத்தி யோசிச்சு பாத்தியா? இந்த வீட்டுல இருந்து இனி யாரும் வம்சியோட வீட்டுக்கும் எந்தவொரு விசேஷத்துக்கும் போகக் கூடாது.”
“ஒருவகையில அந்த வம்சியால தான் நமக்கு இந்த நிலைமை. பேசியபடியே பிரகாஷ்க்கும் ராதைக்கும் கல்யாணம் நடந்துருந்தால், இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. அதுமட்டுமில்லாம நம்ம வீட்டை வேற விலைக்கு வாங்கியிருக்கான்… அவனுக்கு எவ்வளவு திமிர்” என்று சொல்லும் போது ராதைக்கு அதிர்ச்சி கலந்த கோபம் வந்தது.
‘பெரியப்பா சொல்றது போல ஒருவேளை வம்சியால தான் இவ்வளவு பிரச்சனையா?’ என்று ஒரு மனம் யோசிக்க, ‘வம்சிக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை’ என்று இன்னொரு மனம் மன்றாடியது. அதைவிட பேரதிர்ச்சியாக இருந்தது வம்சி அவர்களின் வீட்டை விலை கொடுத்து வாங்கியது. ‘ஏன்? எதற்கு? எதனால்? என்னவாக இருக்கும்?’ என்று ராதையின் மண்டைக்குள் குடைந்தது.
பிரணவ் மற்றும் யசோதாவின் நிச்சயம் நல்லபடியாக முடிந்தது. ராதை வரமாட்டாள் என்று வம்சிக்குத் தெரியும். ஆனாலும் அவள் மேல் ஒரு தீராக் கோபம். உறவினர்கள் சென்ற பின் லட்சுமி தன் வேலையை ஆரம்பித்தார்.
“உங்க தங்கச்சியும் அவளோட குடும்பத்தை நம்ம மதிச்சு கூப்பிட்டு இருக்கோம். ஆனா அவங்க எப்படி வராம நம்மளை அவமானம் படுத்தியிருக்காங்க பாருங்க” என்று அவர் சொல்லும் போதே இதில் பிடித்தம் இல்லாததைக் காட்ட வம்சி சோஃபாவை விட்டு வேகமாக எழுந்து உள்ளேச் சென்றான்.
ராதை அவனின் வாழ்க்கையில் வந்தபின் தன் அம்மாவிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். தன் அம்மா தன்னுடைய
காதலுக்கு எதிர்ப்பாக இருப்பதால், அவரிடம் பேசுவதை வெறுத்தவன், இப்போது ராதை சென்ற பின்னரும் கூட பேசுவதில்லை.
***
