அத்தியாயம் 46

ராதை சென்றதையே வெறித்துப் பார்த்த அனிதா, “ராதை மனசுல நீ இருக்க வம்சி” என்று அவனைப் பார்த்து அழுத்தமாகக் கூறினாள். 

 

“ம்ம் இல்ல… அவள் மனசுல நான் இருந்திருந்தா என்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போயிருக்க மாட்டாள்” என்று சலிப்பாக எழுந்தவன், “நான் ரூமுக்குப் போறேன்” என்றபடி சென்று விட்டான்.

 

அனிதா அறைக்கு வரும்போது ராதை உறங்கி விட்டிருந்தாள். அன்று இரவு சாப்பாட்டிற்குக் கூட அவள் எழுந்திருக்கவில்லை. அடுத்த நாள் காலை விடிந்தவுடன் தங்களுடைய கான்பரன்ஸிற்கு தயாராகிக் கொண்டிருந்தவளிடம், “ராதை ரெடியா? கீழே வம்சி காத்துக்குட்டு இருக்கார், நம்ம எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்” என்றவளிடம், “இல்லை மேடம், நான் தனி டேபிள்ல சாப்பிடுறேன்” என்றாள் அழுத்தமாக. 

 

“அப்படி இருந்தா டேபிள் மேனர்ஸா இருக்காது ராதை, நீ எங்க டேபிள்ல தான் சாப்பிடணும்” என்று இவளின் பதிலை எதிர்பார்க்காமல் அனிதா குளிக்கச் சென்றுவிட்டாள். 

 

அவள் சென்ற பின்னர் தன் தலையில் கை வைத்து அமர்ந்த ராதையோ, ‘கடவுளே… எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை? இந்த ஹோட்டலோட முதலாளியும் அவர் தான், இந்த கான்பரன்ஸோட ஸ்பான்சரும் அவர் தான், என்னை ஏன் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டீங்க…?’

 

‘என்னை காதலிச்சேன்னு சொல்லிட்டு இப்போ இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செய்யப் போறாரு. இவருக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா?’ என்று நினைத்து கொதித்தவள் எப்படியாவது இந்த ஐந்து நாட்களைக் கடந்துவிட்டால் போதும் என்கிற மனநிலைக்கு வந்திருந்தாள்.

 

அனிதா வந்தவுடன் ராதையை அழைத்துக் கொண்டு வம்சி அமர்ந்திருந்த ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரன்டிற்குச் சென்றாள். நேற்று டி சர்ட் அணிந்திருந்தவன் இன்று கோட் சூட் அணிந்து கான்பரன்ஸில் கம்பீரமாக அமர தயாராகி வந்திருந்தான். அனிதாவும் ஒரு ஃபார்மல் சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தாள். ராதை எப்போதும் போல ஒரு சல்வார் அணிந்து மிகுந்த ஒப்பனை இல்லாமலே அழகாக இருந்தாள். 

 

“ராதை உன்னைப் பார்த்தா கான்பரன்ஸ்க்கு வந்த மாதிரி தெரியல. ஏதோ பஜாருக்கு வந்த மாதிரி வந்திருக்க, என்னால இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது. சோ உன் டிரெஸ்ஸை மாத்திட்டு வா” என்று உண்மையாகவே கோபப்பட்டாள் அனிதா. 

 

ராதைக்கு குர்தி மற்றும் ஜீன்ஸ் அணிய விருப்பமில்லை. அதுவும் இப்போது வம்சியின் முன் அவமானப்படுவது மிகவும் எரிச்சலாக இருந்தது. அவனின் முன்னால் தான் அவமானம் படக்கூடாது என்பதற்காக தன் அறைக்குச் சென்று, அந்த மஞ்சள் நிற குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்து தன் பின்னிய தலையை விரித்துவிட்டு அந்த உடைக்கு தகுந்தவாறு காதில் பெரிய வளையம் அணிந்து வந்தாள்.

 

“என்னை ஏன் வம்சி முறைக்குற? உண்மையா ராதையோட டிரெஸ் எனக்கு பிடிக்கல. கொஞ்சமாவது மார்டனா இருந்தா தான் நல்லா இருக்கும்” என்று அவள் கூறியதில் தப்பு இல்லை என்றாள். 

 

“ஆனா ராதைக்கு குர்தி, ஜீன் எல்லாம் போடப் பிடிக்காது. அவ யாருக்காகவும் தன்னை மாத்திக்க மாட்டாள்” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே ராதை குர்தி மற்றும் ஜீன்ஸ் அணிந்து வந்து கொண்டிருந்தாள். 

 

வம்சியின் முன் தான் நிமிர்வாக இருக்க வேண்டும் என்றே ராதை இவ்வாறு செய்தாள். ஆனால் வம்சியின் முகம் இதைக் கண்டவுடன் சுருங்கியது. 

 

‘இவ ஏன் இந்த மாதிரி செய்றா’ என்று கடுப்பான வம்சி அவளின் எண்ணங்களை அறவே தவிர்த்து அனிதாவிடம் விடைப்பெற்று கான்பரன்ஸில் சந்திக்கலாம் என்றுவிட்டு ராதையின் பக்கம் திரும்பாமலே சென்றுவிட்டான்.

 

ராதைக்கு மூக்கு உடைந்தது போல் ஆனது. வம்சியின் கவனம் தன் மேல் சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்து அவளுக்கு எரிச்சலாக இருந்தது. இப்போது எப்படியாவது வம்சியின் கவனம் தன் மேல் விழ வேண்டும் என்று அவளுக்குள் முடிவு எடுத்தவள், “மேடம், இந்த டிரெஸ் ஓகே தானே போலாமா?” என்று கேட்டுவிட்டு கிளம்பினாள். 

 

கோவா கடலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அந்த கான்பரன்ஸ் நடக்கும் குளிர்சாதன அறையின் மேடையில், கம்பீரமாக வம்சி இன்னும் இருவரோடு அமர்ந்திருந்தான். மொத்தம் இருபது கம்பெனிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தனர். மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கின்ற பிரசென்டேஷன் என்பதால், ஒரு நாளைக்கு நான்கு கம்பெனிகள் என்ற அளவில் ஐந்து நாட்களுக்கு இருபது கம்பெனிகளுக்கும் முடியுமாறு அமைத்திருந்தனர். அனிதாவுடைய கம்பெனி, ஐந்தாம் நாள் பதினெட்டாவது ஸ்லாட் கிடைத்திருந்ததால் மற்றவர்களின் பிரசென்டேஷனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

ராதை அணிந்திருந்த உடை அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், ‘வம்சி என்னை பாக்கணும், அது எப்படி என்னை உண்மையா காதலிச்சிட்டு அவனால இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்? இது நியாயமே இல்லை’ என்று அவள் ஆதங்கத்துடன் நினைக்கும் போதே, 

 

“எக்ஸ்க்யூஸ் மீ, ஐ அம் அபிஷேக் ஃப்ரம் பெங்களூர், நைஸ் டூ மீட் யூ” என்று கையைக் கொடுத்தால் ஒருவன். ராதையும் அவனுக்கு, “ஹாய்…” என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி விட்டாள்.

 

‘ம்ம் ரொம்பத்தான்’ என்று மனதில் நினைத்த அபிஷேக், “உங்க பெயர் என்ன?” என்று கேட்டான். 

 

ராதைக்கு இவனைக் கவனிக்கும் மனநிலை இல்லை. இருந்தாலும் ஒருவர் தன்னிடம் கேள்வி கேட்கும் போது முகத்தைக் கொடுக்காமல் பேசுவது அவளுக்குத் தவறு என்று தோன்றியது. அதனால், “என் பெயர் கோமகள் ராதை” என்று சிநேகமாகக் கூறினாள். 

 

ராதை மற்றும் அபிஷேக் பேசிக்கொண்டிருந்தது வம்சியின் கண்ணில் உறுத்திக்கொண்டே இருந்தது. இந்த கான்பரன்ஸ் உடைய ஸ்பான்சர் அவன் என்பதால் அவனின் பக்கத்தில் ஒரு மைக் இருந்தது. 

 

அதைக் கோபத்தில் எடுத்தவன், “இது ஒரு இந்தியன் லெவல் கான்பரன்ஸ் னு எல்லாருக்கும் தெரிஞ்சு தானே இங்க வந்திருக்கீங்க. அப்படி இருக்கும் போது காலேஜ்ல கடலை போடுற மாதிரி வந்து பேசிட்டு இருக்குறவங்களுக்கு இந்த இடத்துல என்ன வேலை…? ஏய் எல்லோ குர்தி… நீ தான் எழுந்திரு” என்று அனைவரும் முன்னும் அவமானம் படுத்திவிட்டான் வம்சி.

 

வம்சியின் இச்செயல் அனிதாவிற்கே அதிர்ச்சியாக இருந்தது. மலங்க மலங்க விழித்த ராதை, அதிர்ச்சியில் எழுந்து நின்றாள். அபிஷேக்கைத் தான் குறிக்கிறான் என்று உணர்ந்த அபிஷேக்கும் எழுந்தான்.

 

“யூ போத் கெட் அவுட்” என்று திமிராக அனைவரும் முன் மைக்கில் கத்திய வம்சியை முறைத்த ராதை, அங்கிருந்த அனைவரும் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதாக உணர்ந்தாள். 

 

‘என்னல்லாம் பேசுறான்? இவன் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணா, முதல் பொண்டாட்டி ஒழுக்கம் இல்லாதவளா ஆயிடுவாளா?’ என்று மனதில் குமுறியவள், மடமடவென வெளியேச் சென்று பீச்சின் பக்கத்தில் அமைந்த ரெஸ்டாரென்டில் அமர்ந்தாள். 

 

தன் மனது விம்மிக் கொண்டு இருப்பதை உணர்ந்தவளின் முன் அமர்ந்தான் அபிஷேக். ‘எல்லாம் இவனால தான்’ என்று கடுப்புடன் நினைத்த ராதையின் முன், “சாரி ராதை, என்னால் உங்களைத் தப்பா பேசிட்டார். ஆனால் எனக்குத் தெரிஞ்ச வரையில வம்சி சார் கூல் டைப் தான். அவர் ஏன் இப்படி நடந்துக்கிட்டார்னு தெரியல. சரி நீங்க கவலைப்படாதீங்க. எனக்கு நீங்க ஒரு தங்கச்சி மாதிரி என்னைத் தப்பா நினைக்காதீங்க” என்றான். 

 

அவன் அவ்வாறு கூறிய பின்னரே அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த ராதை, “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கயோ பாத்துருக்கேனே? நீங்க என்கிட்ட எதையோ எதிர்பார்த்துத் தான் இப்போ என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க!” என்று அழுத்தமாக அவனைப் பார்த்தாள் ராதை.

 

“பரவாயில்லை நீ புத்திசாலி தான்” என்று எழுந்த அபிஷேக், கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

“ரெண்டு வருஷம் முன்னாடி பெங்களுர்ல இருக்குற சர்ஜாபூர் ரோட்டுல ஒரு நாள் நான் கார் ஓட்டிக்கிட்டு இருந்தேன்… நைட் பதினோரு மணி ஆயிடுச்சுன்றதுனால நான் காரை கொஞ்சம் வேகமாக ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ என்னைத் தாண்டி போயிட்டு இருந்த டூ வீலர்ல ரெண்டு பொம்பளைங்க இருந்தாங்க.” 

 

“அதை ஓட்டிக்கிட்டு இருந்தப் பொண்ணு கொஞ்சம் கவனம் இழந்துட்டா போல, அதனோட விளைவு என்னோட கார் அவங்க மேல மோதிடுச்சு. அந்த இடத்திலேயே அதுல பின்னாடி உட்கார்ந்து இருந்த ஒரு லேடி அவங்களுக்கு அம்பது வயசு இருக்கும்… அவங்க தூக்கியெறிப்பட்டு இறந்துட்டாங்க… அந்த நிமிஷத்துல என்னோட இதயம், மூளை எல்லாமே நின்னு போச்சு. நான் அப்படி இருந்தது ஒரு நிமிஷம் தான் அங்கு துடிச்சுட்டு இருந்த இன்னொரு பொண்ணை அவளுக்கு இருபது வயசு போல இருக்கும்… அம்மானு கதறிக்கிட்டே அரை மயக்கத்துல இருந்தா.. அவ முழு மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி நான் அவளை தூக்கி என் காருல போட்டு காரை எடுத்துட்டு ஹாஸ்பிடல் போனேன்.”

 

“அந்தப் பெண்ணுக்கு நான் தான் அவங்களோட இந்த நிலைமைக்குக் காரணம்னு  தெரிஞ்சுருச்சு. கார்ல போற வழியெல்லாம் கத்திக்கிட்டே இருந்தா. என் அம்மாவை கொன்னுட்ட, இப்போ என்னை அனாதை ஆக்கிட்டியே கொலைகாரா? என்னையும் கொன்னுடு என்னை எங்கே கூட்டிட்டுப் போற? னு கத்திக்கிட்டே  இருந்தவ கொஞ்ச நேரத்தில் மயங்கிட்டா.”

 

“அந்தப் பெண்ணை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு என் பிஏகிட்ட 

அவளை கண்காணிக்கச் சொல்விட்டு நானே போலீஸ் ஸ்டேஷன்க்கு  போனேன்.”

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!